அமெரிக்க அதிபராக ஒரு இந்தியர்!



களத்தில் குதிக்கும் பாபி ஜிண்டால்

‘உலகத்தின் போலீஸ்காரன்’ என அமெரிக்காவைக் குறிப்பிடுவார்கள். சோவியத் யூனியன் சிதறிய பிறகு உலகின் ஒரே சூப்பர் பவர் தேசம். ‘உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள்’ பட்டியலை யார் எடுத்தாலும், அமெரிக்க அதிபர் பெயரை எழுதிவிட்டுத்தான் அடுத்த பெயரை யோசிப்பார்கள்.

அப்படிப்பட்ட வல்லமை வாய்ந்த பதவியில் ஒரு இந்தியர் அமர்வதற்கான களம் வாய்த்திருக்கிறது. அமெரிக்காவின் லூசியானா மாகாண கவர்னராக இருக்கும் பாபி ஜிண்டால், அதிபர் தேர்தலுக்கான போட்டியில் குதிப்பதாக அறிவித்திருக்கிறார். ஆனால் அதுபற்றிய பெருமிதம் அமெரிக்க இந்தியர்களுக்கு இல்லை. காரணம், பாபி ஜிண்டாலின் சர்ச்சைக்குரிய பழைய கதை!

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிகிறது. அடுத்த அதிபர் தேர்தலுக்கான ஆயத்தங்கள் அங்கே துவங்கி விட்டன. அங்கே தேர்தல் களம் சற்றே வித்தியாசமானது. நம்ம ஊர் போல கட்சித் தலைவர்களே அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வழக்கம் அங்கு கிடையாது.

குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என இரண்டு பெரிய கட்சிகளிலும் பல பிரமுகர்கள் போட்டியிடப் போவதாக அறிவித்து மாகாணம் மாகாணமாகப் போய் பிரசாரம் செய்வார்கள். கட்சிப்பிரதிநிதிகளின் வாக்கு யாருக்கு அதிகம் கிடைக்கிறதோ, அவரே வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

ஜனநாயகக் கட்சியின் ஒபாமா இரண்டு முறை அதிபராக இருந்துவிட்டதால், அவர் மீண்டும் போட்டியிட முடியாது. அவரது கட்சியில் ஹிலாரி கிளின்டன் உட்பட பலர் களத்தில் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் குடியரசுக் கட்சியில் ஜார்ஜ் புஷ்ஷின் சகோதரர் உட்பட பலரும் மோதுகிறார்கள். இந்தப் போட்டியில் 26வது நபராக களத்தில் குதித்திருக்கிறார் பாபி ஜிண்டால்.

44 வயதாகும் ஜிண்டாலின் அரசியல் பயணத்தின் ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைக்கப்பட்டது. முதல்முறையாக அவர் கவர்னர் தேர்தலில் நின்றபோது தோற்றார். அதன்பின் அவர் வரலாற்றில் தோல்வி என்பதே இல்லை.

இந்தியர்கள் அதிகம் இல்லாத, தங்கள் நிறத்தின்மீது பெருமிதம் கொண்ட வெள்ளைக்காரர்கள் அதிகம் இருக்கும் லூசியானாவிலிருந்து இரண்டு முறை அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்குத் தேர்வான அவர், 2008ம் ஆண்டில் முதல்முறையாக கவர்னர் ஆனார்.

அமெரிக்காவில் மிக இளம் வயதில் கவர்னர் ஆனவர் அவர்தான். அமெரிக்க கவர்னர் ஆன முதல் இந்தியரும் அவர்தான். இரண்டாவது முறையும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்து, இப்போது அமெரிக்காவின் அதிக பாப்புலரான கவர்னர் என மதிப்பிடப்பட்டு இருக்கிறார். 

இந்தப் பின்னணியோடு களத்தில் குதிக்கும் வரை, ‘நம்ம ஆள் ஒருவர் இந்த உயரத்துக்கு வந்திருக்கிறார்’ என அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் கொண்டாடவில்லை. அவருக்காக ஆதரவு திரட்டவில்லை. மாறாக, ‘‘நல்லவேளையாக பாபி ஜிண்டால் இந்தியர் இல்லை. நன்றி கடவுளே!’’ என முழக்கம் செய்கிறார்கள்.

