ஐந்தும் மூன்றும் ஒன்பது



இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியம்: ஸ்யாம்


‘‘பழனி மலையைத் தொட்டு ஜோசப் சந்திரன் சொன்ன கருத்துக்கள் எந்த அளவிற்கு சரியானவை என்று ஒரு கேள்வி எனக்குள் எழும்பியது. குறிப்பாக செவ்வாயின் கதிர்வீச்சு அங்கே படுகிறது என்பதை எதை வைத்து அறிவது? விண்ணில் ஒரு பந்து போல மிதந்தபடி திரியும் ஒரு கோளின் கதிர்வீச்சு, அதன் சுற்றுப் பாதையைக் கடந்து பூமி மேல் படுகிறது என்கிற கருத்தை எதைக் கொண்டு ஊர்ஜிதப்படுத்திக்கொள்வது என்று நான் எனக்குள் நிறைய துணைக் கேள்விகளின் பிடியில் சிக்கினேன். அது அவருக்கும் புரிந்தது.

‘கணபதி சுப்ரமணியன்! என் கருத்தை நம்ப நீங்கள் அதிக சிரமப்படத் தேவையேயில்லை. ஒரு நிலையில் இல்லாமல்  மாறிக்கொண்டே இருக்கும் நம் மனமே பெரிய சாட்சி. நம் உடம்பின் வழியே நுழையும் கதிர்வீச்சுகளால் மனதை கோள்கள் பாதிக்கின்றன. இதனால்தான் நம் எண்ணங்களில் பெரிதும் மாற்றங்கள் நிகழ்கின்றன. ஜோதிட சாஸ்திரமும் இதையே வலியுறுத்துகிறது. விண்ணில் ஆயிரக்கணக்கான கோள்களும் நட்சத்திரங்களும் இருந்தாலும், பூமியைப் பாதிக்கும் விதத்தில் இருப்பவை ஏழு கோள்கள்தான்!

இதை நான் தொடக்கத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் நடுநிலையோடு சிந்தித்து பல ஆராய்ச்சிகள் செய்து ஒப்புக்கொண்டேன். அப்போது நான் சற்று வெட்கப்படவும் செய்தேன். நான் ஒப்புக்கொண்டது மிகத் தாமதமாகவே... முன்னதாய் இது நிகழ்ந்திருந்தால் நான் என் ஆராய்ச்சியில் எவ்வளவோ சாதித்திருப்பேன் என்பதுதான் நான் வெட்கப்பட காரணம்.

அடுத்து இன்னொரு விஷயமும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் நம்மையுமறியாமல் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு ஒரு முக்கியத்துவத்தைத் தந்திருக்கிறோம். குறிப்பாக நம்மை யாரும் கேலியாகப் பார்த்துவிடவோ பேசிவிடவோ கூடாது என்பதில் நாம் மிகவே அக்கறையாக உள்ளோம். அதனாலேயே நம் போக்கில் போய் ஒரு காரியத்தைச் செய்வதில்லை.



‘நம் போன்ற ஆய்வாளர்கள் இந்த மூன்றாம் மனிதர்களால் மிகவே கட்டப்பட்டுள்ளோம். ஆய்வு புரிபவனுக்கு பாரபட்சம் கூடாது. உண்மை மட்டுமே நிதர்சனமானது’ என்று ஒரு நீண்ட விளக்கமும் அளித்தார்.

அதை நானும் ஏற்றுக்கொண்டேன். அப்படியே ‘கஞ்சமலை தங்கம் உள்ள பகுதியை என்ன செய்யலாம்?’ என்று திரும்பக் கேட்டேன்.
‘ஏன்... அந்த  தங்கம் மதிப்பு மிக்கதாக உங்களைக் கருத வைத்துக்கொண்டே இருக்கிறதா?’ என்று அவர் திருப்பிக் கேட்டார்.
‘அது மதிப்பு மிக்கதுதானே. ஒரு கிராம் தங்கம் இன்று 300 ரூபாய் ஆயிற்றே’ என்றேன்.

‘இது 3000 ரூபாய் வரை கூட போகும்... போய்விட்டுப் போகட்டும். ஆனால் நம்மால் மட்டுமல்ல. யாராலும் அங்கே எதையும் செய்ய முடியாது. ஒருவேளை அரசாங்கத்தின் அதிகாரமும் செல்வாக்கும் அங்கே ஒரு சுரங்கத்தைத் தோண்ட உத்தரவிட்டாலும் அதனால் பெரிதாக பயன் ஏற்பட்டுவிடாது. இந்த உலகில் ஒவ்வொரு கண்டத்திலும் ஒரு புதிர் போன்ற மர்மம் உள்ளது. அதை விஞ்ஞான உலகமும் பெரிதாக ஆய்வு செய்ய நுழையாமல் அப்படியே விட்டுவிட்டது. ஏன் தெரியுமா?’ என்று கேட்டார். அவரின் பதிலைக் கேட்க நானும் தயாரானேன்.’’
- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...

‘பதிமூன்று முறை பிராணாயாமம் செய்து முட்டி மடக்கி தரை மீதமர்ந்து’ என்கிற ஏட்டின் கட்டளையை செயல்படுத்துவதா வேண்டாமா என்று இருவரிடையேயும் ஒரு தயக்கம் உருவாகியது.
‘‘என்ன இது... எதுக்கு பிராணாயாமம் - அதுவும் பதிமூணு தடவை...’’ என்றான் வர்ஷன்.
‘‘முதல்ல உனக்கு பிராணாயாமம்னா என்னன்னு தெரியுமாடா?’’ - என்றாள் ப்ரியா.
‘‘மூச்சை உள்ளே இழுத்து விடறதுதானே?’’
‘‘அதைத்தான் நாம ஒவ்வொரு நொடியும் செய்துக்கிட்டு இருக்கோமே..?’’
‘‘அப்ப பிராணாயாமம்னா மூச்சை அடக்கி தம் கட்றதா?’’
‘‘உனக்குத் தெரியல... அதை ஒத்துக்க தைரியமும் இல்ல! விடு... நான் வள்ளுவர்கிட்டயே கேட்கறேன்!’’
- அடுத்த நொடி கைபேசி ஆஸ்பத்திரியில் இருந்த வள்ளுவரை அள்ளியது.
‘‘அய்யா...’’
‘‘சொல்லும்மா...’’
‘‘பிராணாயாமம்னா என்னங்கய்யா?’’

‘‘அது ஒரு மூச்சுப் பயிற்சிம்மா... இரண்டு மூக்குத் துவாரங்கள்ல இடது துவாரம் வழியா காற்றை நெஞ்சில இழுத்து நிரப்பி, ஒரு பத்து பதினைஞ்சு செகண்ட் வெளிய விடாம நுரையீரலுக்குள்ளேயே காற்றை நிறுத்தி வெச்சு பிறகு வலது துவாரம் வழியா வெளிய விடணும். உள்ள போன காத்து இப்ப ஆக்சிஜனை இழந்து கரியமில வாயுவா வெளிய வரும். இப்படி வெளிய போகும் காற்று அசுத்தக் காற்று.’’
‘‘இது போதும்யா... இங்க பதிமூணு முறை பிராணாயாமம் செய்துட்டு அப்புறமா முட்டி மடக்கி தரை மேல உட்கார்ந்து ஏட்டைத் தொடர சொல்லியிருக்குய்யா ஒரு குறிப்பு...’’

‘‘அப்படியே செய்யுங்க... தரை மேல நிக்கும்போது பாதம் பூமியோட தொடர்புல இருக்கும். ஒவ்வொரு இடத்துக்கு ஒவ்வொருவித வாஸ்து பலம் உண்டு. அந்த சக்தி பாதம் வழியா உடம்புல ஏறும். முட்டி போட்டு அமரும்போது அதுக்கு இடமில்லாமப் போயிடுது இல்லையா? அதனாலதான் முட்டி போடச் சொல்லியிருக்கு. பிராணாயாமம் பதிமூணு முறைன்னும்போது குறிப்பிட்ட அளவு ஆக்சிஜன் - அதாவது உயிர்க்காற்றுன்னு நாங்க சொல்ற ஜீவக்காற்றோட சக்தி - ரத்தத்துல  எதிரொலிச்சு யோசிக்கற சக்தி கூர்மையா மாறும்!’’

