கெட்ட பய சார் இந்த ஆம்பளை!
ஆயிரத்தில் ஒருவனே தலைவனாக இருப்பான். மற்ற 999 பேரும் அவனையல்ல... பெண்களைத்தான் பின் தொடர்வார்கள்!
க்ரவ்ச்சோ மார்க்ஸ்

மிக மிகக் குறுகலான அந்த சந்துக்குள் கார் ஒன்று வர, லேசாக டிராபிக் பிடித்துக்கொண்டது. ஓரமாய் ஒரே ஒரு சைக்கிள் கேப். ஸ்கூட்டி ஒன்று அவசரமாய் அதற்குள் புகுந்து போக முயற்சித்தது. ரோட்டின் ஓரம்... கிட்டத்தட்ட பிளாட்பாரத்தில் ஏற்றி நிறுத்தப்பட்டிருந்த ஒரு அப்பாவி டூ வீலரை இந்த ஸ்கூட்டி பக்கவாட்டில் இடிக்க, அது குடை சாய்ந்துவிட்டது. ஸ்கூட்டியில் வந்தவர்கள் இரண்டு இளம்பெண்கள்.
அதற்கு மேல் செல்ல டிராபிக் அனுமதிக்காததால் நின்றுவிட்டார்கள். அதிகபட்சம் கல்லூரி படிக்கும் வயதிருக்கலாம். பார்த்த மாத்திரத்தில் எதிர்பாலினரை ஈர்க்கக் கூடியவர்களை ஆல்ஃபா மேல், ஆல்ஃபா ஃபீமேல் என்பார்கள்.
அந்த இருவருமே ஆல்ஃபா ஃபீமேல்!‘‘எவன்டா அவன்...’’ என வெகுண்டு கிளம்பிய ஏழெட்டு பேர், இவர்களைப் பார்த்ததும் ஆஃப் ஆகி நின்றார்கள். இடித்த பதற்றத்தில் ஒரு பெண் தன் கணுக்காலில் அடிபட்டிருக்கிறதா எனத் தடவிப் பார்க்க, ‘‘என்னாச்சும்மா?’’ என அக்கறையைக் கொட்டினார் ஒருவர். பலரும் அதையே வழிமொழிந்தனர். பயங்கரமாய் கெட்ட வார்த்தை பேசுவார் போல என எதிர்பார்க்கப்பட்ட ஒரு ‘காதல் தண்டபாணி’ கூட, ‘‘பார்த்துப் போவக் கூடாதாம்மா?’’ என சாஃப்ட் ஆனார்.
இதில் பரிதாபத்துக்குரியவர், சாய்க்கப்பட்ட வண்டியின் சொந்தக்காரர். வேறு யாருடைய வண்டியாவது சிக்கியிருந்தால் அவரும் அந்தப் பெண்கள் மீதுதான் இரக்கப்பட்டிருப்பார். இப்போது அவர் வண்டியில் ஒரு பக்க இண்டிகேட்டரும் க்ளட்ச் லீவரும் அவுட். பொறுக்க முடியாமல் அவர் மட்டும் இந்தப் பெண்களைப் பார்த்து சத்தம் போட்டார். அதற்கு போதுமான ஆதரவு திரளவில்லை. அமைதியாய் இருந்தால், இந்த உலகம் நம்மை ஏமாற்றி விடும் என யாரோ அந்தப் பெண்களுக்கு சொல்லி வளர்த்திருப்பார்கள் போல.
‘‘வண்டியை ஏன் பிளாட்பார்ம்ல நிறுத்தறீங்க?’’ என அவர்கள் வினோத நியாயம் பேசி அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்துவிட்டுக் கிளம்பிவிட்டார்கள். சத்தியமாய் இதே வயதொத்த இரண்டு பையன்கள், இப்படி ஒரு வண்டியை இடித்துவிட்டு இந்த மாதிரி பேசியிருக்கவே முடியாது. சட்டையை இறுக்கி சடார் என ஓர் அறை... அதற்குப் பின்புதான் அவர்கள் யாரென்றே இந்தச் சமூகம் கேட்டிருக்கும்.பொதுவாக இப்படிப்பட்ட தருணங்களைப் பற்றி ஆண்களை விட பெண்கள்தான் நுட்பமாக சிந்திக்கிறார்கள்.
