இல்லாதவர்களுக்கு இங்கே எல்லாம் இலவசம்!



ஏழைக் குழந்தைகளுக்கு பால் இலவசம். வசதி படைத்தவர்கள் ஏமாற்றாதீர்கள். நன்றி!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் 500 பேனாக்கள் இலவசமாக வழங்கப்படும்.
முதியோர், மனநிலை பாதிக்கப்பட்டோர், ஊனமுற்றோர்களுக்கு காலை 8 மணி முதல் 11 மணிவரை இலவசமாக உணவு வழங்கப்படும். இங்கு 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பீடி, சிகரெட் விற்பனைக்கு இல்லை.

- தேர்ந்த அரசியல் தலைவரின் தேர்தல் அறிக்கையல்ல இவை. ஜோலார்பேட்டை ஜங்ஷன் எதிரே ஒரு சின்ன சாப்பாட்டுக் கடையில் தொங்கும் சிலேட்டு அறிவிப்புகள்!

 ‘ஹோட்டல் ஏலகிரி’... பக்கத்திலேயே டீக்கடையும் பெட்டிக்கடையும் சேர்ந்திருக்கும் உணவு விடுதி அது. சாப்பிட்ட திருப்தியில் கண்களில் நன்றி மின்ன கை கூப்பும் அந்த அம்மாவுக்கு வயது 60 தாண்டி இருக்கும். ‘‘அட, ஏம்மா! அழாதீங்க. நானும் உங்க பிள்ளை மாதிரிதான். நீங்க தினமும் இங்க வந்து சாப்பிட்டுட்டு போங்க. வேண்டியதைக் கேளுங்க!’’ என ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கிறார் நாகராஜ். இத்தனை நல்ல விஷயங்களுக்கும் காரணமானவர்.



‘‘இந்த அம்மா வசதியா வாழ்ந்தவங்க. வந்த மருமக சரியில்ல. மகனும் அவ பேச்சு கேக்குறவனா போயிட்டான். வீடு, வாசல், சொந்த பந்தம் இருந்தும் இதுமாதிரி நிறைய பேர் ஆதரவு இல்லாம அரவணைப்பு கிடைக்காம தவிக்கறாங்க. வீட்டில் சாப்பாடு இருக்கும். போட்டுச் சாப்பிட உரிமை இருக்காது. இப்படி ‘சாப்பிடற ரெண்டு கைப்பிடி சோறுக்கு அவமானப்படணுமா’ன்னு பச்சைத் தண்ணியை குடிச்சிட்டு திண்ணையில முடங்கிக் கிடக்குற நிறைய பேரை எனக்குத் தெரியும். அதனாலதான் முதியோருக்கு உணவு இலவசம்னு அறிவிச்சிட்டேன்்!’’ - மூச்சு விடாமல் பேசும் நாகராஜ் படித்திருப்பது 8ம் வகுப்பு.

மனைவியின் உதவியோடு ஹோட்டல் கடைகளைப் பராமரிக்கும் இவருக்கு மூன்று மகன்கள். ஏலகிரியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு வந்து ஓட்டல் தொழில் ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஓடிவிட்டன. பசியோடும் ஒட்டிய வயிறுமாய் கையேந்தி நிற்கும் சக மனிதர்களைப் பார்க்கும்போதெல்லாம் மனசு பிசைய, தினமும் சிலருக்கு இலவசமாய் உணவு தர ஆரம்பித்திருக்கிறார். சாப்பிட்டவர்கள் வயிறும் மனசும் நிறைந்து சொல்லும் வாழ்த்தில் நெகிழ்ந்து போன நாகராஜ், இந்தப் பணியில் தீவிரமாகிவிட்டார்.

‘‘என் குடும்ப செலவுக்கு மாசத்துக்கு 12 ஆயிரம் ரூபாய் போதும். அதுக்கு மேல வரும் எல்லா வருமானத்தையும் ஏழை, பாழைகளுக்கு சோறு போடத்தான் செலவு செய்யறேன். நானே சாப்பாடு தயாரித்துக் கொடுப்பதால் மாசத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் ஆகுது. அதுக்கு மார்க்கெட் மதிப்பு ஒன்றரை லட்ச ரூபாய் வரும். எனக்கு ஐந்து லட்ச ரூபாய் கடன் இருக்கு. கடவுள் அருளால வியாபாரமும் நல்லாதான் நடக்குது. கொஞ்சம் கொஞ்சமா அடைச்சிடுவேன்.