‘‘ஓ... இதுக்குள்ள இப்படி ஒரு நுட்பமா? போகட்டும்... அது என்ன பதிமூணுங்கற அளவு?’’
‘‘அத்தனை முறை செய்யும்போதுதான் உயிர்க்காற்று ரத்தத்துல நல்லா கலக்கும். குறைஞ்சா பயனில்ல. கூடுதலா இருந்தா அது தேவையில்லை. இது ஒரு பாத்திரம் நிரம்பி வழியற மாதிரி...’’
‘‘ஒரு ஏட்டை படிக்க இதெல்லாம் எதுக்கு?’’
‘‘இந்தக் கேள்விக்கு விடை உள்ள இருக்கும்மா... தொடர்ந்து படி!’’
‘‘நல்லதுய்யா...’’
- ப்ரியா திரும்பினாள். வர்ஷன் ஊன்றினான்.
‘‘என்னவாம்?’’
‘‘பிராணாயாமம் நம்மை ஷார்ப் பண்ணிக்க.... முட்டி போடறது இந்த இடம் நம்மை டிஸ்டர்ப் பண்ணாம இருக்க...’’
‘‘இங்க என்ன டிஸ்டர்பன்ஸ் நமக்கு?’’
- அப்போது கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு ‘‘அம்மா’’ என்றபடி போய் கதவைத் திறந்தாள்.
அம்மாவேதான்!
‘‘கதவை சாத்திக்கிட்டு என்னடி பண்ணிக்கிட்டிருக்கே?’’
‘‘கூத்தடிச்சிக்கிட்டு இருக்கோம்... போதுமா?’’
‘‘இப்படி நீ சொல்லிட்டா நான் விட்ருவேனா... வேண்டாம்டி இந்தப் பாழாப் போன வேலை!’’
‘‘தப்பா சொல்றே... இது எவ்வளவு இன்ட்ரஸ்ட்டா இருக்கு தெரியுமா?’’
‘‘மண்ணாங்கட்டி... எனக்கு நீ ஒரே பொண்ணுடி! உனக்கு எதுவும் ஆகிடக் கூடாது...’’
‘‘எதுவும் ஆகாது. சென்ட்டிமென்ட்டா பேசி என்னை மாத்தலாம்னு நினைக்காதே. போ... போய் உன் பிராக்டீசை ஆரம்பி. வர்ற ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ண கான சபாவுல உன் கச்சேரிங்கறதை மறந்துடாதே...’’
‘‘ப்ரியா... உனக்கு இந்த வாய் ஆகாதுடி!’’
‘‘அம்மா! டயத்தை வேஸ்ட் பண்ணாம போம்மா...’’ - கதவைத் திரும்ப தாழிட்டுவிட்டுத் திரும்பினாள். வர்ஷன் கேட்டான்.
‘‘ஓ, இந்த டிஸ்டர்பன்சுக்காகத்தான் முட்டி போடணுமா?’’ - ப்ரியா சிரித்தவளாக, ‘‘இந்த டிஸ்டர்பன்ஸ் இல்ல... இதுக்கு வேற பேர் - இது நொச்சு! டிஸ்டர்பன்ஸ்ங்கறது பூமியால வருமாம்...’’
‘‘எப்படி?’’
‘‘வேண்டாம்... அந்தக் கேள்விக்கு பதில் கேட்டா, அப்புறம் அந்த பதிலுக்கு ஒரு கேள்வி நமக்குள்ள எழும்பும். நாம பிராணாயாமம் செய்வோம். முட்டி போடுவோம். அடுத்த பக்கத்துக்கு போவோம். எனக்குள்ள க்யூரியாசிட்டி அதிகமாகிக்கிட்டே போகுது வர்ஷன்...’’
‘‘பை த பை, அந்த சதுர்வேதி இப்ப என்ன செய்துக்கிட்டிருப்பான் ப்ரியா? அவன் கப்சிப்னு ஒதுங்கிடுவான்னு எதை வச்சு நம்பறது..?’’ - வர்ஷன் சதுர்வேதியைத் தொடவும், ப்ரியா அவனை வெறித்தாள்.
‘‘இப்ப நம்ம வேலை இந்த ஏட்டை படிச்சுப் புரிஞ்சிக்கறதும் காலப்பலகணி இருக்கற இடத்தைத் தேடிப் போறதும்தான்...’’
‘‘ஓகே... ஓகே... கன்டினியூ!’’
இருவரும் பிராணாயாமித்து முட்டி போட்டு அமர்ந்து ஏட்டின் அடுத்த பக்கத்தைத் தொட்டனர்.
‘அமர்வது கிழக்கு நோக்கி... அடுத்ததும் கண ஒடுக்கம்
ஒடுங்கி விரிந்திட இஷ்ட தெய்வ துதி...
துதியதன் பின்னே மதியதும் காணட்டும்
மார்கண்ட சக்கரம்!’- என்கின்ற வரிகள்!

