வரதட்சனை கொடுமை சட்டம்...



கேடயமா? ஆயுதமா?

ஐ.பி.சி. 498-ஏ... பெண்ணியவாதிகளின் தொடர் போராட்டங்களின் விளைவால் கொண்டு வரப்பட்ட சட்டப்பிரிவு. மனைவியை வரதட்சணை கேட்டு மனரீதியாகவோ உடல் ரீதியாகவோ துன்புறுத்தினால் எவ்வித விசாரணையும் இன்றி கணவன் மற்றும் கணவன் குடும்பத்தினரை காவல்துறை கைது செய்யலாம். எளிதில் ஜாமீன் கிடைக்காது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை. இந்த சட்டத்தின் போக்கைத்தான் இப்போது முனை முறித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

பீகாரைச் சேர்ந்த ஆர்னேஷ்குமார் என்பவர், தன் மனைவி ஸ்வேதா தொடுத்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘பாதுகாக்கும் கேடயமாக உருவாக்கப்பட்ட இந்த சட்டத்தை பெண்கள் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக’ விமர்சித்திருக்கிறது. ‘7 வருடங்களுக்கு குறைவான சிறைத்தண்டனை கொண்ட எந்த சட்டப் பிரிவிலும், விசாரிக்காமல் போதிய காரணங்கள் இல்லாமல் கைது செய்தாலோ, சிறையில் அடைத்தாலோ, காவல்துறை மீதும் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் உலுக்கியிருக்கிறது.

சந்திரமௌலி கே.ஆர்.பிரசாத், பினாக்கி சந்திரஹூஸ் ஆகிய நீதி பதிகள் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு கடும் எதிர்ப்பையும், பரவலான வரவேற்பையும் ஒரு சேர உருவாக்கியிருக்கிறது. வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தின் நோக்கமே அழிந்து விட்டதாக குமுறுகிறார்கள் பெண்ணியவாதிகள். சிதைந்து கிடந்த இந்திய குடும்பக் கட்டமைப்பை காப்பாற்றி விட்டதாகப் பாராட்டுகிறது இன்னொரு தரப்பு.

யதார்த்தம் என்ன?


‘‘தடா, பொடா, வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள் உள்பட எல்லா சட்டங்களுமே சிலரால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதற்காக அந்த சட்டங்களை முடக்க வேண்டும் என்று எவரும் கேட்கவில்லை. புகாரை எந்தப் பிரிவில் பதிவு செய்வது என்பதைத் தீர்மானித்து, எப்.ஐ.ஆர். போடுவது, விசாரிப்பது எல்லாமே காவல்துறையின் வேலை. இதுபோன்ற
சட்டங்களை காவல்துறையில் உள்ளவர்கள் பணம் பார்ப்பதற்கு ஏதுவாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அதைத்தான் நீதிமன்றம் சொல்லி யிருக்கிறது. இந்த சட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 3 லட்சத்து 72,706 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அதில் 3 லட்சத்து 17 லட்சம் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டிய வகையில் இருப்பதாகவும் நீதிமன்றம் சொல்கிறது. இதற்கு காவல்துறை தான் பொறுப்பு. ஐ.பி.சி. 498-ஏ என்பது நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கொண்டு வரப்பட்ட சட்டம். சிலர் செய்யும் தவறுக்காக சட்டத்தையே முடக்குவது நியாயமல்ல’’ என்கிறார் இந்தியப் பெண் வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் சாந்தகுமாரி.

இந்தியா முழுவதும் 498-ஏ சட்டத்தால் பாதிக்கப்பட்ட கணவர்கள் ஒருங்கிணைந்து ‘இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள். இச்சட்டத்தை திருத்த வேண்டும் என்று நெடுங்காலமாக குரல் கொடுத்து வருகிறது இந்த அமைப்பு. அதன் தமிழக அமைப்பாளர்களில் ஒருவரான சுரேஷ்ராம், ‘‘இந்த தீர்ப்பு நீண்டகாலப் போராட்டத்துக்கு கிடைத்த சிறு வெற்றி’’ என்கிறார்.

