அழியாத கோலங்கள்



பல விஷயங்கள் நம் வாழ்க்கையில் முன்னோர்கள் சொல்லி, நாம் தொடர்ந்து செய்து பழகிப் போனவை. கமலுக்கு முன்பாகவே நான் சமூகம், பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை எதிர்த்து சிந்தித்திருக்கிறேன்.

ஆனால் செயல்படும் வீரமில்லாத கோழையாகவே வாழ்ந்திருக்கிறேன். அறிவாற்றலும் உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் தைரியமும் கமல் போல் எனக்கு இருந்ததில்லை என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும்.

அன்று நான் எதிர்த்த விஷயங்களில் எதுவெல்லாம் உண்மையிலேயே எதிர்த்துப் போரிட வேண்டியவை, நம்  முன்னோர்கள் பழக்கத்தில் எதையெல்லாம் தவறென நினைக்கிறோம் என பிரித்துப் பார்க்காமல், எதிர்க்கிறோம் என்ற பெருமைக்காகவே செய்தேன் என்று  இன்று யோசிக்கிறேன். ‘‘நீ பிராமணன்... பிராமணர்களால் அனுமதிக்கப்படாதவற்றைச் செய்யாதே.   நரகத்துக்குப் போய் விடுவாய்!’’ என்பார்கள் என் பெற்றோர்கள். 

அவர்கள் சொல்வது உண்மையில்லை என்பதற்காக மறைவாகப் புகை பிடிக்க ஆரம்பித்தவன், அதை விட முடியாமல் தொடர்ந்தேன். எனக்கு அசைவ உணவில் பெரிய ஆசை எதுவும் இல்லாவிட்டாலும், அவர்கள் சொல்வதற்கு எதிர்மறையாக ஏதாவது செய்ய வேண்டுமே என்று புஹாரியில் போய் மெஜுரா சிக்கனை கஷ்டப்பட்டு கடித்து விழுங்கினேன்.

இதில் நான் செய்த ஒரே ஒரு உருப்படியான காரியம்... 1960-61ம் ஆண்டுகளில் பரமக்குடியிலிருந்து சென்னைக்கு வரும்போதெல்லாம், அன்றைய இந்தோ-சிலோன் எக்ஸ்பிரஸ் புகைவண்டியில் ஐரோப்பிய உணவுப் பகுதியில் உட்கார்ந்து கமலுக்கு சிக்கன் வாங்கிக் கொடுத்துப் பழக்கியதுதான். அப்போது கமலுக்கு வயது 6.

பின்னாட்களில் ஒருமுறை கமலும் எங்கள் பெற்றோரும் ரயிலில் டெல்லியோ கல்கத்தாவோ செல்லும்போது நான் அவர்களை வழியனுப்ப சென்ட்ரலுக்கு வந்திருந்தேன். ரயில் புறப்படும் சமயம் எதிர் பிளாட்பாரத்தில் நின்ற ரயிலில் ரெஸ்டாரன்ட் கார் என்ற போர்டுடன் உணவு கம்பார்ட்மென்ட் நின்றது.

கமல் எங்கள் அப்பாவிடம், “நீங்க ஒண்ணும் சரியே இல்லை. சாரு அண்ணாவுடன் போனால் அந்த ரெஸ்டாரன்ட் காரில் சிக்கன் வாங்கித் தருவார்” என்று சொல்லும் சமயம் அவர்கள் ரயில் புறப்பட்டுவிட்டது.  என் தந்தையாரின், ‘‘என்னது... என்ன சொன்னே?’’ என்ற குரல் ஓடும் ரயிலிலிருந்து பிளாட்பாரத்தில் நின்ற எனக்கும் கேட்கத்தான் செய்தது. இந்த ‘உண்மையைப் போட்டு உடைக்கும்’ வழக்கம் இன்றும் கமலை விட்டுப் போகவே இல்லை.

நான் பரமக்குடியை விட்டு கமலுக்கு உதவியாக - அல்லது உபத்திரவமாக - சென்னைக்கு வந்த சமயம் நாட்டில் எமர்ஜென்ஸி பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. அந்த நாட்களில் கமலை ஏதோ ஒரு விழாவுக்காக பரமக்குடிக்கு அழைத்தார்கள். நானும் கூடப் போயிருந்தேன். அந்த விழாவில் பங்கு கொண்ட தமிழக காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர், ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர். அவர் சொன்னார்... ‘‘உங்க ஜூனியராக இருந்த ஒரு வக்கீல்தான் நீங்கள் எமர்ஜென்ஸியை எதிர்த்துப் பேசுவதாகவும் உங்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் மனு கொடுத்தார்!’’ என்று.

பின்னால் விசாரித்ததில் விஷயம் புரிந்தது. இவர் என்னுடைய ஜூனியராக இருந்த சமயம், நான் ஒரு தி.மு.க வக்கீல். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்ததால், கட்சி இரண்டாகப் பிரிந்ததும் அந்தப் பக்கம் போய்விட்டார். ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற தெய்வீக சிந்தனைப்படியும், எதிரியுடன் வரும் குருவும் பீஷ்மர் போல கொல்லப்பட வேண்டியவர் என்ற மஹாபாரத சிந்தனைப்படியும் அவர் இப்படிச் செய்திருக்க வேண்டும்.

 அமெரிக்க அரசியலில் இரண்டே கட்சிகள்தான்... குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என்று! வேறு யாரையும் தலை தூக்க விடாமல் நடத்தும் ராஜாங்கம் இது. சற்றே உற்றுப் பார்த்தால் தமிழக அரசியல் மற்றும் சினிமா கூட அப்படித்தான் இருக்கிறது. அந்தக் காலத்தில் இப்படிக் கோலோச்சியவர்கள் எங்கள் சினிமா ஹீரோக்கள் சிவாஜியும் எம்.ஜி.ஆரும்தான். மக்களிடையே அது தொடர்கிறது.

ஆனால், கமலும் ரஜினியும் அப்படி ஒரு கட்சிப் பிரிவு நடத்தவில்லை. ஒரு நல்ல நடிகனை கடைசி வரை வில்லனாக்கும் முறை போக வேண்டும் என்று பரஸ்பரம் பேசி கமலும் ரஜினியும் முடிவு செய்ததற்கு நான் நேரடி சாட்சி. அப்படி வெவ்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு, இரண்டு பேருக்கும் சந்திக்கும் வாய்ப்பு நடு இரவில்தான் கிடைக்கும். அதுவும் கமலின் வீட்டு மாடி படுக்கை அறையில்.

இரவில் ரஜினி கதவைத் தட்டி என்னை எழுப்பி, மாடிக்குச் செல்வார். இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த இருவரையும் ரோல் மாடலாகக் கொண்டால், முகத்தை முகம் பாரா அரசியல் சூழ்நிலை எல்லா நாட்டிலும் திருந்தக்கூடும்.

என் போன்ற சராசரி நடிகர்கள் தவிர மற்ற முன்னணி நடிகர்களுக்கு சினிமாவில் நடிப்பு, இயக்கம் இரண்டுமே கரடுமுரடானவை. எந்தக் காரணத்தால் ஒரு பிரபலத்தின் படம் வெற்றியையோ தோல்வியையோ தழுவும் என்று சொல்ல முடியாது. ரிலீஸாகும் வாரத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் கூட, மக்கள் அதிகம் வீட்டை விட்டு வெளியே வராததால் தியேட்டரை விட்டு தூக்கப்பட்டு சில படங்கள் தோல்வி அடையும்.

பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ வெளியானபோது அப்படித்தான் தொடர்ந்து மழை பெய்தது. இருந்தும் பத்திரிகைகளில், ‘அடாது மழை பெய்தாலும் மக்கள் குடையுடன் வந்து படம் பார்க்கிறார்கள்’ என்று விளம்பரம் வந்தது. பரமக்குடியில் என் பள்ளி நண்பரான ஒரு குடைக்கடைக்காரர் சொன்னார்... ‘‘ ‘16 வயதினிலே’ படம் ரிலீஸானதும் என் கடையில் தினம் நான்கு குடைகள் அதிகமாக வியாபாரமாகிறது!’’ என்று. 

 என் போல குருட்டு அதிர்ஷ்டத்தில் வக்கீல் தொழிலில் வெற்றி பெற்று, தோற்று தூக்கி எறியப்படும் சமயம் பார்த்து நடிப்புத் துறைக்கு மாறியவர்கள் பாக்கியவான்கள். தம்பியின் நடிப்புத் திறமையை நம்பி, ‘இவருக்கும் அதில் கொஞ்சம் இருக்காதா!’ என்ற அரைகுறை யோசனையில் எனக்கு இடங்கொடுத்த தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் உண்டு.  இப்படி யான வாய்ப்பில் யாரும் முன்னுக்கு வந்துவிடலாம்.

ஆனால், ‘அடுத்த படம் உருப்படியாக வெளிவர வேண்டுமே’ என்ற கவலையில் உண்ணாமல், உறங்காமல் வேலை பார்க்கும் வகைதான்... கமலும் இதர வெற்றி நடிகர்களும்!ஒரு நல்ல நடிகனை கடைசி வரை  வில்லனாக்கும் முறை போக வேண்டும் என்று பரஸ்பரம் பேசி கமலும் ரஜினியும்  முடிவு செய்ததற்கு நான் நேரடி சாட்சி.

(நீளும்...)

சாருஹாசன்

ஓவியங்கள்: மனோகர்