தனது போட்டி குறித்து அறிவித்தபோது, ‘‘அமெரிக்க இந்தியர்கள் என யாரும் இல்லை, ஆப்ரிக்க அமெரிக்கர்கள் என யாரும் இல்லை, ஐரிஷ் அமெரிக்கர்கள் என யாரும் இல்லை. எல்லோரும் அமெரிக்கர்கள்தான்’’ என்றார் அவர். ஆரம்பம் முதலே ஜிண்டால் தன்னை அமெரிக்க இந்தியராக அடையாளப்படுத்திக் கொள்வதை திட்டமிட்டுத் தவிர்த்து வந்தார்.

கல்லூரியில் படிக்கும்போதே கிறிஸ்தவராக மாறியவர் பாபி. அமெரிக்க அரசியலில் கிறிஸ்தவராக இல்லாவிட்டால் ஜெயிக்க முடியாது என ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அமெரிக்காவில் ஜிண்டால் தவிர நிக்கி ஹாலே என்ற இந்தியப் பெண்மணியும் கவர்னராக இருக்கிறார்.

தெற்கு கரோலினா கவர்னராக இருக்கும் அவரது பெற்றோர்கள் சீக்கியர்களாக இருந்தாலும், அவர் கிறிஸ்தவர் ஆகிவிட்டார். பிரதிநிதிகள் சபை உறுப்பினராக இருக்கும் அமி பேராவின் பெற்றோர் இந்துக்கள். ஆனால் அவர் கிறிஸ்தவராக மாறிய பிறகே அரசியலில் ஜொலிக்க முடிந்தது.

நிக்கி ஹாலேவும் அமி பேராவும் அமெரிக்க இந்தியர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் நலன்களுக்காகப் பேசுகிறார்கள். ஆனால் ஜிண்டால் இப்படி தன்னை இந்தியராக அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. இந்தியாவில் அவரது உறவினர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்காகவோ, சொந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்ற பரவசத்திலோ அவர் இந்தியாவுக்கு வந்ததில்லை. கடந்த ஆண்டில் தொழில் முதலீட்டுக்காக தைவான், தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வந்தவர், மறந்தும்கூட இந்தியாவுக்கு வரவில்லை. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா போனபோது, அங்கே அரசியல் செல்வாக்கோடு இருக்கும் பலரும் அவரைச் சந்தித்தனர். ஆனால் ஜிண்டால் அதைத் திட்டமிட்டுத் தவிர்த்தார்.

‘‘குடியரசுக் கட்சியில் இருக்கும் வெள்ளை அமெரிக்கர்கள் பழமைவாத மத நம்பிக்கைகளை இறுக்கமாக வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவராகவே அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்’’ என குற்றம் சாட்டுகிறார்கள் அமெரிக்கவாழ் இந்தியர்கள். ‘அமெரிக்காவில் குடியேறும் இந்தியர்கள் தங்களை அமெரிக்கர்களாகவே நினைத்துக்கொள்ள வேண்டும்’ என வலியுறுத்தும் அவர், மறந்தும்கூட இந்தியப் பாரம்பரிய உடை அணிவதில்லை.

அவரது நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த இந்தியப் பெண்கள், ‘தங்கள் பாரம்பரிய உடையைத் தவிர்க்குமாறு’ அறிவுறுத்தப்பட்டனர். ‘இந்தியர்கள் கிறிஸ்தவர்களாக மாறி தங்கள் பெயர்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்’ என அவர் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் உண்டு. தீபாவளி கொண்டாடுவது தொடர்பான தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் வந்தபோது, அவர் அதை ஆதரிக்கவில்லை.

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு வேலை, பொருளாதாரம், மத சுதந்திரம் என மூன்று விஷயங்களில் அச்சம் உண்டு. இந்த மூன்று விஷயங்களிலும் இந்தியர்களின் கருத்துக்கு எதிராகவே ஜிண்டால் இருக்கிறார்.

