டிப்ஸ்



அந்த  ஹோட்டலில் பேரராக இருந்த அந்தச் சிறுவன் ரொம்ப ஸ்மார்ட். எங்களை நன்றாக கவனித்தான். சாப்பிட்டு  முடித்ததும், அவனிடம் 10 ரூபாயை நீட்டினேன். அவனோ பதறினான். ‘‘வேணாம்  சார், டிப்ஸ் வாங்கினா எங்க முதலாளி வேலையை விட்டு தூக்கிடுவாரு!’’  - மிரட்சியுடன் கூறினான். இப்படியும் ஒரு முதலாளியா என  நினைத்துக்கொண்ேடன்.

அடுத்த முறை வந்தபோது அந்தச் சிறுவன் இல்லை. வேறொரு பேரர் என்னிடம் மிச்ச சில்லரையைக் கொடுத்துவிட்டு டிப்ஸை கேட்டுப் பெற்றார்... அதுவும், ஹோட்டல் முதலாளி முன்னிலையிலேயே!‘‘என்ன சார், ஓரவஞ்சனை இது! இவங்கல்லாம் டிப்ஸ் வாங்கலாம். அந்தப் பையன் வாங்கக் கூடாதா? சொல்லப் போனா இவங்களைவிட அவன் நல்லா உழைக்கிறான்!’’ - முதலாளியைக் கேட்டேன்.

‘‘அவன் குடும்பம் ரொம்ப ஏழ்மை சார். சனி, ஞாயிறு மட்டும்தான் வேலைக்கு  வருவான். நல்லா படிக்கிற பையன். அவன் படிச்சி, பெரிய ஆளா வரணும்னுதான்  நான் நினைக்கிறேன். ‘டிப்ஸ்’ வாங்கி பணத்து மேல ஆசை வந்துட்டா அப்புறம் படிப்பு பாழாகி, இதுக்கே வந்திடுவானோன்னு  பயமா இருக்கு. அதான் அவனை மிரட்டி வச்சிருக்கேன்!’’ என்றார்.எனக்கு அவரைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது.

வி.அங்கப்பன்