பேசும் சித்திரங்கள்



தமிழ் ஸ்டுடியோ 20 அருண்

இரு குமிழ்கள்...

‘‘வரலாற்றின் பெரும்பாலான பகுதிகளில் பெண் எப்போதும் அறியப்படாதவளாகவே இருக்கிறாள்!’’
- வர்ஜினியா வுல்ஃப்

பெண்களின் மூளை, ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்களால் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே, தொலைபேசியில் பேசவும், சமையல் செய்யவும் முடியும். எளிதில் பல மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியும். அதனால்தான் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் பலர், பெண்களாக இருக்கிறார்கள். மூளை சார்ந்து மட்டுமே பெண்களின் உயர்வை இப்படி இன்னும் பல மடங்கு விவரிக்க முடியும். உயிரினங்களை மொத்தமாக பகுப்பாய்வுக்கு உட்படுத்தினால், பெண்களின் சிறப்பில் பாதியைக்கூட ஆண்களால் பெறமுடியாது.

ஆனால் மனித இனத்தில் பெண்கள் மீது திணிக்கப்படும் வன்முறைகள் அளவற்றவை. எப்போதும் சிறப்பான ஒன்றின் மீதுதான் எல்லோரது கவனமும் இருக்கும். அப்படிதான் பல சிறப்புகளை பெற்றிருக்கும் பெண்களின் மீது, பெண்ணுடல் மீது, ஆண்கள் தொடர்ச்சியாக பலவிதமான வன்முறைகளை ஏவியபடியே இருக்கிறார்கள். இதன் உச்சக்கட்டம்தான், பெண்களே தங்களை ஆண்களுக்கு அடுத்த வரிசையில் வைத்துப் பார்ப்பது. அதாவது, ‘ஆண் உயர்வானவன், எனவே பெண் அவனுக்குக் கீழ்படிதலோடு இருக்க வேண்டும்’ என்று பெண்களே கட்டமைத்துக் கொள்வது.

இந்த சமூகக் கட்டமைப்பு அவர்களை தொடர்ச்சியாகக் கேள்விக்கு உட்படுத்தி, உளவியல்ரீதியாக நொடிந்து போகச் செய்கிறது. பெண்களின் சுதந்திரத்திற்காகவும், அவர்கள்மீதான அடிமைத்தனத்திற்கு எதிராகவும் கூட இன்னொரு ஆண்தான் குரல்கொடுக்க வேண்டியுள்ளது. நிகழ்காலத்தில் இந்த நிலை மாறி, பெண்களே தங்களை முன்னிறுத்திக்கொண்டு, அடிமை விலங்கை உடைத்தெறிந்தாலும், அவர்களின் அகவுலகை அணுகி, அதில் இருந்து சில கதைகளை உருவாக்க ஆண்கள் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘இரு குமிழ்கள்’ சிறுகதையும் அதில் ஒன்று.

இந்த சிறுகதை, ‘ஒரு கோப்பை தேநீர்’ எனும் பெயரில் காட்சி வடிவத்திற்கு மாறியுள்ளது. வீட்டு வேலை பார்த்துவரும் சபீனா, அங்கு ஏற்படும் மனக்கசப்பால் வெளியேறுகிறாள். பட்டப்பகலில் ஒரு மருத்துவர் வீட்டில் திருடுகிறாள். ஆனால், காவல் துறையிடம் சிக்கிவிடுகிறாள். காவல்துறையைச் சேர்ந்த ஈஸ்வரியிடம் இவளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. தொடர்ந்து நான்கு வருடங்களாக கைதிகளுடன் போராடிக்கொண்டிருக்கும் ஈஸ்வரி, அலுத்துக்கொண்டே இவளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறாள். வழியில் பேருந்து கிடைக்க நேரமாகிறது.
இடையில் ஈஸ்வரியின் மாமா அவளை சந்திக்கிறார். அவளது திருமணம் பற்றிப் பேசுகிறார்.

