ஓட்டம்



-ஐரேனிபுரம் பால்ராசய்யா

இனியா இனியும் பொறுமையாக இருக்கப் போவதில்லை என தீர்மானித்தாள். ஒரே ஜாதி, ஒரே ஊர், இரண்டு குடும்பங்களுக்கும் நல்ல அறிமுகம் என ஒற்றுமைகள் இருந்தும் அவள் காதலிக்கும் சுந்தர் வசதியில் குறைவு என்பதற்காக அவளது வீட்டில் ரெட் சிக்னல்.

‘‘சுந்தர்... பேசாம நாம சென்னைக்கு ஓடிப்போலாம். வீட்டுல எனக்காக முப்பது பவுன் நகை செஞ்சு வச்சிருக்காங்க. ரெண்டு லட்ச ரூபாய் பணமும் பீரோவுல இருக்கு. இதையெல்லாம் எடுத்துக்கிட்டு ராத்திரி 12 மணிக்கு வீட்டை விட்டு வந்துடுறேன். நீ தெரு
முனையில காத்திருக்கணும்... சரியா?’’ - இனியாவின் வார்த்தைகளுக்கு தலையசைத்தான் சுந்தர்.

இரவு பன்னிரண்டு மணிக்கு வாடகைக் காரில் வந்து காத்து நின்றான் சுந்தர். அலைபேசி சிணுங்கியது. ‘‘சுந்தர்... எவ்வளவு தேடியும் நகை வச்சிருந்த பீரோ சாவியைக் கண்டுபிடிக்க முடியல. நகையையும் பணத்தையும் எடுக்க முடியாது போலிருக்கு. நீ தெருமுனைக்கு
வந்துட்டியா? அப்படியே கிளம்பி வந்துடவா?’’ - கேட்டாள் இனியா.



‘‘இல்ல... இன்னொரு நாள் போலாம்!’’ என்று அலைபேசியை துண்டித்தான் சுந்தர். கார் நகர்வதை மாடி ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் இனியா. ‘சுந்தர் நகைக்கும், பணத்துக்கும் ஆசைப்படுபவனா? இல்லை, தன்னை உயிருக்குயிராய் நேசிப்பவனா?’ என்பதற்காக வைத்த டெஸ்ட்டில்  அவனது சுயரூபம் தெரிந்துவிட்டது!