‘‘ஏற்கனவே 2009ல் சென்னை உயர் நீதிமன்றம் இந்த சட்டம் தொடர்பாக 10 கட்டளைகளை வழங்கியது. அதில், ‘உடனடி கைது கூடாது’ என்பது முதன்மையான கட்டளை. இப்போது உச்ச நீதிமன்றம் அதை உறுதி செய்திருக்கிறது. இந்த சட்டத்தால் பல குடும்பங்கள் கலைந்து விட்டன. பல்லாயிரம் பிள்ளைகள் தவிக்கிறார்கள். இதை பெண்களுக்கு பாதுகாப்பான சட்டம் என்று சொல்வதே வேடிக்கையானது.

2012ல் இதன் கீழ் 1 லட்சத்து 18 ஆயிரத்து 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 1 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் கைது செய்யப்பட்டார்கள். இதில் 47 ஆயிரத்து 518 பேர் கணவன் வீடு சார்ந்த பெண்கள். கடந்த 10 வருடத்தில் 20 லட்சம் பேருக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதில் 22% பெண்கள். இதில் 17 லட்சம் பேர் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

உண்மையில் இது பெண்களுக்கு ஆதரவான சட்டம் அல்ல. கணவன் வீட்டாரை மனைவி பழி வாங்குவதற்கான சட்டம். மனைவியால் குடும்பத்தோடு சிறைக்குச் சென்றுவந்த எந்த கணவன் திரும்பவும் அந்த மனைவியோடு வாழ்வான்? குடும்பமே குலைந்து விடும். சிறைக்கு சென்றுவந்த அவமானத்தில் நிறைய பேர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்ளும் திருமணமான ஆண்களின் எண்ணிக்கை 70,000 (திருமணமான பெண்களின் எண்ணிக்கை 35,000 தான்). தற்போதைய தீர்ப்பு இந்த அவலத்துக்கு தீர்வு கொடுத்திருக்கிறது’’ என்கிறார் சுரேஷ்ராம்.

இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் ராதை, ‘‘2% நடக்கும் தவறுகளுக்காக 98% பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது’’ என்று குமுறுகிறார்.

‘‘மனித உரிமை ஆணையத்தின் அறிக்கைப்படி, இந்தியாவில் தினமும் 22 பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் இறக்கிறார்கள். ஏராளமான பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பல வழக்குகள் பதிவாவதே இல்லை.

 காவல் நிலையத்திலோ, கட்டைப் பஞ்சாயத்திலோ பேசி முடிக்கப்படுகிறது. சமாதானம் செய்து கணவன் வீட்டுக்கு அனுப்பப்பட்ட எத்தனையோ பெண்கள், அடுத்த ஓரிரு நாட்களில் இறந்துபோன சம்பவங்களும் உண்டு. காவல்துறை இந்த சட்டத்தை தவறாகக் கையாள்கிறது என்பதற்காக மொத்தமாக சட்டத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது சரியல்ல’’ என்கிறார் ராதை.

ஆனால், வழக்கறிஞரும் பெண்ணியவாதியுமான சுதா ராமலிங்கம் இத்தீர்ப்பை வரவேற்கிறார். ‘‘எந்த வழக்கிலும் விசாரிக்காமல் கைது செய்யக்கூடாது என்பதுதான் மனித உரிமை விரும்பும் அனைவரின் நிலைப்பாடு. உச்ச நீதிமன்றம் அதை உறுதி செய்திருக்கிறது. அண்மைக்காலமாக, இந்த சட்டத்தைப் பயன்படுத்தி நிறைய பொய்ப் புகார்கள் கொடுக்கப்படுகின்றன. அவர்கள் செய்யும் தவறால் உண்மையாகவே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பது பாதிக்கப்படுகிறது.

காவல்துறை இந்த விஷயத்தில் பொறுப்பின்றி நடந்து கொள்வதையும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியிருக்கிறது. நாங்கள் தலையிடும் சில வழக்குகளில் ‘நல்லவங்கன்னு தெரியுது... ஆனா நாங்க என்ன செய்யிறது...’

என்று காவல்துறை அதிகாரிகள் கேட்பார்கள். நல்லவர்கள் என்று தெரிந்தபிறகு ஏன் அந்தப் பிரிவில் வழக்கு என்று கேட்டால் அவர்களிடம் பதில் இருக்காது...’’ என்கிறார் சுதா. சிலர் தவறாகப் பயன்படுத்தும்போது சட்டத்தின் வேரே ஆட்டம் காண்கிறது. இந்த விஷயத்தில் பெண்களுக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்ளும் திருமணமான ஆண்களின் எண்ணிக்கை 70,000 (திருமணமான பெண்களின் எண்ணிக்கை 35,000 தான்).

- வெ.நீலகண்டன்