நடைவெளிப் பயணம்



பெர்முடா   
                 
அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சிறு கொத்துத் தீவுகள் 'பெர்முடா’ என்ற பெயர் கொண்டவை. அது எப்படி ஓர் உடைக்குப் பெயரானது என்று தெரியவில்லை. ஒரு பெண் கவிஞர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அன்று அவர் அணிந்திருந்த அது எனக்குப் புதிதாக இருந்தது. ‘‘ஏன் கால் சட்டை இவ்வளவு குட்டையாக இருக்கிறது?’’ என்று கேட்டேன்.
‘‘இது பெர்முடா...’’‘‘அப்படியா? அது ஒரு தீவுக்குப் பெயர் இல்லை?’’“இல்லை.

இந்த மாதிரி உடைக்கு பெர்முடா என்றுதான் பெயர்’’. எங்கள் உரையாடல் ஒரு நகுலன் கவிதை போல இருந்தது.இளம் வயதில் நாங்கள் படித்த பள்ளியில் சீருடை கிடையாது. அநேகமாக சட்டை - அரை டிராயர் போட்டுக் கொண்டு போவோம்.

ஓடியாடி சுவர் மீது குதித்து, பெஞ்ச் மீது தாண்டி, பாரலெல் பாரில் பூனை எலி ஆட்டம் ஆட... அரை டிராயர்தான் சௌகரியமாக இருந்தது. எங்கள் பி.டி. மாஸ்டர் ஒரு குஸ்தி பயில்வான். ஆதலால் வாரத்தில் ஒரு நாள் எல்லாரும் குஸ்தி போட வேண்டும். இரண்டு குஸ்திப் பள்ளங்கள் இருந்தன. நிறைய மணல் போட்டு இருக்கும். பயன்படுத்த வேண்டாமா?

கல்லூரியில் கால் தெரியக்கூடாது. பைஜாமா அல்லது பேன்ட். கட்டாயம் கோட் அணிய வேண்டும். பைஜாமா போட்டுக்கொள்பவர்கள் மட்டும் சட்டையை வெளியில் விட்டுக்கொண்டு அதன் மீது கோட் போட்டுக் கொள்ள வேண்டும். மசூத் அலிகான் போன்றவர்கள் கழுத்திலிருந்து முழங்கால் வரை ஷெர்வானி போட்டுக் கொள்வார்கள்.

 இந்த ஷெர்வானிதான் எவ்வளவு சௌகரியம்! சட்டை இல்லாமலேயே ஷெர்வானியைப் போட்டுக்கொண்டு விடலாம். நிறைய பைகள். வீட்டில் பாதி சாமான்களைத் தூக்கிக் கொண்டு வந்துவிடலாம். ஆனால் அப்போதே அது தைக்கப் பதினைந்து ரூபாய் கூலி! துணியும் வேறு நிறைய வேண்டும்.

எங்கள் ஊர் பைஜாமா, நாடா வைத்ததாக இருக்காது. பேன்ட் மாதிரியே பைகளுடன், பொத்தான்களுடன் தைக்கப் பட்டிருக்கும். கால் அடிப்பாகத்தில் எவ்வளவு தொள தொளவென்று இருக்க வேண்டும்? இருபத்து நான்கு அங்குலங்கள் சராசரி. கீழ் மடிப்பு? மூன்று அங்குலமாவது இருக்க வேண்டும். நான் பல நாட்கள் காலுக்குச் செருப்பு, ஷூ இல்லாமல் போயிருக்கிறேன். ஆனால் கோட் இல்லாமல் போனதில்லை.

இன்று உடைகள் விஷயத்தில் மிகப் பெரிய புரட்சி நிகழ்ந்திருக்கிறது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பெண்கள் விஷயத்தில் சல்வார் கமீஸ். அது சௌகரியமாக இருக்க வேண்டும். பெண்களின் உடைகள் விஷயத்தில் வீட்டுப் பெரியவர்கள் கேட்பது,

‘‘ஏண்டி இப்படி வந்து நிக்கறே?’’ இதில் ஒரு விஷயம், எதிர்க்கும் யாருக்கும் எதைக் குறை சொல்வது என்று தெளிவாகச் சொல்ல முடியாது. அவர்களுக்குப் பழக்கப்பட்ட உடை இல்லை, அதனால் எதிர்க்க வேண்டும். ஆனால் விரைவிலேயே ஒத்துக்கொண்டு விடுகிறார்கள்.