‘‘இப்பவெல்லாம் சாஃப்ட்வேர் பசங்களுக்கு தோச சுட்டு போடற பொண்ணுங்கதான் தேவைப்படுது; துப்பாக்கி சுடுற பொம்பள எதுக்கு?’’ என்று கேட்டு அவளை சங்கடப்படுத்துகிறார். அதன்பின்னர் ஒரு ஆட்டோ பிடித்து சபீனாவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறாள் ஈஸ்வரி. வழியில் சபீனாவுக்கு மாதவிலக்கு ஏற்படுகிறது. முதலில் அதனை நம்ப மறுக்கும் ஈஸ்வரி, பின்னர் அவள் வலி கண்டு நம்புகிறாள். மெல்ல மெல்ல அந்தப் பெண் கைதி மீது பரிவு கொள்ளத் தொடங்குகிறாள். காவல்துறையைச் சேர்ந்த பெண்ணுக்கும், திருட்டுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயான நட்பு, ‘அவர்கள் பெண்கள்’ என்கிற ஒற்றைப்புள்ளியில் தொடங்குவதை இந்தக் குறும்படம் நேர்க்கோட்டில் விளக்க முற்படுகிறது.

‘ஒரு கோப்பை தேநீர்’ குறும்படத்தில் எந்தவிதமான திருப்புமுனை காட்சிகளும் இல்லை. வேகம் கூட்டும் திரைக்கதை அமைப்பு இல்லை. ஆனால், இவை மட்டுமே சினிமா அல்ல. நாம் அன்றாடம் பார்த்து, நமக்குள் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாத ஒரு நிகழ்வை, மிக நுட்பமான காட்சிமொழியால் அணுகும்போது, அது நமக்குள் பல அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. பெண்களை இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்குக் கூட அனுமதிக்காத பல பெற்றோர்களை நாம் அன்றாட வாழ்வில் சந்தித்திருப்போம். அதுகுறித்தெல்லாம், கவலை கொள்ளவோ, அந்த பெண்களுக்காக குரல் கொடுக்கவோ
ஒருபோதும் துணிந்திருக்க மாட்டோம்.

சவூதி அரேபியாவில் 2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘வஜ்தா’ என்கிற திரைப்படம், ஒரு சிறுமிக்கு மிதிவண்டி ஓட்டும் ஆசை ஏற்படுவதையும், அதற்காக அவள் படும் இன்னல்களையும் பற்றிப் பேசுகிறது. மிகப் பிரமாதமான காட்சிமொழியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் மிக காத்திரமானவை. படம் முடிந்த அடுத்த கணம், நமது வீட்டுப்பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்கிக்கொடுத்துவிட வேண்டும் என்கிற உணர்வை, அதிர்வுகள் மூலமாகவே இந்த திரைப்படம் விதைத்துவிடுகிறது. திரைப்படங்கள் பார்ப்பதற்கு மட்டுமேயல்ல, அவை நம்மை செயல்படவும் தூண்டுகிறது.

இந்தக் குறும்படமும், நாம் அன்றாடம் கடந்துபோகும் பல பெண்களைக் குறித்து சிந்திக்கக் கோருகிறது. ஒரு பெண் குற்றம் இழைக்க, அல்லது தவறான செயல்களில் ஈடுபட, ஒருபோதும் அவள் மட்டுமே காரணமாக இருப்பதில்லை. இந்த சமூகமும், ஆதிக்க ஆண்கள் செலுத்தும் வன்முறையும், அவளுக்குள் உளவியல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அந்த மாற்றங்களே தவறு செய்யத் தூண்டுகின்றன.

