விருந்து



-வி.சகிதா முருகன்

‘‘என்னங்க... நேத்து விருந்துக்கு வந்த உங்க ஃபிரெண்டு கணேஷுக்கு ரொம்பத்தான் பந்தா. ஃப்ரைடு ரைஸ், சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ், மட்டன் ஃபிரைன்னு எல்லாமும் அசத்தலா சமைச்சு வச்சேன். மனுஷன் ஒப்புக்கு கொஞ்ச கொஞ்சம் கொறிச்சுட்டு, எல்லாத்தையும் மிச்சம் வச்சிட்டுப் போயிட்டார். ஃபாரின்ல இருந்து வந்ததால பவுசு காட்டுறார் போல!’’ - அலுத்துக் கொண்டாள் பவித்ரா.

‘‘விடுடி... ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி!’’ - பரமேஷ்



மனைவிக்கு பதில் சொன்னானே தவிர இந்த விஷயத்தை மனதில் ஏற்றிக்கொண்டான். அடுத்த நாள் கணேஷை சந்தித்தபோது நேரடியாகவே கேட்டுவிட்டான். கணேஷ் அதற்கு அமைதியாக விளக்கம் தந்தான்...

‘‘பரமேஷ்... சவுதியில தினம் தினம் மட்டன், சிக்கன், ரொட்டின்னு தின்னு தின்னு வெறுத்துப்போய் கிடக்கிறேன் நான். நம்ம ஊருல எங்க போனாலும் ஃபாரின்ல இருந்து வந்தவனை நல்லா கவனிக்கறோம்ங்கற பேர்ல அதே மட்டன், சிக்கன்... போரடிச்சுடுச்சுடா. அதான் கொஞ்சமா சாப்பிட்டேன். தப்பா எடுத்துக்காத! பழையபடி நம்ம கிராமத்து ஸ்டைல்ல பழைய சோறு, சுட்ட கருவாடு, கேப்பை கூழ்... இதெல்லாம்தான் மனசு தேடுது. இதை யாரும் புரிஞ்சுக்கலை’’ என்றான் கணேஷ். அடுத்த நாளே நண்பன் கேட்டபடி விருந்து ஏற்பாடு செய்தான் பரமேஷ்!