‘‘இதே, ஒரு கெழவியா இருந்தா வுட்ருப்பானுங்களா?’’ - டீக்கடைக்கு வந்த ஒரு அம்மா நம்மிடம் இப்படிப் புலம்பிச் சென்றார். உண்மைதான். இதுவே அவர்கள் ஆல்ஃபா ஃபீமேலாக இல்லாமல், கொஞ்சம் அழகு குறைந்திருந்தால் கூட, ஏதோ ஒரு தண்டனையை இந்தச் சமூகம் கொடுத்திருக்கும். அட்லீஸ்ட், சாவியைப் பிடுங்கி வைத்து, ‘அப்பா, அம்மாவை அழைத்து வா’ என்றாவது சொல்லியிருக்கும். சிவப்பழகு விளம்பரங்களில் வருவது போல இந்தச் சலுகையை ‘பவர் ஆஃப் பியூட்டி’யாக அந்தப் பெண்கள் பார்க்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு..?
அதற்காக பெண்களுக்கு செல்லுமிடமெல்லாம் சலுகை என்று அர்த்தமில்லை. பெண்தானே என்ற இளக்காரத்தோடு இந்த மாதிரி தருணங்களில் அத்துமீறுகிறவர்களும் உண்டு. அதிகம் மிரட்டி காசு பிடுங்குகிறவர்களும் உண்டு. சொல்லப் போனால், பெரும்பாலான சமயங்களில் நடப்பது இதுதான். கொடுத்தால் சலுகை...
இல்லாவிட்டால் இளக்காரம்... ஆண்களால் பெண்களை இந்த இருவிதத்தில்தான் அணுக முடியுமா? சக ஆண்களிடம் எப்படி நடந்துகொள்வோமோ அப்படியே பெண்களிடமும் நடந்து கொள்ள முடியாதா? மேற்கண்ட சம்பவத்தில் அந்த ஏழெட்டு ஆண்களும் ‘வாவ்... பொண்ணு’ என்ற மயக்கமும் இன்றி, ‘ப்பூ... பொண்ணுதான்’ என்ற அலட்சியமும் இன்றி அவர்களை டீல் பண்ணியிருக்க முடியுமா? அது சாத்தியமா?
சாத்தியம்! அந்த ஏழெட்டு ஆண்களும் கடந்த அரை மணிநேரத்துக்குள் செக்ஸ் அல்லது சுய இன்பம் அனுபவித்திருந்தால் அது சாத்தியம்!நமக்குத்தான் இந்தத் தகவல் ஆச்சரியம். மேற்கு நாடுகளில் இது பாரம்பரிய நம்பிக்கை.
‘முதல்முறையாக உன் காதலியோடு டேட்டிங் போகிறாயா? அவளிடம் பதற்றப்படக் கூடாது என்றால்... அவசரக் குடுக்கையாக படுக்கைக்கு அவளை இழுத்துவிடக் கூடாது என்றால்... பார்வையில் ஆபாசம் காட்டாமல், பாசமாக அவளை டீல் பண்ண வேண்டும் என்றால்... சுய இன்பம் அனுபவித்துவிட்டுப் போ’ என்கிறது ஐரோப்பியர்களின் நம்பிக்கை.
‘வெளியேறத் துடிக்கும் விந்து, எப்போதும் ஒரு கருப்பையைத் தேடிக் கொண்டிருக்கும். அதன் அடையாளம்தான் நீங்கள் ஒரு பெண்ணிடம் பல் இளிப்பது’ என இதற்கு விளக்கமும் தருகிறார்கள் உளவியலாளர்கள். ‘‘தமிழ்நாட்டில் செக்ஸ் வறட்சி இருக்கிறது... அதனால்தான் பெண்களை யாரும் இயல்பாய் பார்ப்பதில்லை’’ எனத் தமிழ் எழுத்தாளர் ஒருவர் சொன்னதை இங்கு இணைத்துப் பார்க்கலாம்.
‘‘செக்ஸும், சுய இன்பமும் ஆண்களின் பதற்றத்தைக் குறைக்கும் என்பது அறிவியல் உண்மை. முக்கியமான மீட்டிங் செல்பவர்களை சுய இன்பம் அனுபவிக்க வைத்து ஸ்காட்லாந்தில் ஒரு விநோத ஆராய்ச்சி செய்தார்கள். ரிசல்ட்... அவர்களிடம் நிதானமும் கவனமும் அதிகரித்தது... தவறுகள் குறைந்தது!’’ என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த செக்ஸ்பர்ட்டான, டாக்டர் குளோரியா ப்ரேம்.
