தினம் ஒரு கோடி ரூபாயை குப்பையில் கொட்டுகிறார்கள்



அலட்சிய அரசு அவதியில் மக்கள்

உங்கள் வீட்டிலிருந்து தினமும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை எடுத்துப் போய் குப்பையில் கொட்டுவீர்களா? ‘இதென்ன பைத்தியக்காரத்தனம்’ என நீங்கள் கேட்டால், இந்த விஷயத்தைத்தான் சென்னை மாநகராட்சி தினம் தினம் செய்கிறது.    உலகில் மிகச்சிறந்த தட்பவெப்பத்தையும்,  நிலப்பரப்பையும் கொண்ட நகரம் சென்னை. இரண்டு ஆறுகள், இரண்டு கால்வாய்கள், அழகிய காடுகள்,  சதுப்பு நிலங்கள், மிக நீளக் கடற்கரை என இயற்கை பார்த்துப் பார்த்து வனப்பு  செய்துவைத்த நகரம். ‘சரிவர பராமரிக்காமல் மாநகராட்சி நிர்வாகம் இதை  நரகமாக்கிவிட்டது’ என்று குற்றம் சாட்டுகிறார்கள் மக்கள்!

சென்னையின் மக்கள்தொகை 90 லட்சம் என்கிறார்கள். ஒரு மனிதர் நாளொன்றுக்கு உருவாக்கும் குப்பையின் அளவு 700 கிராம்.  மாநகராட்சி விதிப்படி தெருக்களில் 500 மீட்டருக்கு 1 துப்புரவுத் தொழிலாளர், 250 வீட்டுக்கு ஒரு தொழிலாளி குப்பை சேகரிக்க வேண்டும். ஆனால் நிஜத்தில் இங்கே என்ன நடக்கிறது?

ஏராளமான தெருக்கள், குடியிருப்புகள் முளைத்து விட்டன. இப்போதிருக்கும் நிலையில், சென்னையை ஓரளவுக்கேனும் சுத்தமாக பராமரிக்க குறைந்தது 30,000 தொழிலாளர்கள் தேவை. ஆனால் மாநகராட்சியில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறும் 11,184. இது 1978 மக்கள்தொகை அடிப்படையில் நியமிக்கப்பட்ட எண்ணிக்கை. இன்றுவரை அதுவே தொடர்கிறது. அதிலும் இப்போது பணியில் இருப்பவர்கள் வெறும் 8662 பேர்தான். 2522 இடங்கள் காலி. கடந்த 4 ஆண்டு களில் காலியிடங்கள் நிரப்பப்
படவே இல்லை.



 ‘‘துப்புரவுப் பணிக்கு போதிய ஊழியர்களை நியமிக்கவேண்டும் என்று பல மாதங்களாகப் போராடி வருகிறோம். ஆனால் மேயரும் அதிகாரிகளும் அதைக் காது கொடுத்ேத கேட்பதில்லை. ஸ்வர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் தற்காலிக ஊழியர்களைத் தேர்வு செய்கிறார்கள். ஒப்பந்த அடிப்படையிலும் ஊழியர்கள் எடுக்கப்படுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் கவுன்சிலர்கள் மூலமாகவே உள்ளே வருகிறார்கள். இதில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கின்றன...’’ என்று குற்றம் சாட்டுகிறார் சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் தலைவர் சுந்தர்ராஜன்.

‘‘துப்புரவுத் தொழிலாளிக்கு நாளொன்றுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச கூலி ரூ.295. ஸ்வர்ண ஜெயந்தி திட்டத்தில் 200 ரூபாய்தான் தருகிறார்கள். மீதப்பணம் யாருக்குப் போகிறதென்று தெரியவில்லை. காலை 6 மணி முதல் 2.30 வரை தொழிலாளி பணியில் இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான ஏரியாக்களில் லிஸ்ட்டில் பெயர் இருக்கும். ஆனால் ஃபீல்டில் தொழிலாளி இருக்க மாட்டார். இல்லாத ஆட்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்கிறார்கள். சில பகுதிகளில் பணிப் பதிவேட்டில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு கிளம்பி விடுவார்கள். கண்காணிக்க வேண்டியவர்கள் கவனிக்கப்பட்டு விடுகிறார்கள். இதுபற்றி ஆதாரத்தோடு புகார் செய்தோம். நடவடிக்கை இல்லை.

ஒரு திட்டம் வெற்றி பெறாது என்று தெரிந்தே அதை செயல்படுத்துவதுதான் மாநகராட்சியின் ஸ்டைலாக இருக்கிறது. ‘குப்பை தொகுப்பு மையங்கள்’ போல பல உதாரணங்களைச் சொல்லலாம்.  நவீன குப்பை மாற்று நிலையங்கள் என்ற பெயரில் கட்டிய பல கட்டிடங்கள் பயனற்று கிடக்கின்றன. டெண்டர் விடுவதுதான் ஒரே அஜெண்டா. வருகிற வெளிநாட்டு நிறுவனங்கள் இவர்களிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிவிடுகின்றன.