எங்கள் பைஜாமா நடந்து போகும்போது பெரிய சங்கடமில்லை. ஆனால் சைக்கிளில் போகும்போது? அந்த நாளில் ‘செயின் கார்ட்’ என்பது சைக்கிளோடு வராது. நாம்தான் தனியாக வாங்கிப் பொருத்திக் கொள்ள வேண்டும். சைக்கிள் அயல்நாட்டில் செய்யப்பட்டது. அயல்நாட்டில் தொளதொளவென்று பேன்ட் அல்லது டிரௌசர் போட்டுக்கொள்ள மாட்டார்களா? உண்டு. அவர்கள் கால் கிளிப் தயக்கமில்லாமல் போட்டுக் கொள்வார்கள். எனக்கு இந்த கால் க்ளிப் போட்டுக்கொள்வது உலகத்தில் மிகக் கடினமான காரியங்களில் ஒன்று.

டிரௌசரின் மடிப்பைக் கலைத்துவிடும். தொலைந்து போய் விடும். துருப் பிடித்து விடும். உண்மையில் க்ளிப் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அது இல்லாமல் சைக்கிளில் அரை நிமிடம் போக முடியாது. பைஜாமா பல் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு, அந்தக் கறை என்ன சவுக்காரம் போட்டாலும் போகாது. இப்போது தொளதொளவெனப் பெண்கள் பைஜாமா போட்டுக்கொள்கிறார்கள்.

 அவர்கள் சைக்கிளில் போகாது இருப்பது நல்லது. என்னைப் பார்க்க வந்த கவிஞர் சைக்கிளில் வந்தாரோ? பெர்முடா அணிந்து கொண்டு துணி சைக்கிள் சங்கிலியில் மாட்டிக் கொள்ளுமே என்று அஞ்ச வேண்டியதில்லை. ஆனால் அவர் சைக்கிளில் வரவில்லை. இப்பொது ஆண்கள் பெர்முடா அணிகிறார்கள். ஒரு படி கீழே போய் அரை டிராயர் போட்டுக் கொள்கிறார்கள். எங்கள் தெருவில் குறைந்தது இருபது ஆண்கள் இருப்பார்கள்.

இதில் பாதி நபர்கள் அரை டிராயர் போட்டுக்கொண்டு தைரியமாக வெளியே வருகிறார்கள். இவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்கள் பணியில் இருந்த நாட்களில் அரை டிராயர் போட்டுக்கொண்டு அலுவலகம் போயிருப்பார்களா? இதில் ஐந்தாறு பேருக்கு தினம் பொது மக்களை சந்திக்க வேண்டிய வேலை. அப்போது அரை டிராயர் பொருத்தமாக இருந்திருக்குமா?

ஒரு முறை ஒரு லுங்கி தயாரிப்பாளர் ஒரு விளம்பர வீடியோ தயாரித்திருந்தார். வாய்ப்பு கிடைத்தால் காவல்துறைக்காரர்கள் லுங்கி அணிவார்கள். வக்கீல்கள் நீதிமன்றத்துக்கு லுங்கி கட்டிக் கொண்டு ஆஜர் ஆவார்கள். அதே போல டாக்டர்கள், மின்வாரிய ஊழியர்கள், என அவர் லுங்கியின் சாத்தியத்தை சற்று விரிவாகவே கற்பனை செய்திருந்தார். அந்தக் கற்பனையே
பயமாக இருந்தது.

