பேசும் சித்திரங்கள்



தமிழ் ஸ்டுடியோ 33 அருண்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்...

“கதை காலத்தின் தொல்படிவம். கதையைச் சொல்வதும் கேட்பதும் வெறும் பொழுதுபோக்கல்ல. அது எல்லோரையும் உயிர்ப்பிக்கும் சடங்கு. ஒரு வாழ்முறை. கதையின் மூச்சு கொண்ட தொல் சடங்குகள் குறையக் குறைய கதை சொல்வதும் கேட்பதும் அரிதாகிக்கொண்டு போகின்றன.

உரையாடலை, உறவினை, நேசத்தை, நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதை சொல்லலின் மூலமே எதிர்காலத்தில் உருவாகப் போகும் நல்ல நேர்மையான அறிஞர்கள், தத்துவவாதிகள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள், காவலர்கள் என சமூகத்தில் மாற்றம் விளைவிக்கக் கூடிய மனிதர்களையும் நாட்களையும் நாம் பெற முடியும்.’’

- ச.முருகபூபதி


மனிதனின் மனச் சிதைவுகளை (Mental Disorders) முன்வைத்து, தமிழில் கழிவிரக்கம் கோராமல், படைப்பு ரீதியாக எந்த முயற்சியும் இதுவரை நடந்திராத சூழலில், அந்த குறையைக் களைந்திருக்கிறது ‘நிழல்’ குறும்படம். ‘சிஷோஃப்ரினியா’ (Schizophrenia) என்பது ஒரு நோய் அல்லது மனச் சிதைவு என்பதை இறுதிவரை சொல்லாமல், அந்த மனச் சிதைவையே அழகான ஓவியமாக வடித்தெடுத்திருக்கிறது இந்தக் குறும்படம்.

சிஷோஃப்ரினியா மனச் சிதைவை எளிதாக விளக்கிவிட முடியாது. அதில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. மிகவும் சிக்கலான உட்கூறுகள் கொண்ட இந்த மனச் சிதைவு பலருக்கும் சாபம். வெகு சிலர் மட்டும் அதனைத் தங்களுக்கு சாதகமாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிச் சாதகமாக மாற்றிக்கொண்டவர்களில் ஒருவனாகவே ‘நிழல்’ குறும்படத்தின் மைய கதாபாத்திரம் விளங்குகிறது.

சிஷோஃப்ரினியா பற்றியும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியும் உலக அளவில் நிறைய திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. தி ஸ்நேக் பிட் (The Snake Pit) என்கிற அமெரிக்க திரைப்பட மும், ஏஞ்சல் பேபி (Angel Baby ) என்கிற ஆஸ்திரேலியப் படமும் அதில் முக்கியமானவை. ஆனால், இத்தகைய மனச் சிதைவை மிகக் குரூரமாகக் காட்டி, பார்வையாளர்களை அச்சுறுத்துவது ஒருபோதும் நல்ல படைப்பாக இருக்க முடியாது. ஒரு நோயைக் கூட, ஒரு இயலாமையைக் கூட அழகியலோடு பதிவு செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட அந்தப் பிரச்னையே அவர்களுக்கு எப்படி நல்லதாகவும் அமைகிறது என்பது பற்றியும் பேசவேண்டும். அத்தகைய படங்களே செவ்வியல் தன்மை கொண்ட படங்களாக மாறிவிடுகின்றன. சிஷோஃப்ரினியா மனச் சிதைவை அத்தனை அழகியலோடு சொன்ன விதத்தில் இந்த எல்லாப் படங்களுக்கும் ஒரு படி மேல் போய் நிற்கிறது ‘பியூட்டி ஃபுல் மைண்ட்’ திரைப்படம்.

ஒரு கணிதவியலாளர், தன்னை பீடித்த இந்த மனச் சிதைவை எவ்விதம் எதிர்கொள்கிறார் என்பதுதான் படத்தின் அடிநாதம். கதை சொன்ன விதத்தில் பார்வையாளனை அநாயாசமாகக் கட்டிப்போட்ட படம். இதே மனச்சிதைவை ஒரு நோயாகப் பாவிக்காமல், அது எப்படி ஒரு ஓவியனுக்கு நன்மை பயக்கிறது என்பதைப் பற்றி பேசும் குறும்படம்தான் ‘நிழல்’.

