கர்ப்பம்



-ஜெ.கண்ணன்

‘‘நான் கர்ப்பமாயிருக்கேன்!’’ - வார்த்தைகளை மென்று விழுங்கினாள் ரேவதி. அதிர்ச்சியானார் குமார். ‘‘என்னடி இப்படி குண்டைத் தூக்கிப் போடுறே? விஷயம் வெளியே தெரிஞ்சா... முக்கியமா ராதாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு  நினைச்சுப் பார்த்தியா? யாருக்கும் தெரியாம உடனே கர்ப்பத்தைக் கலைச்சிடு!’’ என்றார் குமார் பதற்றத்தோடு!
ரேவதி மேலும் பயத்தோடு தொடர்ந்தாள்...



‘‘காலையில போய் டாக்டரைப் பார்த்துட்டேன். இனிமே கர்ப்பத்தைக் கலைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. வேற வழியில்லாம, ராதாகிட்ட அப்பவே விஷயத்தைச் சொல்லிட்டேன்!’’
ரேவதி பேசி முடிப்பதற்கும் வெளியே அழைப்பு மணி அடிப்பதற்கும் சரியாக இருந்தது.
இருவரும் வாசலுக்கு விரைந்தனர். புயல் போல உள்ளே நுழைந்தாள் ராதா, உற்சாகமாக.  ‘‘பதினெட்டு வருஷம்  கழிச்சு நம்ம வீட்டுக்கு ஒரு தம்பி பாப்பாவோ, தங்கச்சி பாப்பாவோ வரப்போகுது. காலையில காலேஜுக்குப் போகும்போது அம்மா இந்த விஷயத்தைச் சொன்னப்போ நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? கிண்டல் பண்றவங்களைப் பத்தி நமக்கு என்ன கவலை? இரண்டு பேரும் வெட்கப்படறதை நிறுத்திட்டு நிமிர்ந்து என்னைப் பாருங்க!’’ வெட்கத்தில் நெளிந்த பெற்றோரைக் கட்டியணைத்துக் கொண்டாள் ராதா.