‘‘எந்தக் கட்சியிலும் இருக்கலாம், எந்த மதத்துக்கும் மாறலாம். ஆனால் நாம் இந்தியாவிலிருந்து வந்தோம் என்ற விஷயத்தை மாற்றவோ, மறக்கவோ முடியாது. இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்களுக்குப் பிறக்கும் இரண்டாம் தலைமுறை அமெரிக்க இந்தியர்களுக்கு தங்கள் மரபு குறித்த பெருமிதம் அவ்வளவாக இருக்காது. ஆனால் ‘இந்தியன்’ என்ற அடையாளத்தையோ, இந்தியர்களையோ வெறுக்கும் அளவுக்கு அவர்கள் போக மாட்டார்கள். ஆனால் பாபி ஜிண்டால் அதைச் செய்கிறார்’’ என குற்றம் சாட்டுகிறார் அமி பேரா.

ஜிண்டாலின் நண்பர்களோ, ‘‘முதல் தேர்தலின்போது பாபியின் மதம் குறித்தும், இந்திய அடையாளம் குறித்தும் எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து அவரைத் தோற்கடித்தனர். கிறிஸ்தவராகப் பிறந்த ஒபாமாவையே முஸ்லிம் என பிரசாரம் செய்து அமெரிக்காவில் கணிசமானவர்களை நம்ப வைக்க முடிந்தது. அப்படி இருக்கும்போது ஜிண்டால் தனது இந்திய அடையாளங்களைத் துறக்கத்தானே வேண்டும்’’ என்கிறார்கள்.

ஆனால், ‘‘அமெரிக்கர்களேகூட இதை விரும்ப மாட்டார்கள். ஒபாமா தனது ஆப்ரிக்க பூர்வீகம் குறித்தும், தனது தந்தையின் நினைவுகள் பற்றியும் உணர்ச்சிகரமாகப் பேசி வசீகரித்தார். தனது பாரம்பரியத்தை மதிக்காத ஒருவரை அமெரிக்க மக்கள் சந்தேகத்தோடு பார்ப்பார்கள். வேரை இழந்த மரமாகவே மதிப்பார்கள். அது ஜிண்டாலுக்கு ஆபத்து’’ என்கிறார்கள் அமெரிக்க இந்தியர்கள்.

குட்டி குட்டி தேசங்கள் பலவற்றில் இந்திய வம்சாவளியினர் அதிகாரம் செய்வதைப் பெருமிதத்தோடு பார்க்கிறோம். அதன் உச்சபட்ச வெற்றியாக நாம் பெருமைப்பட வேண்டிய ஒருவர், ‘அடையாளச் சிக்கலில்’ தவிக்கிறார்.

ஜிண்டாலின் பெற்றோர் இருவரும் கல்லூரிப் பேராசிரியர்கள். பாபி ஜிண்டால் அம்மா வயிற்றில் 4 மாதக் கருவாக இருந்தபோது பெற்றோர் அமெரிக்கா சென்றனர். அபார புத்திசாலியாக இருந்த அவருக்கு பெற்றோர் வைத்த பெயர், பியூஷ் ஜிண்டால்.

சின்ன வயதில் பார்த்த ஒரு டி.வி. சீரியலில் வரும் வெள்ளைக்காரச் சிறுவன் ‘பாபி’ பெயரை தனக்கு வைத்துக்கொண்டு கிறிஸ்தவராக மதம் மாறினார். பொலிட்டிகல் சயின்ஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தார். ஜார்ஜ் புஷ்ஷின் கடைக்கண் பார்வை இவரை உயர்த்தியது.

ஜிண்டாலின் மனைவி, சுப்ரியா ஜாலி. திருமணத்துக்குப் பிறகு அவரும் கிறிஸ்தவர் ஆனார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். மூன்றாவது குழந்தைக்கு பிரசவ வலி எடுத்தபோது உடனே மருத்துவமனைக்குக் கூட்டிப் போக முடியாமல், ‘நண்பன்’ படத்தில் வருவதுபோல் போனில் மருத்துவ ஆலோசனை கேட்டு மனைவிக்குப் பிரசவம் பார்த்த அனுபவம் இவருக்கு உண்டு. 

“நல்லவேளையாக பாபி ஜிண்டால் இந்தியர் இல்லை. நன்றி கடவுளே!’’என முழக்கம் செய்கிறார்கள்.

- அகஸ்டஸ்