தனியார் நிறுவனங்களுக்கு ஓவியம் வரைந்து கொடுக்கும் வேலையைச் செய்து வருகிறான் ரகுநாத். முதல் நாள், காஃபி நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஒரு பெண் காஃபி கோப்பையுடன் இருக்கும் ஓவியம் ஒன்றை வரைந்து கொடுக்கச் சொல்கிறார்கள். அன்று காலை ஒரு அழகான பெண், கையில் காஃபி கோப்பையுடன் ரகுநாத்தை எழுப்பி, ஓவியத்தை விரைவில் வரைந்து கொடுக்க வேண்டும், உடனே எழுந்து வேலைகளைத் தொடங்கு என்று பணிக்கிறாள்.

ஓவியன் இடையில் அவளோடு சேஷ்டைகள் செய்யவும் செய்கிறான். ஆனால் அவளோ, ‘‘நான் எதற்காக வந்திருக்கிறேன் என்று தெரியும் இல்ல’’ என்று தடுத்து அவன் கவனத்தை ஓவியம் வரைவதை நோக்கித் திருப்புகிறாள்.

சில மணிநேரங்களில் ரகுநாத்தும், ஓவியத்தை வரைந்து முடிக்கிறான். அதிகாரிகள் அந்த ஓவியத்தைப் பார்த்து பிரமித்துப் போகிறார்கள். அடுத்ததாக, ஒரு பிச்சைக்காரன் தங்கள் நிறுவன காஃபி கோப்பையுடன் இருப்பது போல் ஒரு ஓவியம் வேண்டும். ‘அதனையும் நீங்களே வரைந்து கொடுக்க முடியுமா’ என்று கேட்கிறார்கள். ஆனால், ஒரே நாளில் ஓவியம் வேண்டும் என்றும் அதற்காக இரு மடங்கு பணம் கொடுப்பதாகவும் சொல்கிறார்கள். ரகுநாத் சில மணித்துளிகள் யோசித்து, பின்னர் சம்மதிக்கிறான்.

மறுநாள் காலை, ஒரு பிச்சைக்காரன் கையில் காஃபி கோப்பையுடன் ரகுநாத்தை எழுப்புகிறான். ‘‘சாமி எந்திரிங்க சாமி... வேலை இருக்குல்ல’’ என்கிறான். பிச்சைக்காரனின் அந்த வார்த்தைகளோடு படம் முடிகிறது.

கதையை விவரிக்கும் இதே போக்கில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருந்தால், அதில் ஒன்றும் பெரிய சுவாரசியமில்லை. ஆனால், அழகான பெண்ணை காதலி போல வடிவமைத்துவிட்டு, இறுதி யில் பிச்சைக்காரன் கதாபாத்திரம் மூலம், இருவருமே ஓவியனின் மனச் சிதைவால், அவனுக்குள் உருவான கதாபாத்திரங்கள் என்கிற உண்மையைக் கட்டவிழ்க்கும் திரைக்கதை யுக்திதான் இந்தக் குறும்படத்தை தனித்துக் காட்டுகிறது. ஒரு இயக்குனர் தான் உருவாக்கும் உலகத்திற்குள், அவரே முதலில் முழுவதுமாகச் செல்ல வேண்டும்.

ஒரு அமானுஷ்ய உலகை உருவாக்கினால், பார்வையாளன் திகிலடைய வேண்டிய இடத்தில், இயக்குனரே முதலில் திகிலடைந்து இருக்க வேண்டும். ‘நிழல்’ குறும்படத்தில் இயக்குனர் மிகத் தெளிவாக தான் கட்டமைத்த உலகத்திலேயே சஞ்சரிக்கிறார். அவரே சிஷோஃப்ரினியா மனச் சிதைவால் பாதிக்கப்பட்ட ஒரு நபராக மாறி, காட்சியமைப்புகளைக் கூர் தீட்டுகிறார்.

உதாரணமாக, ஓவியர் கதாபாத்திரம் முதல் நாள் தூக்கத்தில் இருந்து விழிப்பு நிலைக்கு வருவதற்கு முன்னர், ஓர் ஒளி ஜன்னல் வழியே வருகிறது. அடுத்த ஷாட்டில், ஓவியர் மீண்டும் தூங்கிக்கொண்டிருக்கிறார். சில நொடிகளில் மாறும் காட்சியில், எதிரில் ஒரு பெண் காஃபி கோப்பையுடன் அமர்ந்து அவனை எழுப்பிக்கொண்டிருக்கிறாள். இதே ஒளி, பிச்சைக்காரன் கதாபாத்திரம் ஓவியனை எழுப்பும்போதும் அவன் மீது பட்டு மறைகிறது.

இன்னொரு காட்சியில், காஃபி வேண்டுமா என்று கேட்கும் பெண் கதாபாத்திரம், ‘‘வேணும்னா நீயே போய் போட்டுக்கோ’’ என்று அவனிடம் சொல்லிவிட்டு, தன் வேலையைப் பார்க்கிறது. ஓவியனுக்காக, அவனது கற்பனைக் கதாபாத்திரங்கள் ஒருபோதும் சேவகம் செய்வதில்லை.