ஆனால், வட்டி கட்ட ஒரு நாள், ரெண்டு நாள் தாமதமானாலும் கடன் கொடுத்த ஒரு நண்பர், ‘ஏம்பா நாகராஜ்! நீ என்ன கோடீஸ்வரனா? எதுக்கு இந்த தான தர்மம் எல்லாம்? மூணு பசங்கள பெத்துருக்க. காசு சேக்கற வழியப் பாரு’ன்னு அறிவுரை சொல்ல ஆரம்பிப்பாரு. ‘அண்ணே, நீங்கதான் கோடீஸ்வரர் ஆச்சே. நீங்க செஞ்சா நான் ஒதுங்கிக்கிறேன்’னு சொல்வேன். சிரிச்சிக்கிட்டே நகர்ந்துடுவாரு. ஏன் சொல்றேன்னா, சக மனுஷனுக்கு உதவறதுக்கு மனசு இருந்தால் போதும்... வழி தானா கிடைக்கும்!



நானெல்லாம் ஸ்கூல் படிக்கும்போது வருஷத்துக்கு ரெண்டு பேனா வாங்கித் தரவே எங்க அம்மாவால முடிஞ்சதில்லை. இப்ப என்கிட்ட வசதி இருக்கு. அதான் பக்கத்துல இருக்கற பள்ளிக்கூடங்கள்ல படிக்கற  பசங்களுக்கெல்லாம் இலவசமா பேனா தர்றேன். ஸ்கூல் பசங்க ஹோட்டல்ல சாப்பிட்டாங்கன்னா பாதி விலைதான் வாங்குவேன். வயசானங்க, ஊனமுற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டவங்க, துப்புரவுத் தொழிலாளிங்கனு தினமும் நம்ம கடைல 120 பேராவது சாப்பிடுவாங்க. அதுபோல குழந்தைகளுக்கு பால் இலவசமா கொடுத்துடுவேன். கடவுளுக்குக் கொடுத்த திருப்தி எனக்கு!’’ என்றவரிடம், ‘‘வீட்டில் இதை எல்லாம் அனுமதிக்கறாங்களா?’’ - கேட்டோம்.

‘‘ஸ்கூல்ல வாத்தியாருங்களும் கூட படிக்கற பசங்களும் ‘நாகராஜ் பிள்ளைங்களா நீங்க’ன்னு விசாரிச்சி பெருமையா முதுகு தட்டிப் பேசும்போது, ‘அப்பா ஏதோ நல்லதுதான் செய்யறாரு’ன்னு புரிஞ்சு என் பிள்ளைங்க பெருமைப்படுறாங்க. ஒரு தகப்பனா எனக்கு அது போதும். என் மனைவிக்கு அடுத்தவங்களுக்கு உதவறதுல அப்படி ஒரு சந்தோஷம். காசு, பணமெல்லாம் வரும், போகும். வாய்ப்பு கிடைக்கும்போதே முடிஞ்ச உதவி செஞ்சிடணும். யார்கிட்டயும் இதுக்காக நான் காசு வாங்கறது இல்லை. அரிசி, பருப்புன்னு பொருளா கொடுத்தா வாங்கிக்குவேன். பெரும்பாலும் இப்படி வர்றவங்ககிட்ட, ‘உங்க ஊர்ல பசியால தவிக்கறவங்களுக்கு உதவுங்
க’ன்னு சொல்லி அனுப்பறேன்.  

இப்ப  திருப்பத்தூர் ஆஸ்பத்திரி எதிரில் ஒரு இலவச உணவு மையம் ஆரம்பிக்கப் போறோம். பலபேர் உதவியோட தினமும் அங்க 300 பேருக்கு சாப்பாடு போட பிளான் இருக்கு. உலகத்திலேயே மிக மோசமான நோய் பசி நோய்தான். இந்த நோய்க்கு மருந்தை
எங்கேயோ வெளிநாட்டுல கண்டுபிடிக்க வேண்டியதில்லை. நம்மகிட்டயே இருக்கு. அதைக் கொடுத்து சரி பண்ணிடலாம். இதே மாதிரி ஊருக்கு ஒருத்தர் இந்த வேலைல இறங்கிட்டா போதும். பசியை இல்லாமல் ஆக்கிடலாம்!’’ என்கிறார் நாகராஜ் நம்பிக்கை மின்ன.
கருணை இன்னும் இங்கே வற்றிவிடவில்லை!

"சக மனுஷனுக்கு உதவறதுக்கு மனசு இருந்தால் போதும்... வழி தானா கிடைக்கும்!"

- எஸ்.ஆர்.செந்தில்குமார்
படங்கள்: நா.கோகிலன்