அதில் முதல் மூன்று வார்த்தைகளுக்கு பொருள் புரிந்து விட்டது. காம்பசைக் கொண்டு கிழக்குத் திசை அறிந்து, அதை நோக்கி முட்டி போட்டு அமர்ந்தனர். ‘அடுத்ததும் கண ஒடுக்கம்’ எனும் வார்த்தைகளுக்குத்தான் பொருள் தெரியவில்லை. ப்ரியா உடனேயே போனை கையில் எடுத்தாள்.

‘‘போதும், நிறுத்து ப்ரியா... ஒவ்வொரு பக்கத்துக்கும் போன் பண்ணி கேட்டு நாம புரிஞ்சுக்கறதுக்குள்ள பொழுது விடிஞ்சிடும். பேசாம நாம இதை முதல்ல ஸ்கேன் பண்ணுவோம். அப்புறமா அவங்கள - குறிப்பா வள்ளுவரை - கிட்ட வச்சுக்கிட்டு நாம இடத்தைக் கண்டுபிடிப்போம்... என்ன சொல்றே?’’

‘‘அதுவும் சரிதான்... இப்படி சட்டுன்னு முடிவுக்கு வர்றதுக்குத்தான் அந்த பிராணாயாமம் ஹெல்ப் பண்ணுச்சோ?’’
‘‘இருக்கலாம்... நீ கேமராவை ஆன் பண்ணு. க்விக்... நான் கம்ப்யூட்டரை ஆன் பண்றேன்’’ - என்று ப்ரியா சுறுசுறுப்பானாள்.
ஆஸ்பத்திரியில் டாக்டர் பரிசோதித்தவராக ‘‘ஒரு இரண்டு நாள் இங்க இருக்கலாமே’’ என்றார். அருகிலேயே ஒரு போலீஸ் ஆபீசர். கணபதி சுப்ரமணியன் டாக்டரை பரிதாபமாகப் பார்த்தார்.
‘‘நாங்க ரொம்ப ஜாக்கிரதையா பாத்துப்போம் சார்’’ என்று டாக்டர் மறுபடியும் சொன்னார்.
‘‘எனக்கு என் வீடுதான் சொர்க்கம் டாக்டர். ப்ளீஸ்...’’ - கெஞ்சினார் கணபதி சுப்ர
மணியன்.
‘‘அப்ப சரி... ஆனா ஒண்ணு.’’
‘‘என்ன?’’
‘‘ஷோல்டர்ல மைல்ட் ஹேர் கிராக் இருக்கு. ஷேக் ஆனா டெவலப் ஆகும். துளிகூட அங்க அசைவு கூடாது. சாஞ்சுதான் படுக்கணும். புரண்டும் படுக்கக் கூடாது. பாயின்ட் ஃபைவ் அளவுல மைல்ட் ஸ்லீப்பிங் டோஸ் தரேன். லிக்கர் கூடாது...’’
‘‘ஃபார்ச்சுனேட்லி, எனக்கு அந்த வழக்கம் கிடையாது
டாக்டர்!’’
‘‘உண்மைல பெரிய ஆச்சரியம். அப்ப நீங்க தமிழ்நாட்டுல 43 பர்சன்டேஜ்ல ஒருத்தர்னு சொல்லுங்க!’’
‘‘அது என்ன 43 பர்சன்டேஜ்..?’’
‘‘57 பர்சன்டேஜ் குடிக்கறவங்களாம்... அதைச் சொன்னேன்!’’
‘‘ஓ... அப்ப குடிக்கறவங்க எண்ணிக்கைதான் கூடுதலா... குடிக்காதவங்க மைனா
ரிட்டியா?’’
- கணபதி சுப்ரமணியன் வேடிக்கையாகக் கேட்க, டாக்டரும் ஃபிட்நெஸ் சர்ட்டிஃபிகேட்டில் கையெழுத்திட்டார். அருகில் இருந்த போலீஸ் ஆபீசருக்கு அப்போது போன் வந்தது. எதிர் முனையில் பேசுவது இவர்களுக்கும் தெளிவாகக் கேட்டது.
