காரணம்



‘‘மேடம்... ஒரு இருபது நாள் கால்ஷீட் போதும். பேமென்ட் நீங்க கேட்டதைத் தருவேன்!’’ - தயாரிப்பாளர் சோமசுந்தரம் சொன்னார்.நடிகை சித்ரா தேவி சற்று யோசித்துவிட்டுச் சொன்னாள்,

‘‘என்னோட இப்போதைய சம்பளத்துல பாதியைக் கொடுத்தா போதும். பட், என்னோட ஜோடியா நான் சொல்ற நடிகரைத்தான் போடணும்... முடியுமா?’’தயாரிப்பாளருக்கு சந்தோஷம். ஆனால், ஜோடியாக யாரைக் கேட்கிறார்?

‘‘யாருன்னு சொல்லுங்க மேடம். கண்டிப்பா முயற்சி பண்றேன்...’’‘‘மிஸ்டர்... விஷ்ணு கார்த்திக்...’’சோமசுந்தரம் அதிர்ந்தார். அது சித்ராதேவியின் கணவர். நல்ல மார்க்ெகட் உள்ளவர். கால்ஷீட் கிடைப்பது கஷ்டமும் கூட.‘‘மேடம்...

நீங்களேகூட பேசலாமே...’’ ‘‘ம்ஹும்... அது உங்க வேலை!’’ - சித்ராதேவி கண்டிப்பு காட்டினாள்.சோமசுந்தரத்தின் கடும் முயற்சியில் அது சாத்தியமாயிற்று. படமும் வெளிவந்து நன்றாக ஓடியது. அதன்பிறகே சித்ராதேவியிடம் தன் சந்தேகத்தைக் கேட்டார் சோமசுந்தரம்.

‘‘ஏன் மேடம் ஹஸ்பெண்ட்கூட நடிக்கக் கேட்டீங்க?’’ ‘‘பார்க்க நாங்க செலிபிரிட்டி கப்புள்தான். அவர் ரொம்ப பிசியான பிறகு, அவர்கூட நான் செலவழிக்கற நேரம், பேச்சு எல்லாம் சுத்தமா குறைஞ்சு போச்சு. இப்ப உங்க படத்துல சேர்ந்து நடிச்சதுல நான் இழந்தது கிடைச்சது!’’ - சொன்ன சித்ராதேவியின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. 

கீதா சீனிவாசன்