வீடில்லை... உலகக் கோப்பை உண்டு!



சாதித்த தமிழக இளைஞன்

சென்னை, மயிலாப்பூரில் லஸ் கார்னர் அருகில் இருக்கும் குடிசைப்பகுதி பி.எம். நகர். ஒரு தண்ணீர் லாரி உள்ளே சென்று வருவதே பெரும்பாடாய் இருக்கும். மிக நெருக்கமான வீடுகள். அழுக்கு பூசி நிற்கும் அரசின் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள். நெதர்லாந்து வரை சென்று கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடி வென்று வந்திருக்கும் வீரர் இந்த ஏரியாவில் வசிக்கிறார் என்றால் யாரும் நம்பமாட்டார்கள்.

இதுவும் கால்பந்து போட்டிதான்... ஆனால் பணமும் பகட்டும் சேர்ந்து விளையாடும் ஃபிஃபா உலகக் கோப்பை அல்ல. உலகம் முழுவதும் வீடின்றி தவிக்கும் மக்களுக்காகவே நடக்கும் ‘ஹோம்லெஸ் உலகக் கோப்பை’ கால்பந்து போட்டி. நகர்ப்புறங்களில் வசிக்கும் வீடற்ற ஏழைகளின் நிலையை உலகுக்கு உணர்த்தி,

எல்லோருக்கும் வீடு கிடைப்பதற்கான முயற்சிகளைச் செய்யும் போட்டி இது. கடந்த 13 ஆண்டுகளாக இந்தக் கால்பந்து போட்டி நடக்கிறது. இதில் கலந்துகொண்டு இந்தியாவுக்கு ‘ஸ்போர்ட்ஸ் ஜென்’ எனும் கோப்பையையும் பெருமையையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் பி.எம் நகரைச் சேர்ந்த பார்த்திபன்.

சிமென்ட் ஷீட் வேய்ந்த சிறு குடிசைதான் பார்த்திபனின் வீடு. அதை வீடென்று சொல்வது பாவம். மூன்று பேர் தாராளமாக புழங்க முடியாத அளவுக்கு நெருக்கடியான இடம். இதுவும் சொந்த இடமில்லை என்பது சோகம்.பார்த்திபனுக்கு 23 வயது. தனியார் நிறுவனத்தில் வேலை. சமீபத்தில்தான் சுனிதாவை காதல் திருமணம் முடித்திருக்கிறார். அம்மா கண்ணகிக்கு மகனின் சாதனை உயரமெல்லாம் தெரியவில்லை. வெள்ளந்தியாகப் பேசுகிறார்.

‘‘வரிசையா மூணு பொண்ணுங்க. நாலாவதா இவன் பொறந்தான். நாலு பிள்ளைங்கள காப்பாத்தணுமேன்னு அக்கம்பக்க வீடுகள்ல பத்துப் பாத்திரம் தேய்ப்பேன். இவங்க அப்பா கூலி வேலைக்குப் போவாரு. இந்த நெலமைல எங்க மூணாவது பொண்ணு பதினஞ்சு வயசுல கேன்சர்ல இறந்துட்டா. அந்த துக்கம் தாங்காம ஆசிட் குடிச்சுட்டு இவங்க அப்பாவும் போயிட்டாரு.

வாழ்க்கையே இருண்டு போச்சு. குடும்பத்தைக் காப்பாத்த இட்லி கடை போட்டேன். இத வெச்சுதான் ரெண்டு பொண்ணுங்களுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சேன். இவன் விளையாடப் போக ஆரம்பிச்சதும் ‘தினமும் பத்து முட்டை, ஆப்பிள், ரெண்டு டம்ளர் பால், அவிச்ச கொண்டைக்கடலை... இதெல்லாம் சாப்பிடணும்’னு சொல்வான். நமக்கு ஏது வசதி? முடிஞ்ச வரை ரெண்டு முட்டையும் வாழைப்பழமும் வாங்கித் தருவேன்!’’ - வறுமையை விழுங்கியபடி இட்லித் தட்டில் மாவு ஊற்றத் தொடங்குகிறார், பார்த்திபனின் அம்மா கண்ணகி.

‘‘அம்மா, எப்பவும் இப்படித்தான்’’ என்றபடி பார்த்திபன் தொடர்கிறார்... ‘‘எங்க வீட்டுக்குப் பின்னால ஒரு மைதானம் இருக்கு. அதான் எனக்கு எல்லாமே. ஏரியா பசங்க அத்தனை பேரும் ராத்திரி பதினொரு மணி வரைக்கும் அங்கதான் இருப்போம். அங்கதான் கால்பந்து விளையாட்டு எனக்குள்ள பத்திக்கிச்சு. கடந்த அஞ்சு வருஷமா ஒருநாள் கூட ஃபுட்பால் ஆடாம இருந்ததில்ல.

ஒருநாள் ஏ.ஜி.எஸ்.னு ஒரு டீம் எங்க கூட விளையாட வந்துச்சு. அந்த டீமோட கோச் சுப்ரமணியன் சார் நான் விளையாடியதைப் பார்த்து இம்ப்ரஸ் ஆகி, என்னை அவர் கோச்சிங்ல சேர்த்துக்கிட்டார். சென்னையில எங்கே கால்பந்து போட்டி நடந்தாலும் அதில் கலந்துக்க என்னை அவர் அழைச்சிக்கிட்டுப் போவார்.
‘ஒழுங்கா வேலைக்குப் போற வழியப் பாரு’னு சொல்ற அம்மாவைத்தான் பார்த்திருப்பீங்க. ஆனா, எங்கம்மா ஒருநாள் கிரவுண்டுக்குப் போகலன்னா கூட ‘எந்திரி... ஓடு... விளையாடிட்டு வா’ன்னு தொரத்தும். எங்க மாமா, எனக்கு வேண்டிய ஷூ, டிரஸ் எல்லாம் வாங்கித் தருவார். நான் வேலை செய்யிற கம்பெனி, கேட்கும்போதெல்லாம் லீவ் கொடுத்து உதவுது. இப்படிப் பல பேரோட உதவியாலதான் நானும் உற்சாகமா பல போட்டிகள்ல கலந்துக்கிட்டு வர்றேன்.

‘ஸ்லம் சாக்கர்’னு ஒரு என்.ஜி.ஓ அமைப்பு. மயிலாப்பூர்ல அவங்க கிளையை ஆரம்பிச்சாங்க. என்னை மாதிரி குடிசைப் பகுதி பிளேயர்களை ஊக்கப்படுத்துறாங்க. ஒவ்வொரு வருஷமும் பிப்ரவரி மாதம் ராஜீவ் காந்தி நினைவு கால்பந்து தொடரை அவங்க நடத்துவாங்க. இந்த வருஷம் அந்தப் போட்டியில நானும் கலந்துகிட்டேன். அந்தத் தொடர்ல சிறப்பா விளையாடின எட்டு பேர ஹோம்லெஸ் உலகக் கோப்பைக்கு செலக்ட் பண்ணாங்க. தமிழ்நாட்டுல இருந்து நானும் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மணிக்குமாரும் அதில் செலக்ட் ஆனோம்.

இதுல விளையாட எங்களைத் தயார்படுத்தறதுக்காக நெதர்லாந்துல இருந்து கோச் வந்து பல நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். மும்பை போய், அங்கிருந்து நெதர்லாந்து போய், ஆம்ஸ்டர்டாம் நகரத்துல விளையாண்டோம். உலகம் முழுக்க இருந்து 48 டீம் வந்துச்சு. 500 பிளேயர்ஸ். இந்தப் போட்டியில ஹோம்லெஸ் உலகக் கோப்பை, லைஃப்டைம் அச்சீவ்மென்ட் கப், ஸ்போர்ட்ஸ் ஜென் கப்னு மூணு உண்டு.

இதுல மூணாவது கப்பை நம்ம இந்தியா டீம் வின் பண்ணியிருக்கு. உலக அளவுல 32வது இடத்துல நம்ம டீம் இருக்கு. 2007லதான் இந்தியா இதுல கலந்துக்க ஆரம்பிச்சுது. இப்ப நாங்க முக்கிய இடத்துல இருக்கோம். இந்தியாவுக்காக விளையாடி சீக்கிரம் பல கோப்பைகளை கொண்டு வருவோம்!’’ என்கிறார் பார்த்திபன் நம்பிக்கையுடன். காதல் கணவர்  பேசுவதை கண் கொட்டாமல் பார்த்து ரசிக்கிறார் மனைவி சுனிதா!

நெதர்லாந்தில் நடந்த ஹோம்லெஸ் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பார்த்திபனுடன் சேர்ந்து பங்கேற்றவர் மணிக்குமார். உடுமலைப்பேட்டை அருகே இருக்கும் ஜோத்தம்பட்டி கிராமத்து இளைஞர். உடுமலைப்பேட்டை வித்யாசாகர் கல்லூரியில் பி.பி.ஏ முதலாம் ஆண்டு படிக்கிறார். அப்பா பாலதண்டாயுதபாணியும் அம்மா முத்துலட்சுமியும் நெசவுத் தொழிலாளிகள். இவர்களுடையதும் சொந்த வீடில்லாத ஏழைக் குடும்பமே!
      

 - எஸ்.ஆர்.செந்தில்குமார்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்