‘‘சார், ஆக்சிடென்ட்ல செத்தவங்க உடம்பைக் கேட்டு அவங்க பேரன்ட்ஸ் வந்திருக்காங்க. அவங்க கமிஷனரைப் பார்த்து பர்சனலா பேசணும்னும் சொல்றாங்க சார்...’’
‘‘என்ன பேசணுமாம்?’’
‘‘இறந்தவங்க பல விஷயங்கள்ல வினோதமா எல்லாம் நடந்துக்கிட்டிருக்காங்க. எருமையை வெட்டிப் போட்டு ஏதோ பூஜை எல்லாம் செய்திருக்காங்க.  அபூர்வமான பொருள் ஒண்ணை தேடப் போறதாவும் அவங்க பேசி
யிருக்காங்க சார்...’’
‘‘என்னய்யா, என்னென்னமோ சொல்றே... அபூர்வமான பொருள்னா  என்னய்யா அது?’’
- போலீஸ் ஆபீசர் அப்படி பலமான குரலில் கேட்கவும், கணபதி சுப்ரமணியனும், வள்ளுவரும் விதிர்த்தனர்.
‘‘அது என்னன்னு யாருக்கும் தெரியல... டெல்லில இருந்து இவங்கள யாரோ டைரக்ட் பண்ணியிருக்காங்க!’’
‘‘சரி, முதல்ல அவங்ககூட நான் பேசறேன். பாடியை வாங்கிக்கிட்டுப் போய் காரியத்தை முதல்ல முடிக்கச் சொல்லுங்க.’’
‘‘யெஸ் சார்...’’
பேச்சை முடித்து போலீஸ் ஆபீசர் போனை பாக்கெட்டில் போட்டபடி, ‘‘இந்த கேஸ் ரொம்பவே விவகாரமா இருக்கும் போல இருக்கு. நீங்க உங்க வீட்ல இருக்கறதுதான் சேஃப்டியும் கூட!’’ - என்றார்.
‘‘என்ன சார் திடீர்னு... ஏதாவது புதுப் பிரச்னையா?’’
கணபதி சுப்ரமணியன் கேட்க, ஆமோதித்த போலீஸ் ஆபீசர், ‘‘நீங்க கிளம்புங்க சார்... உங்க வீடு வரை நானும் வர்றேன். பை த பை, நீங்க உங்க வீட்லதான் இருக்கணும். எதுக்காகவும் நீங்க வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது’’ என்றார்.
கணபதி சுப்ரமணியனுக்கு நெஞ்சில் மிதித்தது போல் இருந்தது.

‘‘தலைவர் நீச்சல் குளம் கட்ட வசூல் பண்ணப் போன இடத்துல டென்ஷன் ஆயிட்டாராமே, ஏன்?’’
‘‘எல்லாரும் ஒரு வாட்டர் பாட்டில் கொடுத்தாங்களாம்...’’

‘ஒடுங்கி விரிந்திட இஷ்ட தெய்வ துதி...
துதியதன் பின்னே மதியதும் காணட்டும் மார்கண்ட சக்கரம்!’

‘‘ஆபரேஷன் தியேட்டர்ல நிறைய வழி இருக்கே, ஏன்?’’
‘‘ஆபரேஷன் முடிஞ்சதும் ஏதாவது ஒரு வழியில டாக்டர் தப்பிக்கறதுக்குத்தான்!’’

‘‘இந்த டாக்டர் ரொம்ப கிண்டலான ஆசாமி...’’
‘‘சரி, அதுக்காக வைட்டமின் ஏ மாத்திரையை வயது வந்தவர்கள்தான் சாப்பிடணும்னு சொல்றது ரொம்ப ஓவர்!’’
பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

- தொடரும்...