குமரவேலுக்கு பெண் பார்க்க வந்திருந்தார்கள் குடும்பத்தினர். அப்பா, அம்மா, சகோதரிகள் எல்லாம் ஆஜர்! ஆனால், காலையில் அவசர வேலையாகக் கூப்பிட்டதால் கிளம்பிய குமரவேல் இன்னும் வரவில்லை.

மாப்பிள்ளை வராமல் எப்படிப் பெண் பார்க்க?‘‘டேய் எங்கடா இருக்கே?... தாம்பரத்திலா? எப்போ வருவே? சரியா பத்து நிமிஷத்தில் வந்துடுவியா? சரி சீக்கிரம்!’’ - குமரவேலின் அப்பா மகனிடம் பேசிவிட்டு, ‘‘இப்போ வந்துடுவான்!’’ என்றார் பெண் வீட்டாரிடம்.
அவர்களுக்கு திக்கென்றது. தாம்பரத்திலிருந்து அங்கு வந்து சேர எப்படியும் 40 நிமிடமாகும். விரட்டி வந்தாலும் 30 நிமிடம் நிச்சயம். பத்து நிமிடத்தில் இவர் மட்டும் எப்படி வருவார்?
ஆனால், சரியாக பத்து நிமிடத்தில் கலைந்த தலையோடு வந்து நின்றான் குமரவேல்.
‘‘நாங்க சொல்றோம்னு தப்பா நினைச்சுக்காதீங்க. இவ்வளவு வேகமா வண்டி ஓட்டுறவரைக் கட்டிக்கிட்டா என் பொண்ணு தினம் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டுல்ல இருக்கணும்...’’
பெண்ணின் தந்தை தயங்கிச் சொல்ல, விருட்டென எழுந்தபடி சொன்னான் குமாரவேல்... ‘‘சாரிங்க... நீங்க சொல்ற மாதிரி என்னால மெதுவாக வண்டி ஓட்ட முடியாது. புரோக்கர் என் வேலையைப் பத்தி சொல்லலையா? நான் 108 ஆம்புலன்ஸோட டிரைவர். பக்கத்து ஆஸ்பத்திரில ஒரு பேஷன்ட்டை இறக்கி விட்டுட்டு அப்படியே வர்றேன்!’’
றீசுபா-கர்