இதெல்லாம் கற்பனைக் கதாபாத்திரங்கள்தான் என்பதை ஏதோ ஒரு இடத்தில், படத்தின் இயக்குனர் பார்வையாளர்களிடம் மறைமுகமாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால், பார்வையாளர்கள் அதனை உணரும் முன்னர் அடுத்த காட்சிக்குள் அவர்களைக் கடத்தி, முன்னதை மறக்கடிக்கவும் செய்கிறார்.

 இறுதியாகத்தான் இயக்குனர் உண்மையை கதாபாத்திரங்கள் மூலம் உணர்த்துகிறார். ஒரே ஒரு காட்சியை வைத்துக்கொண்டு, அதனை இரு வேறுபட்ட நிலப்பரப்பு, அல்லது காலத்தைக் குறிக்க பயன்படுத்திக்கொள்ளும் மாபெரும் சாத்தியக்கூறு சினிமாவில் உண்டு.

இந்தக் குறும்படத்தில், படம் தொடங்கும் முதல் காட்சியில், சூரிய உதயத்தை வலது பக்கத்திலிருந்து, இடது பக்கமாக பான் (றிகிழி) ஷாட்டில் காட்டியிருப்பார்கள். ஒரு நாள் முடிகிறது, பெண் கதாபாத்திரம் மறைகிறது. மறுநாள் வருகிறது, பிச்சைக்காரன் கதாபாத்திரம் கதையின் உள்ளே நுழைய வேண்டும். மறுநாள் என்பதைக் குறிக்க, அதே சூரிய உதயக் காட்சியைப் பயன்படுத்தியிருப்பார்கள். அதே சூரிய உதயக் காட்சி என்பதற்கு பதிலாக, மறுநாள் என்பதுதான் பார்வையாளன் மனதில் பதியும்.

காஃபி நிறுவன அதிகாரி கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான நபரைத் தேர்ந்தெடுத்திருக்கும் இயக்குனர், பிச்சைக்காரன் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமற்ற நபரைத் தேர்வு செய்திருக்கிறார். பெண் கதாபாத்திரம், தேமேயென்று வந்து போவது போன்ற சில குறைபாடுகளை தவிர்த்திருக்கலாம்.

சூரிய உதயமாகும் காட்சி யில் கூட, ரொமான்டிக்காக ஒரு இசைக் கோர்வையைச் சேர்த்து, இயற்கையின் மௌனத்தையும் சேதப்படுத்தி இருக்கிறார்கள். இருந்தாலும், இறுதிக் காட்சியில் ஒலிக்கும் இசை, படத்தில் ஒரு கதாபாத்திரமாக மாறி, திரைக்கதையின் ரகசியத்தை உடைக்கிறது. பிச்சைக்காரன் வந்தவுடன் ஒலிக்கும் இசைதான், ‘அட இவங்க எல்லாம் கற்பனைக் கதாபாத்திரங்கள்’ என்பதை உறுதி செய்கிறது.

பார்வையாளர்களை அச்சுறுத்துவது ஒருபோதும் நல்ல படைப்பாக இருக்க முடியாது. ஒரு நோயைக் கூட, அழகியலோடு பதிவு செய்ய வேண்டும்.

குறும்படம்: நிழல்             இயக்கம்: ஙி. சுகந்தன்
நேரம்: 8.53 நிமிடங்கள்                     ஒளிப்பதிவு: வி. அரவிந்த்
இசை: அஸ்வத்             படத்தொகுப்பு: அருண்குமார்
பார்க்க: https://www.youtube.com/watch?v=w4ynCh4EIxc-feature=youtu.be
கணிப்பொறி தொடர்பான படிப்பில் பட்டயப் படிப்பை முடித்துவிட்டு, கோவையில் படத்தொகுப்பு வேலையைச் செய்துகொண்டிருக்கிறார் சுகந்தன். சாதாரணமாக கதை சொல்வதை விட, அதிகம் பரிச்சயமில்லாத, சிஷோஃப்ரினியா போன்ற மனித மனம் சார்ந்த பிரச்னைகளை மையப்படுத்தி படம் எடுக்கும்போது அதன் வீச்சும் அதிகமாகவே இருக்கும். மிகக் குறைந்த... அதாவது, ஐந்தாயிரம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்தக் குறும்படம், தமிழ்நாட்டில் சில திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்றிருக்கிறது.

(சித்திரங்கள் பேசும்...)

ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி