கவர்



‘‘சார், கொஞ்சம் மனசு வைங்க சார். அஞ்சு லட்சம். நீங்க  கையெழுத்து போட்டாதான் பில் பாஸாகும்னு சொன்னாங்க!’’ - கான்ட்ராக்டர் கெஞ்சினார். அரசு அதிகாரி ஜெயந்தன் கொஞ்சமும் அசரவில்லை.கான்ட்ராக்டர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சட்டென ஒரு கவரை எடுத்து டேபிள் மேல் வைத்தார்.‘‘என்னய்யா இது?’’‘‘கோச்சுக்காதீங்க சார். பத்து இருக்கு சார்!’’

‘‘சரி சரி, உன் தொல்லை தாங்கல!’’ - கவரை தன் பாக்கெட்டில் திணித்தபடி ஜெயந்தன் கையெழுத்தைப் போட்டான்.ரெட் சிக்னல் கண்டதும் ெஜயந்தன் காரை நிறுத்தினான். ‘டமார்’ என்ற சத்தம். முன்னால் சென்ற பைக்கில் கார் இடித்துவிட்டது.‘‘யார்ரா அவன்? கபோதி!’’ - வாட்டசாட்டமான இரண்டு இளைஞர்கள். ஜெயந்தன் தடுமாறினான்.‘‘ஸாரி’’

‘‘ஸாரியா? எறங்குடா கீழே! புது பைக்கை காலி பண்ணிட்டியே... வண்டிய ஓரங்கட்ரா!’’அந்த பைக்கில் சின்ன கீறல்தான் விழுந்திருந்தது. ஆனால் அதை இவர்களிடம் பேச முடியுமா? அதற்குள் ஒருவன் அடிக்கிற தொனியில் நெருங்கி வந்தான்.வெலவெலத்துப் போன ஜெயந்தன், டக்கென்று பாக்கெட்டில் இருந்த கவரை எடுத்துக் கொடுத்தான்.‘‘பத்தாயிரம் இருக்கு இதுல!’’‘‘மச்சி, சார் மெர்ஸலாயிட்டாரு. இத வச்சி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். வா!’’ - கிளம்பினார்கள்.வந்தது வந்த வழியே போனது.         

ஆ.லோகநாதன்