என் உறவுப் பையன் இந்தியாவின் மிகப் பெரிய, மிகச் சிறப்பான தொழிற்சாலையில் ஊழியம் செய்து கொண்டிருந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. பெண் வீட்டில் அரை சவரன் மோதிரம் போட்டிருந்தார்கள். அதைப் போட்டுக்கொண்டு அவன் வேலைக்குப் போயிருக்கிறான். மேலதிகாரி மோதிரத்தைப் பார்த்திருக்கிறார். அரை மணி நேரத்தில் அந்தப் பையனுக்கு வேலை நீக்க உத்தரவு கொடுக்கப்பட்டுவிட்டது. அவனும் என்னென்னவோ விளக்கங்கள் கூறிப் பார்த்திருக்கிறான். அவன் தந்தை தன் பங்குக்கு அந்த அலுவலகம் சென்று மன்றாடினார்.

ஒன்றும் நடக்கவில்லை. வேலை போனது போனதுதான். லேத், பாண்ட் ரம்பம், துளை போடுவது போன்ற வேலைகளில் இருப்பவர்கள் மட்டும் இல்லை, கார் சக்கரத்துக்குக் காற்று அடிப்பவர்கள், டிரைவர்கள் கூட அந்தக் கம்பெனியில் நகை என்று கைகளில் அணிந்து கொள்ளமுடியாது. விபத்து எப்படியும் நடக்கும். ஆனால் தொழிலாளி சில விதிமுறைகளை மீறவே கூடாது.

அதே போல உடை, சீருடைதான். அதை எப்படி அணிய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த சட்ட திட்டங்கள் அந்தக் கம்பெனி நிவாரணம் தரக்கூடாது என்பதற்காக மட்டும் அல்ல. ஒரு தொழிலாளிக்கு நிறைய செலவிட்டு பயிற்சி தந்து, விபத்து மூலம் இழக்க வேண்டியிருக்கிறது. வக்கீல்களுக்கு ஒரு மாதிரியான உடை, போலீஸ்காரர்களுக்கு ஒரு மாதிரியான உடை எல்லாம் அவர்கள் என்ன பணி புரிபவர்கள் என்று பொதுமக்கள் சட்டென்று கண்டு கொள்வதற்குத்தான்.

இந்த ஷெர்வானிதான் எவ்வளவு சௌகரியம்! சட்டை இல்லாமலேயே ஷெர்வானியைப் போட்டுக்கொண்டு விடலாம். நிறைய பைகள். வீட்டில் பாதி சாமான்களைத் தூக்கிக் கொண்டு வந்துவிடலாம்.

படிக்க...

‘கால் முளைத்த மனம்’, ‘திசைகாட்டி’, ‘ஃபிரேக்ரன்ஸ் ஆஃப் ரெயின்’... இவையெல்லாம் கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன் எழுதியவை. அவர் குறிப்பாகக் கவிஞர் என்று அறியப்பட்டாலும், சிறுகதைகள், கட்டுரைகள், கடந்த காலக் குறிப்புகள் என நிறையவே எழுதியிருக்கிறார்.

தற்கால இலக்கியக் கணக்காயர் கே.ஏ.சச்சி தானந்தன் சொற்களில் கூற வேண்டுமானால், வைத்தீஸ்வரனைப் படித்தால் நேரத்தை வீணாக்கின எண்ணம் வராது. பல பதிப்பாளர்கள் அவருடைய நூல்களை வெளியிட்டிருக்கிற படியால் அவர் முகவரியிலேயே பிரதிகள் பெற்றுக் கொள்ளலாம். அவர் முகவரி: எஸ்.வைத்தீஸ்வரன், 6, பாலாஜி தெரு, சென்னை 600024. தொலைபேசி: 99401 26407.   

வைத்தீஸ்வரனைச் சொல்பவர்கள் கூடவே ஞானக்கூத்தனையும் கூறுவார்கள். இவர் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவருடைய ‘மோசிகீரா’ கவிதை ஓர் இலக்கியப் புரட்சியையே நிகழ்த்தியது. அதுவரை புதுக்கவிதையைக் கேலி செய்த பலரும், வாயை மூடிக் கொண்டு அந்த வடிவத்தைக் கையாளத் தொடங்கினார்கள். ஞானக்கூத்தன் நூல்கள் கிடைக்குமிடம்: நவீன விருட்சம், அழகிய சிங்கர், 7, ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை-600033. இவர் படைப்புகளும் ஏமாற்றாது.

(பாதை நீளும்...)

அசோகமித்திரன்