மூன்று மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை ஒரு தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த நிறுவனத்துக்கு ஒரு டன் குப்பையை சேகரித்து கொண்டுபோய் கொட்டினால் 1200 ரூபாய் தருகிறது மாநகராட்சி. இந்நிறுவனம் பற்றி ஏகப்பட்ட புகார்கள் உண்டு. விளக்கம் கேட்டு நோட்டீஸ் கூட அனுப்பினார்கள். ஆனால் நடவடிக்கை இல்லை. மாநகராட்சியில் குப்பை அள்ளும் காம்ப்பாக்டர் வாகனங்கள் 100 இருக்கின்றன. அவற்றை தனியார் கையில் தந்திருக்கிறது மாநகராட்சி. டீசலை மாநகராட்சியே தரும். வாகனத்துக்கு டிரைவர் போட வேண்டும். பராமரிக்க வேண்டும். இதற்காக தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி தரும் தொகை, ஒரு வாகனத்துக்கு மாதம் 1.8 லட்ச ரூபாய். மாநகராட்சியில் ஏராளமான டிரைவர்கள் சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள். ஆனால் தனியாரிடம் கான்ட்ராக்ட் விடுகிறார்கள்.
 
குப்பையை எடை போடுவதில் தொடங்கி டீசல் பிடிப்பது, புல்டோசர் வாடகைக்கு எடுப்பது வரை எல்லாவற்றிலும் முறைகேடுகள். ஆனால் சகதியையும், சாக்கடையையும் அள்ளும் துப்புரவுத் தொழிலாளிக்கு கைக்கு கிளவுஸ் கூட இல்லை. கவுன்சிலர்கள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் என பலருக்கு குப்பை என்பது பொன்முட்டையிடும் வாத்தாக இருக்கிறது...’’ என்கிறார் சுந்தர்ராஜன்.

தகவல் உரிமைச் சட்ட ஆர்வலரும், சமூக செயற்பாட்டாளருமான தர்மேஷ், சுந்தர்ராஜனின் குரலையே எதிரொலிக்கிறார். ‘‘சென்னையின் வளர்ச்சியை கணக்கிடும்போது இன்னும் ஐந்து ஆண்டுகளில் குப்பையின் அளவு இரு மடங்காகக் கூட ஆகலாம். தகுந்த திட்டங்களைத் தீட்டாவிட்டால் இது மிகப்பெரிய சிக்கலாக இருக்கும். குப்பை விவகாரம் தனி பிரச்னையல்ல.



நகரின் சுகாதாரம், குடிநீர், வாழ்வாதாரம் சார்ந்த விவகாரம். சுயலாப நோக்கம் இல்லாமல் இந்த விவகாரத்தை அணுக வேண்டும். குப்பை சேகரிக்கும் இடம் தொடங்கி, கொட்டும் இடம் வரைக்கும் எல்லா இடத்திலும் தவறுகள் நடக்கின்றன. பொறுப்பின்மை இருக்கிறது. கண்காணிப்பு ஏற்பாடுகள் இல்லை. கேள்வி கேட்க வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்மூடி, வாய்பொத்தி அமர்ந்திருக்கிறது.  
மக்களும் மாற்றத்துக்குத் தயாராக வேண்டும். குப்பை நிர்வாகம் ஒருங்கிணைந்த பணி. குப்பை உற்பத்தியைக் குறைக்க வேண்டும். வாய்க்கால்களிலும், நீர்நிலைகளிலும் கொட்டுவதை நிறுத்த வேண்டும். மற்றவர்கள் கொட்டினால் கேள்வி கேட்க வேண்டும். குப்பை பிரச்னை என்பது நம் சந்ததிகளின் பிரச்னை என்பதை மனதில் கொள்ள வேண்டும்...’’ என்கிறார் தர்மேஷ்.

மா  நகராட்சி கணக்குப்படி சென்னையில் ஒருநாள் சேரும் குப்பையின் அளவு 4500 டன். இதில் உணவுக்கழிவுகள் -7%, தாவரக்கழிவுகள் -32%, மரக்கழிவுகள் -7%, பிளாஸ்டிக் கழிவுகள்- 6%, தொழிற்சாலைக் கழிவுகள்- 1%, இரும்பு மற்றும் உலோகங்கள்- 0.5%, துணிகள் 3%, காகிதங்கள் 7%, ரப்பர் மற்றும் தோல்பொருட்கள் 1.5%, கற்கூளங்கள் 35%. இவற்றின் மார்க்கெட் மதிப்பு...

பிளாஸ்டிக் - 270 டன், கிலோ 15 ரூபாய் வீதம்    -    40.5 லட்சம்
இரும்பு - 22.5 டன், கிலோ 20 ரூபாய் வீதம்    -    4.5 லட்சம்
துணிகள் - 180 டன், கிலோ 5 ரூபாய் வீதம்    -    9 லட்சம்  
காகிதங்கள் - 315 டன், கிலோ 8 ரூபாய் வீதம்    -    25.20 லட்சம்

உணவுக்கழிவு (315 டன்), தாவரக்கழிவு 32% (1440 டன்), மரக்கழிவு 7% (315 டன்) இவற்றை மக்க வைத்து உரமாக்கலாம். 90 நாட்களில் பாதிக்குப் பாதி இயற்கை உரம் கிடைக்கும். மொத்தமுள்ள 2070 டன் கழிவை மக்க வைத்தால் 1035 டன் இயற்கை உரம் கிடைக்கும். இயற்கை உரத்தின் இப்போதைய மார்க்கெட் விலை கிலோ ரூ.7.50. இதை சுமார் 3 ரூபாய்க்கு விற்றால் கூட     - 3.10 லட்சம்    மொத்தம்    - 82.3 லட்சம்  கற்கூளங்களை சாலை போட பயன்படுத்தலாம். அல்லது கட்டுமான நிறுவனங்களுக்கு விற்கலாம். ரப்பர் மற்றும் தோல் பொருட்களையும் வாங்க பல நிறுவனங்கள் காத்திருக்கின்றன. எல்லாம் சேர்த்து தினமும் 1 கோடி ரூபாயை கொடுங்கையூரிலும் பள்ளிக்கரணையிலும் கொட்டுகிறார்கள். இதனால் நீர், நிலம், காற்று பாழாகிறது. அதனால் ஏற்படும் சுகாதாரப் பிரச்னைகளுக்கு பல கோடிகள் செலவு செய்ய வேண்டியுள்ளது.

இதில் மக்களும் தங்களின் பொறுப்பை உணர வேண்டும். சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் 40% மக்கள் குப்பையை பொறுப்பில்லாமல் கையாள்வதாகத் தெரிய வந்துள்ளது. மழைநீர் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள், ஆறுகளில் ஏற்படும் அடைப்புகளுக்கு குப்பைகளே காரணம். ஒருநாளைக்கு 86,400 வினாடிகள் உண்டு. அதில் 30 வினாடிகள் ஒதுக்கினால் போதும், குப்பைகளைத் தரம் பிரிக்க. உங்களுக்குக் குப்பையாகத் தெரியும் பொருள் இன்னொருவருக்கு மூலப்பொருளாக இருக்கலாம். காய்கறிக் கழிவுகள் தவிர்த்து பிற கழிவுகளில் பெரும்பாலானவற்றை காசாக்க முடியும். சில தன்னார்வ நிறுவனங்கள் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவுகின்றன.

www.kabadiwallaconnect.in மூன்று இளைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த இணையதளத்தில் சென்னை முழுவதும் உள்ள காயலான் கடைக்காரர்கள் பற்றிய தகவல் தொகுப்பு இருக்கிறது. மேப்பில் உங்கள் பகுதியை க்ளிக் செய்தால் அருகாமையில் இருக்கும் காயலான் கடைக்காரரின் மொபைல் நம்பர், முகவரி வரும். அவரை அழைத்து கழிவுகளில் விற்கத் தகுந்தவற்றை தரலாம். அழைத்தால், மக்கும் குப்பைகளை எருவாக்குவது, மாடித்தோட்டம் போடுவது பற்றி உங்கள் பகுதிக்கே வந்து பயிற்சியும் தருகிறார்கள். தொடர்பு எண்: 9884467608
http://paperman.in உங்கள் வீட்டில் சேரும் மறுசுழற்சி செய்யத் தகுந்த கழிவுகள், ஒரு பெண் குழந்தையின் கல்விக்கோ, ஒரு ஏழை நோயாளியின் மருத்துவத்திற்கோ உதவலாம். மேத்யூ ஜோஸ் என்ற இளைஞரால் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. இந்த இணையம் வழியாகவோ, 044-33185111 என்ற தொலைபேசி எண்ணிலோ அழைத்தால் உங்கள் பகுதியில் இருக்கும் காயலான்கடைக்காரர் வந்து பொருட்களைப் பெற்றுச்செல்வார். அதற்குரிய பணம் ‘பேப்பர்மேன்’ நிறுவனம் மூலம் நீங்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குச் செல்லும். அது யாருக்கு உதவியது என்ற செய்தி உங்களுக்கு வந்துசேரும்.

கோயம்பேடு மார்க்கெட் ஆசியாவிலேயே மிகப்பெரியது. இங்கு தினமும் 130 டன் கழிவுகள் சேர்கின்றன. இதில் 129 டன் காய்கனி மற்றும் மலர்க் கழிவுகள். இவற்றை இங்கேயே ஒரு இடம் ஒதுக்கி எருவாக்கலாம். அல்லது, மின்சாரம் தயாரிக்கலாம். அருகிலேயே கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் இருக்கிறது. இங்கு சேரும் சகதியை தெருக்களில் ஆங்காங்கே கொட்டிக் குவிக்கிறார்கள். குப்பையில் அந்த சகதியைச் சேர்த்தால் மிகச்சிறந்த இயற்கை உரம் கிடைக்கும் என்கிறார்கள். இது தொடர்பாக எக்ஸ்னோரா உள்பட பல நிறுவனங்கள் தந்த திட்ட அறிக்கையை குப்பையில் போட்டுவிட்டு, மொத்தத்தையும் குப்பைமேடுகளில் கொண்டு போய்க் கொட்டுகிறார்கள்.

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்