நிம்மதி



-கே.ஆனந்தன்

‘‘எவ்வளவோ வசதியான வரன்கள் வந்துச்சு. ஆனா, அதெல்லாம் எங்களுக்குப் பிடிக்கல! எங்க பையன் சுரேந்தருக்கு இந்த விமலாவையே பேசி முடிச்சுடுங்க தரகரே! மற்ற வீடுகள்ல பொண்ணுக்கு அண்ணன், தங்கச்சின்னு கூடப் பிறந்தவங்க இருக்காங்க. பெத்தவங்க காலத்துக்கு அப்புறம் சொத்து மூணு, நாலு பங்கா பிரியும். அதுல பெரிசா ஒண்ணும் கிடைக்காது. ஆனா, இந்த விமலா ஒரே பொண்ணு. எதிர்காலக் கவலை இல்லாம சுரேந்தர் நிம்மதியா வாழலாம்!’’  - மாப்பிள்ளையின் அம்மா, சகோதரிகள் என எல்லோரும் ஒரே குரலில் இதைச் சொல்ல, உடனடியாக பெண் வீட்டுக்கு விரைந்தார் புரோக்கர் பரசுராமன்.



‘‘வாங்க பரசுராமன்.  விமலாவு க்கு வரன் முடிவு பண்ணிட்டோம்.  போன வாரம் பார்த்துட்டுப் போனாரே... மாப்பிள்ளை பேர் கணேஷ்!’’ என்றார் விமலாவின் அப்பா சுந்தரம்.
‘‘அப்போ நேத்து பார்க்க வந்த சுரேந்தர்?’’ - இழுத்தார் பரசுராமன்.
‘‘அவங்க வேணாம் தரகரே... மாமியார் மட்டுமில்லாம மாப்பிள்ளை கூடப் பொறந்தவங்க அக்கா, தங்கைன்னு ரெண்டு பேர் இருக்காங்க. கணேஷுக்கோ அம்மாகூட இறந்துட்டாங்க... ஒரே பையன். போற இடத்துல நாத்தனார் சண்டை, மாமியார் கொடுமை இல்லாம என் பொண்ணு நிம்மதியா வாழலாம் இல்லையா?’’ என்றார் சுந்தரம்.
‘இங்கேயும் கணக்கா’ என மனதுக்குள் சிரித்துக்கொண்டு விடைபெற்றார் பரசுராமன்.