நயன்தாராவிடம் தொடங்கும் அமானுஷ்யம்



சூப்பர் நேச்சுரல் அமானுஷ்ய படம்னு ‘மாயா’வைச் சொல்லலாம். பேய்ப் படம்னு சுருக்கிச் சொல்லிட முடியாது. இந்த சீஸனுக்கு முன்பே எழுதியிருந்த கதை இது. இப்ப எங்கே பார்த்தாலும் ஆவி காமெடிதான் இருக்கிறது. ‘ஈரம்’ படத்தை பார்த்திருப்பீங்க இல்லையா, அந்த அமானுஷ்யமும் எமோஷனலும்தான் இந்தப் படத்தில் இருக்கும்!’’ - தெளிவாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் அஸ்வின். குறும்படங்களின் பிரபலத்தில் திரைக்கு வந்தவர்.

‘‘யாரிடமும் உதவியாளராக பணியாற்றியதில்லை. ஒருசிலருக்கே இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது... எப்படி பயன்படுத்திக் கொண்டீர்கள்?’’

‘‘ஒரு கதைக்காக சில ஆரம்பப் புள்ளிகள் கிடைக்கும். அது சினிமாவாக மாறுவதற்கு அதற்கான பின்னல்கள் சரிவர அமைய வேண்டும். ரசிகர்கள் கதைக்குள் பயணிக்கிறபோது எதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும், கதையில் அவர்களை இழுத்து வைப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றியும்தான் யோசிப்பேன். பி.டெக் படித்து சினிமாவுக்குள் வர நினைத்தபோது யாரும் என்னை நம்பவில்லை. என் கதையின் ஒரு சிறு பகுதியை குறும்படமாக எடுத்துக் காண்பித்தபோது எஸ்.ஆர்.பிரபு மற்றும் அவரது நண்பர்கள் என்னை நம்பினார்கள். அதற்கு நான் நியாயத்தைத் தந்திருக்கிறேன் என்பதுதான் என் மகிழ்ச்சி.
 


வெறும் பேய்ப் படமாக இல்லாமல், இதில் பலதரப்பட்ட உணர்வுகளையும் கொண்டு வந்து காட்ட முடிந்தது. கஷ்டப்படுகிற கேரக்டர்களின் எமோஷனலும் இந்தக் கதையின் முக்கிய அம்சம். பயம், த்ரில், திகில், இசை, பயன், கேரக்டர்களின் ஃபீலிங்ஸ் என நிறைய இடங்கள் இருக்கு. உணர்வுபூர்வமான விஷயங்களும் உள்ளடங்கி இருப்பதால்தான் இது வித்தியாசமான அமானுஷ்ய படம்னு சொல்லி வைக்கிறேன்.

படத்தை எந்த முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் நான் சமரசத்திற்கு உள்ளாகவே இல்லை. அதற்கு என் தயாரிப்பாளர்களிலிருந்து நடிகர்கள் வரைக்கும் ஒத்துழைப்பு தந்ததுதான் எனக்கான பெரும் மகிழ்ச்சி. நிஜத்தை விட புனைவுதான் கவனமாகச் செய்யப்பட வேண்டும். பார்வையாளர்களோடு இந்தப் படத்தில் நெருங்கியிருப்பேன் என நம்புகிறேன். கதையோடு, வாழ்க்கையையும், நிகழ்ச்சிகளையும் சரியானபடி சேர்த்தால் அங்கே நம்மை எப்படிப் பிடிக்காமல் போகும்? கதைதான் உயிரோட்டம். நம்பகத்தன்மைதான் அதில் பெரும் விஷயம். இப்படி இல்லாமல் ஒன்றிரண்டு எங்கேயாவது தப்பிக்கலாம்!’’



‘‘நயன்தாரா இந்தப் படத்தில் நடிக்க முன்வந்ததும் படம் பெரிதாக மாறிவிட்டது...’’

‘‘உண்மைதான். முதலில் பட்ஜெட் சிறியதாகத் தான் அமைந்திருந்தது. கதை தந்த துணிவு தயாரிப்பாளர்களை வேறு விதமாகத் தூண்டியது. நயன்தாரா இதில் நடித்தால் இன்னும் படத்தை பெரிய அளவில் கொண்டு போக முடியும் என நம்பினார்கள். என்னிடமே அவர்கள் அதைப் பகிர்ந்தபோது நான் ‘ஆஹா’ என்றேன். நயன்தாராவிடம் கேரவனில் வைத்து கதை சொன்னபோது அவரது முகத்தில் பல்வேறு மாற்றங்களை என்னால் உணர முடிந்தது. ‘நான் ஒரு நல்ல அமானுஷ்யப் படத்தில் இருந்ததில்லை என்பதை இந்தப் படத்திற்குப் பிறகு தவிர்க்கலாம்’ என்றார். இப்போது ‘மாயா’வின் முதல் பிரதியைப் பார்த்தபோது அவ்வளவு சந்தோஷப்பட்டார்.

‘சொன்னதை அப்படியே திரையில் கொண்டு வருவது எளிதல்ல என்பதை என் சினிமா அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். ஆனால், இதில் அப்படியே வந்திருக்கிறது’ என்றார். எனக்கான பெரிய உத்வேகம் அவரது வார்த்தைகளில் கிடைத்தது. இதில் ஒரு வீட்டிற்கும், காருக்கும் கூட கேரக்டர்களாக மாறும் சூழ்நிலை வந்திருக்கிறது. நாம் நமக்கு அருகில் நிஜமாக நடக்கும் ஒன்றில் அதிக கவனம் செலுத்தாமல் போய்விடுவோம். ஆனால், இருட்டறையில் பலரோடு சேர்ந்து பார்க்கும்போது அந்தச் சம்பவமே வேறுவித அனுபவத்தைக் கொடுப்பது நிஜம். ஒரு நொடியில் 24 பொய்களைச் சொல்கிற சினிமாவில் யதார்த்தத்தைக் காண்பிக்கிறபோது அது உண்மையாகிறது. இந்தக் கதைக்குள் வாருங்கள்... இதுவரை இல்லாத புது உணர்வுகளை நீங்கள் பெறலாம்!’’

‘‘ஹீரோ?’’

‘‘என்னுடைய கதையோட்டத்தில் ஹீரோ, ஹீரோயின் என குறிப்பிட்டு யாரும் இல்லை. நிறைய சம்பவங்களின் பின்னணியில் ஆரம்ப முடிச்சு நயன்தாராவிடமிருந்து தொடங்குகிறது. ஆரிக்கு அருமையான கேரக்டர். ‘நெடுஞ்சாலை’யில் அவரை யாரும் தவற விட்டிருக்க முடியாது. ‘மாயா’விற்கு சத்யாதான் கேமராமேன். நான் காலையில் படப்பிடிப்புத் தளத்திற்கு வரும்போது இந்தக் காட்சி இவ்விதம்தான் படமாகும் என மனதில் கணக்குப் போட்டிருப்பேன். ஆனால், சத்யா அதற்கு கூடுதல் சுவாரஸ்யம், அழகு, முக்கியத்துவம் வரும்படி ஏதோ ஒரு மேஜிக் செய்திருப்பார். திகில் படத்திற்கு பின்னணி அமைப்பது கடினமான பணி. மற்ற வகை படங்களை விட, இதில் உழைப்பு அதிகம் அமைய வேண்டும். புதியவரான ரான் யோகான் இதில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒரு அமானுஷ்யப் படத்துக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் உங்களுக்கு ‘மாயா’ தரும் என்பதை என்னால் உறுதியளிக்க முடியும்!’’

- நா.கதிர்வேலன்