காவல்துறையைச் சேர்ந்த ஈஸ்வரி, பெண் கைதியான சபீனாவிடம், ‘‘நீ ஏன் திருட ஆரம்பிச்சே’’ என்று கேட்கிறாள்; சற்றும் யோசிக்காமல், சபீனா ஈஸ்வரியிடம் கேட்கிறாள், ‘‘நீ ஏன் போலீஸ் ஆன’’ என்று. திருடியாக இருக்கும் சபீனா அனுபவிக்கும் பிரச்னைகளை, போலீஸாக இருக்கும் ஈஸ்வரியும் அனுபவிக்கிறாள். ஆனால் அவளது துயரங்கள் கொஞ்சம் கௌரவமாக இருக்கின்றன, அவ்வளவுதான்! சபீனா கீழ்நிலையில் வைத்து துன்புறுத்தப்படுகிறாள். ஈஸ்வரி, கொஞ்சம் அந்தஸ்து கொடுத்து துன்புறுத்தப்படுகிறாள். ‘பெண்’ என்கிற காரணத்தால் இவர்கள் இருவரும் சந்திக்கும் பிரச்னைகளை, ஒரு மையப்புள்ளியில் வைத்து அலசு கிறது இந்தக் குறும்படம்.

தமிழ்த் திரைப்படங்கள் பேச மறுக்கும் பல விஷயங்களை, குறும்படங்கள் பேசுகின்றன. பெண்களுக்கு என்று சில பிரத்யேகமான பிரச்னைகள் உண்டு. ஆண்களால் ஒருபோதும் அதனை உள்வாங்கிக்கொண்டு, அவர்களை அவர்களுக்கு உரிய மரியாதையோடு நடத்த முடியாது. குறிப்பாக, கைதியாக இருக்கும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் எத்தகைய துயரத்தை அனுபவிக்க நேரிடும் என்பதை, இந்தக் குறும்படத்தின் வழியே உணர முடிகிறது. எந்தத் துறையாக இருந்தாலும், பெண் மீதும், அவள் உடல் மீதும் செலுத்தப்படும் வன்முறை மட்டும் மாறுவதில்லை. இதனை மாற்றுவதில் பெண்களுக்கு மட்டுமல்ல... ஒட்டுமொத்த சமூகத்திற்கே பெரும்பங்கு இருக்கிறது.

படம்: ஒரு கோப்பை தேநீர்
இயக்கம்: ஸ்ரீகணேஷ்
நேரம்: 09.53 நிமிடங்கள்
ஒளிப்பதிவு: ரவி வர்மா
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
படத்தொகுப்பு: பிக்சல்ஸ்
பார்க்க: www.youtube.com/watch?v=xFzBPC9zWuE-feature = youtu.be-fb_source

திருடியாக இருக்கும்
சபீனா அனுபவிக்கும்
பிரச்னைகளை, போலீஸாக இருக்கும் ஈஸ்வரியும்
அனுபவிக்கிறாள். ஆனால் அவளது துயரங்கள்
கொஞ்சம் கௌரவமாக இருக்கின்றன,
அவ்வளவுதான்!

தொடர் வாசிப்பு பழக்கம் இருக்கும் ஸ்ரீகணேஷ், எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த சிறுகதையைப் படித்தவுடன் அதனைக் குறும்படமாக எடுக்க முயற்சித்துள்ளார். எழுத்தாளர்கள் எப்போதும் சினிமாவை அதன் மொழியில் அணுகுவதற்கு பதிலாக, தங்கள் எழுத்து மொழியில் அணுகுவார்கள். அதனை சரி செய்ய வேண்டிய பெரிய பொறுப்பு இயக்குனர்களுக்கு இருக்கிறது. தவிர, நேர்கோட்டில் பயணிக்கும் கதையை சினிமாவாக எடுக்க ஒரு உந்துதல் வேண்டும்.

சினிமா பற்றிய ஒரு புரிதல் வேண்டும். இந்த மாதிரியான பெண்களின் அக உலகை அலசும் கதைகளைத் தெரிவு செய்ய, பெண்ணை சக மனுஷியாக பாவிக்கும் மனம் வேண்டும். சில குறைகள் இருந்தாலும், கவனிக்கப்பட வேண்டிய படமாகவே இதனை எடுத்திருக்கிறார் ஸ்ரீகணேஷ்.

(சித்திரங்கள் பேசும்...)
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி