வெங்காய விலை எப்போது குறையும்?



குடும்பத் தலைவிகளை மீண்டும் கலங்க வைத்திருக்கிறது பெரிய வெங்காயம். சமீப காலம் வரை கிலோ 20 ரூபாய்க்கு விற்றது, திடீரென 100 ரூபாய்க்கு ‘ஜம்ப்’ ஆகி 80 ரூபாயில் நிலை கொண்டிருக்கிறது. தென் மாநிலங்களை விட வட மாநிலங்கள் நிலை குலைந்து நிற்கின்றன. வழக்கமாக, செப்டம்பர், அக்டோபரில் விலை குறைய வேண்டும். மாறாக, நான்கைந்து மடங்கு விலை உயர என்ன காரணம்?

வழக்கம் போலவே, வறட்சி, அதிக மழை, விளைச்சல் குறைவு, பதுக்கல், ஏற்றுமதி என ஆளுக்கொரு காரணம் சொல்கிறார்கள்.  மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் வெங்காயம் விளைகிறது. தமிழகத்தில் தென்காசி உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும் சாகுபடி செய்யப்படுகிறது. நம் 60% தேவையை மகாராஷ்டிராதான் தீர்க்கிறது. 20% கர்நாடகாவும், 15% ஆந்திராவும் தருகின்றன. 5% மட்டுமே உள்ளூர் உற்பத்தி. மகாராஷ்டிராவில் உள்ள லஸ்சேகாவ் நகரில் ஆசியாவிலேயே மிகப்பெரிய வெங்காய சந்தை உள்ளது.

இந்தியாவில் வெங்காய விலையைத் தீர்மானிக்கும் மையமாக இது விளங்குகிறது. ‘‘இந்த சந்தையில் ஊடுருவியுள்ள, வணிகத்துக்குத் தொடர்பில்லாத இடைத்தரகு மாபியாக்கள் மொத்தமாக வெங்காயத்தைக் கொள்முதல் செய்து பதுக்கி செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுத்தி விலையை உயர்த்துகிறார்கள்’’ என்று வியாபாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள். தென்னிந்தியாவில் சின்ன வெங்காயத்தின் பயன்பாடும் கலந்திருக்கிறது. ஆனால், வட மாநிலங்களில் வெங்காயம் இல்லாவிட்டால் இயல்பு வாழ்க்கையே முடங்கிப் போகும். தற்போது அப்படியான நிலை. கொள்ளையர்கள், வெங்காயத்தை இலக்கு வைத்து திருடுகிறார்கள். மக்கள் மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துக் கொள்கிறார்கள். மார்க்கெட்டில் ‘வெங்காயம் ஸ்டாக் இல்லை’ என்று போர்டு வைக்கிறார்கள்.



கடந்த 1 மாதமாகவே வெங்காயத்தின் விலை ஏறுமுகமாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு வாரத்தில் திடீரென 100 ரூபாய்க்கு மேல் ஏறியதை யாரும் எதிர்பார்க்கவில்லை. பெரிய வெங்காயம் விலை ஏறிவிட்டதால்  மக்கள் கூடுதலாக சின்ன வெங்காயம் வாங்கத் தொடங்கினர்.  இப்போது இதன் விற்பனை 3 மடங்கு கூடிவிட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.  கடந்த வாரத்தின் தொடக்கத்தில், பெரிய வெங்காயத்துக்கு ஏற்பட்ட  தட்டுப்பாட்டால் சின்ன வெங்காயமும் கிலோ 75 ரூபாய் வரை ஏறியது. தற்போது  உள்ளூர் அறுவடை தொடங்கி சரக்கு வரத்து அதிகமாகி விட்டதால் விலை சரியத் தொடங்கியிருக்கிறது. புதன்கிழமை  நிலவரப்படி கிலோ 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  

‘‘லஸ்சேகாவ் சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு 30% குறைந்ததே விலை உயர்வுக்குக் காரணம்’’ என்று விவசாய வளர்ச்சி மற்றும் ஊரக மாற்று மையம் தெரிவிக்கிறது. புதன்கிழமை நிலவரப்படி அச்சந்தையில் கொள்முதல் விலை கிலோ 55 ரூபாயாக இருந்தது. போக்குவரத்து, இடைத்தரகு, மொத்த விற்பனையைக் கடந்து சில்லறை விற்பனையில் 80 முதல் 90 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள்.

‘‘தமிழகத்துக்கு தினமும் 220 லாரிகளில் வெங்காயம் வரும். மகாராஷ்டிராவில் இருந்து வரும் வெங்காயத்தின் அளவு கடந்த ஒரு மாதமாகவே படிப்படியாகக் குறைந்து வந்தது. ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் வெங்காயத்தை வைத்து வியாபாரிகள் ஈடுகட்டினார்கள். மோசமான வானிலை மற்றும் தொடர் மழை காரணமாக இந்த மாநிலங்களிலும் உற்பத்தி நசிந்து வரத்து குறைய, விலை திடீரென உயர்ந்து விட்டது’’ என்கிறார்கள் வியாபாரிகள்.

இதுபற்றி கோயம்பேடு மொத்த வெங்காய வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜான் வல்தரிஸிடம் பேசினோம். ‘‘இந்தியாவின் முக்கிய வெங்காய கேந்திரமான மகாராஷ்டிராவில் உற்பத்தி குறைந்ததுதான் விலை உயர்வுக்கு அடிப்படை. கடும் மழை, தொடர் வறட்சி என கடந்தாண்டு நிலவிய மோசமான வானிலையே இதற்கு முக்கியக் காரணம். இன்னொரு காரணம், ஏராளமான வெங்காய விவசாயிகள் போதிய லாபம் கிடைக்காததால் வேறு சாகுபடிக்கு மாறிவிட்டார்கள். மேலும், அதிக லாபம் கிடைப்பதால் பலர் மொத்தமாக கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்கிறார்கள்.

இதுபோன்ற காரணங்களால் நமக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இப்போது அறுவடை சீசன் தொடங்கியிருக்கிறது. அதை வைத்து ஓரளவுக்கு சமாளிக்கலாம். நவம்பர் மாதம் மகாராஷ்டிராவில் அடுத்தகட்ட அறுவடை தொடங்கி விடும். அப்போது விலை சமநிலைக்கு வர வாய்ப்புண்டு...’’ என்கிறார் அவர். ஆனாலும் இனி வெங்காயம் 40 ரூபாய்க்குக் கீழே இறங்காது என்கிறார்கள். உரிக்கவே தேவையில்லை. வெங்காயம் என்று சொன்னாலே இனி கண்ணீர் வரும் போலிருக்கிறது.   

வெங்காயக் கொள்ளை


மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநில காவல்துறைக்கு பெரும் தலைவலியை உருவாக்கியிருக்கிறது வெங்காயக் கொள்ளை. காய்கறி மண்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் வெங்காய மூட்டைகளை மட்டும் குறி வைத்து கொள்ளையர்கள் அள்ளிச்சென்று விடுகிறார்கள். மகாராஷ்டிராவில் மட்டும் இப்படி 6 வழக்குகள் பதிவாகியுள்ளன. தங்கள் மண்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி வெங்காய மண்டி உரிமையாளர்கள் சங்கம் காவல்துறையைக் கோரியிருக்கிறது. சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிலும், விலை உயரும் காய்கறி மூட்டைகளைக் குறிவைத்து திருடிச் செல்லும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. அண்ைமயில் 5 பேர் கொண்ட ஒரு கும்பலை கையும் களவுமாகப் பிடித்திருக்கிறது காவல்துறை.

ஆட்சியை அசைக்கும் வெங்காயம்

எத்தனையோ காய்கறிகள் இருக்கின்றன. ஆனால், வெங்காயத்தின் விலையேற்றம் அரசின் அடித்தளத்தையே அசைத்து விடுகிறது. மத்தியில் ஜனதா கட்சி ஆட்சி செய்தபோதிலும், டெல்லியில் பி.ஜே.பி. ஆட்சி செய்தபோதும் தேர்தல் முடிவையே நிர்ணயிக்கும் சக்தியாக வெங்காயம் இருந்தது. அதனால் வெங்காயம் விலை உயர்ந்தாலே மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகளில் இறங்கிவிடு கின்றன. இப்போதைய விலையேற்றத்தைத் தொடர்ந்து உடனடியாக வெங்காயத்துக்கான ஏற்றுமதி வரியை உயர்த்தி, வெளிநாடு களுக்கு அனுப்புவதை கட்டுப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு. பெரு நிறுவனங்களுக்கு மத்தியில் ஏற்படும் சச்சரவுகளைத் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்திய போட்டி ஆணையம் (Competition Commission of India) மகாராஷ்டிர வெங்காய சந்தையில் விலை உயர்வு பற்றி விசாரணை நடத்தி
யிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து 10,000 டன் வெங்காயம் இறக்குமதி செய்வதற்கான ஆயத்தங்களும் நடந்து வருகின்றன.

- வெ.நீலகண்டன்