கொடுமை



எனக்கும் என் மாமியாருக்கும் ஒத்துப் போவதே இல்லை. சதா எந்நேரமும் நான் செய்யும் வேலைகளில் எதாவது குற்றம் கண்டுபிடிப்பதும், பிறகு அதை வைத்து தேள் கொட்டுவது போல் வார்த்தையாலே என்னை கொல்வதும்...

அப்பப்பா!  நரக வேதனை. இதை பற்றி அடிக்கடி சசியிடம் சொல்வேன். சசி காதில் வாங்கிக் கொண்டதே இல்லை. ஆனால், இன்று என்னிடம் கை ஓங்கும் அளவுக்கு என் மாமியார் வந்து விட்டார்.

இனியும் பொறுக்க முடியாது. வெளியே போயிருக்கும் என் மாமனார் வரட்டும்! காத்திருந்தேன்.மாலை ஆறு மணிக்கு மேல் அவர் வந்தார். நேராக அவரிடம் போனேன்... ‘‘இதோ பாருங்க மாமா!  அத்தை பண்றது கொஞ்சம் கூட சரியில்லை. அம்மா செல்லமா இருக்கறதால சசிதான் அத்தையை ஒண்ணும் கேக்கலைன்னா,

நீங்களும் கேக்காம இருந்தா எப்படி மாமா? எல்லா வேலையும் செஞ்சுட்டு அவங்ககிட்ட வாங்கிக் கட்டிக்கணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா? நான் இப்பவே வீட்டை விட்டுப் போறேன். என் கூட தனிக்குடித்தனம் நடத்த உங்க பொண்ணு சசிக்கு எப்ப விருப்பம் வருதோ, அப்ப அனுப்பி வையுங்க... போதும்!’’திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பித்தேன்.       

எஸ்.எஸ்.பூங்கதிர்