இந்த ‘சுய வைத்திய’த்துக்கு மைனஸ் பாயின்ட் உண்டு. ஆணின் பதற்றத்தோடு சேர்த்து படைப்பாற்றலையும் இது குறைத்துவிடுமாம். பெண்களைக் கவர முயற்சிக்கும் பிரயத்தனமாகத்தான் பெரும்பாலான கலைகள் படைக்கப்பட்டிருக்கின்றன. அது குறையும்போது இதுவும் குறையும் என்பதே லாஜிக்.
நம் ஊரில் இந்த கான்செப்ட் செல்லுபடியாகுமா? மனநல மருத்துவர் ஷாலினியிடம் கேட்டோம்...‘‘அறிவியலின்படி, செக்ஸும் சுய இன்பமும் ஒரு மனிதனை சில மணிநேரங்களுக்கு நிதானமாக்கும் என்பதுதான் உண்மை. ஆனால், நிதர்சனம் வேறு. நம் ஊரில், ‘சுய இன்பம் பெரிய பாவம், அதனால் ஆண்மை போய்விடும், உயிருக்கே ஆபத்து’ என மூட நம்பிக்கைகள் ஏராளம்.
இதனால், இங்கே சுய இன்பம் கொண்டவருக்கு குற்றஉணர்ச்சியும் பதற்றமும் அதிகரிக்கத்தான் வாய்ப்புண்டு. மேலும், போர்னோகிராஃபி மூலம் வக்கிர எண்ணங்களால் தூண்டப்பட்டு சுய இன்பம் கொண்டிருந்தால், அது இன்னும் அப்நார்மல் நடவடிக்கைகளை நோக்கித்தான் அவர்களைத் தள்ளும்.
பெண்ணுடன் செக்ஸ் கொண்டவர்களுக்காவது சபலம் குறையுமா என்றால், அதுவும் ஏட்டுச் சுரைக்காய்தான். நடைமுறை வாழ்வில் எல்லா ஆண்களும் ஒரே மாதிரி கிடையாது. சில ஆண்களுக்கு தாங்கள் செக்ஸ் வைத்துக்கொண்ட அந்தப் பெண்களோடுதான் மறுபடி காதல் பிறக்காது. வெரைட்டி தேடும் அவர்களின் மனம், வேறு பெண்களைப் பார்த்ததும் சபலப்படும். அவர்களைக் கவரும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும்’’ என்றார் அவர்.
செக்ஸ், அப்படியே ஆண்களை நியாயஸ்தர்களாக மாற்றும் என்றாலும், ஒரு பொது இடத்தில் நூறில் ஒருவர் இந்த வகை ‘தற்காலிக நியாயஸ்தராக’ இருந்தாலே அதிகம். பெண்களுக்காவது மாதம் ஒருமுறைதான் மூட் மாற்றம்... ஆண்களுக்கு நிமிடத்துக்கு நிமிடம் மனம் ஜிம்னாஸ்டிக் பல்டி அடிக்கிறது. இவர்களோடுதான் பெண்களும் காலம் தள்ள வேண்டியிருக்கிறது.
‘‘அது எப்படி பொண்ணையும் ஆணையும் ஒரே மாதிரி டீல் பண்ண முடியும்? பையன்னா சட்டுனு அவனை அசிங்கமா திட்டுவோம். அது அவன் அம்மாவை, பொண்டாட்டியைக் கேவலப்படுத்துற வார்த்தையாதான் இருக்கும். அதுவே பொண்ணுன்னா, அவளையே தான் நேரடியா திட்டணும். அது செக்ஸுவல் ஹராஸ்மென்ட் ஆகிடுமே!’’ - நண்பர் ஒருவர் இந்த விஷயத்தில் செம லாஜிக் சொன்னார். ஆக, கெட்ட வார்த்தைகள் பற்றியும்... டேய் அந்த பாட்டில்ல இருந்ததை காய்ச்சியாடா காபி கலந்தீங்க? அது பினாயிலாச்சேடா!
காபி சூப்பர்!
தேடுவோம்...
கோகுலவாச நவநீதன்