கவிதைக்காரர்கள் வீதி



பெ.பாண்டியன்

*  பாப்பாவுக்கு சோறூட்ட
    காட்டும் வேடிக்கையில்
    திரும்பும் அம்மாவின் பால்யத்தை
    ரசித்திருக்கிறீர்களா?

*   ஜக்கம்மாவிடம்
    கேட்பதேயில்லை
    எந்த குடுகுடுப்பைக்காரனும்
    தன் எதிர்காலத்தை!

*  எல்லோருக்கும்
   பிடித்த உணவு
   மிச்சமிருப்பதில்லை
   எப்போதும் அம்மாவுக்கு!

*  அழிந்த வயல்களில்
    நிசப்தமாய் ஒலிக்கிறது
    நடவுப் பாட்டு!



*  பூ விற்கும்
   கிழவியின்
   புன்னகையில்தான்
   எத்தனை பூக்கள்!

*  பேரம் பேசி வாங்கப்பட்ட
    நடைபாதைக் கடையொன்றின்
    பழங்களில்
    கண்ணீர் சுவை!

*  களைப்பாய்
   வந்தமர்ந்த பறவைக்கு
   பெருமரத்தின் இலைகளே
   விசிறியாகி விடுகின்றன!

*  பூட்டிய வீட்டினுள்ளே
   நிசப்தம்
   குடியிருக்கிறது!