செல்போன் அடிமைகள் நடைபாதை



‘லஞ்சத்தை ஒழிக்க முடியவில்லை என்றால் அதைச் சட்டம் போட்டு அங்கீகரித்துவிடலாம்’ என விரக்தியோடு சொல்வார்கள் பலர். தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறப்பது, சாலைகளின் குறுக்கே நடந்து செல்லும்போது அடிபடுவது என பல விபத்துகளுக்குக் காரணமாக இருப்பது செல்போன். அதன் திரையிலிருந்து தங்கள் கண்களை எடுக்க முடியாமல் அடிமையாகி, கவனம் சிதைந்து விபத்தில் சிக்குகிறார்கள். இவர்களைத் திருத்த முடியாமல் இப்போது தனி நடைபாதை அமைத்துத் தருகிறார்கள் சில நாடுகளில்!

பெல்ஜியம் நாட்டின் ஆன்ட்வெர்ப் நகரில் நடைபாதை மற்றும் சைக்கிள் பாதைகளில் ஒரு குறிப்பிட்ட பகுதி தனியாக வெள்ளை பெயின்ட் அடித்து ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களது ஸ்மார்ட் போனில் மெஸேஜ் படித்தபடியோ, இமெயில் பார்த்தபடியோ இதில் பாதசாரிகள் நிதானமாக நடந்து செல்லலாம். மற்றவர்கள் மீது மோதிவிடுவோமோ அல்லது வாகனங்கள் இடித்துவிடுமோ என பயப்படத் தேவையில்லை.

அவசர வேலை காரணமாக வேகமாக நடப்பவர்கள், இந்த ஏரியாவை விட்டு வேறு ஏரியாவில் நடந்து செல்லலாம். இதற்கு நகர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!
இப்படி ஒரு ஐடியா வந்ததே, முட்டாள்கள் தினத்தில் மக்களை ஏமாற்றச் செய்த ஒரு முயற்சியில்தான்! 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அமெரிக்காவின் பிலடெல்பியா நகர மேயர் ஒரு அறிவிப்பு செய்தார்.

‘‘நடந்து போகும்போதுகூட தங்கள் செல்போனில் பிஸியாக ஏதாவது வேலை பார்க்கும் நகர மக்களுக்காக பிளாட்பாரங்களில் ‘இ-லேன்’ என்ற பெயரில் தனி பகுதி பிரித்துத் தரப்படும்’’ என அவர் அறிவிப்பு செய்த சில மணி நேரங்களில் ‘‘இது உண்மையா?’’ எனக் கேட்டு நூற்றுக்கணக்கான போன்கள். பலரும் எல்லா சாலைகளின் பிளாட்பாரங்களிலும் இந்த தனி நடைபாதையைத் தேடி அலுத்தனர். அடுத்து வாஷிங்டன் நகரின் 18வது தெருவில் அரசு அனுமதியோடு இப்படி ஒரு முயற்சியை நேஷனல் ஜியாக்ரபிக் சேனல் செய்து பார்த்தது.

இவர்களை எல்லாம் முந்திக்கொண்டு சீனாவில் சோங்கிங் நகரில் இதை அதிகாரபூர்வமாக அமல்படுத்திவிட்டார்கள். அங்கிருக்கும் ‘ஃபாரீனர் ஸ்ட்ரீட்’டில் தரையில் செல்போன் குறியீடு இருக்கும் பகுதி யில் நடந்து செல்பவர்கள், நிதானமாக தங்கள் செல்போனில் கடமையாற்றலாம். அடுத்ததாக இப்போது பெல்ஜியத்தில்!
நம்ம ஊரில்தான் நடப்பதற்கே நடைபாதை இல்லையே! அப்புறம் எங்கே செல்போன் அடிமைகளுக்கு இடம் ஒதுக்குவது?

- ரெமோ