மயானத்துக்குள்ள தான் சரித்திரம் புதைஞ்சு கிடக்கு...



இதோ இங்கதான் எங்க அப்பாவ வச்சேன். அம்மா அதோ அங்கே... அஞ்சு வருஷம் முன்னாடி முடிஞ்சு போன சின்னப்பய அந்த முட்டுக்குப் பக்கத்துல இருக்கான். நாளைக்கு ஏதோ ஒரு பக்கம் எனக்கும் கொஞ்சம் இடம் இருக்கு. எல்லாருக்குமே நிரந்தமா இருக்கிற இடம் இதுதானே...

எத்தனையோ பேரோட சரித்திரம் இதுக்குள்ள அடங்கிக் கிடக்கு... அடங்கி அமைதியா ஓஞ்சு ஒதுங்கிற இந்த இடம் கல்லும், முள்ளுமா கிடந்தா நல்லாவா இருக்கும்...?’’ - செவ்வந்திப் பூச்செடிக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டே கேட்கிற அர்ஜுனனை பார்க்க வியப்பாக இருக்கிறது.

கிராமத்து மயானங்களின் அடையாளமே புதர்க்காடுகள்தான். அதுவும் ஆதிதிராவிடர் மயானங்கள் அனாதைகளாகத்தான் கிடக்கும். சில மயானங்களுக்கு சாலை கூட இருக்காது. கால்வாய்களில் இறங்கி, முள்புதருக்குள் நுழைந்து, கற்காடுகளைக் கடந்துதான் செல்ல வேண்டும். கழிவுகள் குவிந்து கால் வைக்கவே கூசும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பிறந்து வளர்ந்த இடத்தைப் போலவே, அடங்கும் இடமும் அவலம் நிறைந்ததாகவே இருக்கிறது. அதைத்தான் மாற்றியிருக்கிறார் அர்ஜுனன்.

அர்ஜுனனை பார்க்க விரும்புபவர்கள், கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு அருகேயுள்ள அரங்கூர் மயானத்துக்குப் போகவேண்டும். மரங்களும், செடிகளும், கொடிகளும் நிறைந்து பூச்செரிந்து நிற்கிற அந்த சுடுகாட்டுக்குள் ஏதோ ஒரு செடிக்கு தண்ணீர் கட்டிக் கொண்டிருப்பார். ‘‘பகல்ல யாராச்சும் கூப்பிட்டா வயலுக்கு மருந்தடிக்கப் போவேன். மத்த நேரங்கள்ல இங்கனக்குள்ளதான் எங்காவது ஒண்டிக் கிடப்பேன். சம்சாரம் நூறு நாள் வேலைக்குப் போறா. பையன இப்பத்தான் வெளிநாட்டுக்கு அனுப்பியிருக்கேன். என் சம்பாத்தியத்துல முக்கால் பாகம் இதுக்குத்தான்...’’ - முகத்தில் அரும்பும் வியர்வையை துண்டால் அழுந்தத் துடைத்துக் கொள்கிறார் அர்ஜுனன்.

மயானத்துக்குள் இருக்கும் சாத்துக்குடி, எலுமிச்சை, மா, நெல்லி, சீத்தா எல்லாம் காய்த்துக் குலுங்குகிறது. பூக்களின் கலவையான வாசனை அந்தச் சூழலையே இதமாக்குகிறது. வரிசை குலையாமல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு உடலின் தலை மாட்டிலும் ஏதோ ஒரு செடி மலர்ந்து நிற்கிறது. ‘‘எங்கேயோ இருந்து நம்மை ஆளவந்த வெளிநாட்டுக்காரனோட சரித்திரத்தை எல்லாம் பக்கம் பக்கமா படிக்கிறோம்.

ஆனா நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஒரு சரித்திரம் இருக்கு. அது எத்தனை பேருக்குத் தெரியும்..? பாட்டன், பூட்டன்னு எல்லோராட சரித்திரமும் மயானத்துக்குள்ளதான் புதைஞ்சு கிடக்கு. அவங்கள்லாம் வாழ்ந்து மறைஞ்சதுக்கான எந்த அடையாளமும் நம்மகிட்ட இல்லை. ஒரு மரம், ஒரு செடி, ஒரு கொடி... அந்த அடையாளம் கூட இல்லாம முடிஞ்சு போறதுல என்ன நிறைவு..?

ஊரு சாவு, உறவு சாவுன்னு இந்த மயானத்துக்கு இதுக்கு முன்னாடி பலமுறை வந்திருக்கேன். அதோ அந்தக் கரையோரமா நின்னுட்டுக் கிளம்பிருவேன். உள்ளுக்குள்ள காலு வச்சா முள்ளுக் குத்திக் கிழிச்சிரும். யாரு உடமைக்காரங்களோ அவங்க மட்டும் கல்லையும், முள்ளையும் சகிச்சுக்கிட்டு உள்ளே இறங்கி அடக்கம் பண்ணிட்டு வருவாங்க. அதுக்குப்பிறகு யாரும் திரும்பிக்கூட பாக்குறதில்லை.

என்னோட மவன் சுரேந்தரு இறந்தப்போதான் இதோட முக்கியத்துவம் எனக்குப் புரிஞ்சுச்சு. புள்ளைக்கு 17 வயசு. அஞ்சாப்புக்கு மேல படிப்பு ஏறல. நாலு துணி தச்சா பிழைப்பை ஓட்டிரலாம்னு தையல் கத்துக்கச் சேத்து விட்டேன். தொழிலை கத்துக்கிட்டதும் வெளிநாடு போறேன்னு வம்புக்கு நின்னான். ‘நம்ம நிலைக்கு அதெல்லாம் சரிப்படாது’ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள விஷத்தைக் குடிச்சுட்டு விழுந்துட் டான். அதோ அந்த தென்னம்பு ள்ள இருக்கே, அந்த முட்டுக்குள்ள தான் இருக்கான்.

சுரேந்தரு பெரிய குற்ற உணர்ச்சியை உருவாக்கிட் டான். புள்ள ஆசப்பட்ட மாதிரி வெளிநாடு அனுப்ப வக்கில்லாத பிழைப்பு... அவன்கூடவே போயிடணும்னு தோணுச்சு. ஆனா இன்னொரு பிள்ளைக்கு வழிகாட்டணுமே... அதான் முடிவை மாத்திக்கிட்டேன். அதுக்குப்பிறவு அடிக்கடி மயானத்துக்கு வருவேன். அவன் தலைமாட்டுலயே உக்காந்திருப்பேன். மெல்ல மெல்ல மயானக்கரையை சுத்தம் பண்ண ஆரம்பிச்சேன்.

மயானத்தைச் சுத்திலும் 31 தென்னம்புள்ளைகள வாங்கி வச்சேன். பக்கத்து மோட்டார் கேணிகள்ல இருந்து தண்ணி தூக்கியாந்து ஊத்துனேன். உள்ளுக்குள்ள அடக்கம் பண்ண லாவகமா 3 அடிக்கு ஒரு பாகம் இடம் விட்டு நிறைய மரக்கன்றுகளை நட்டேன். நாவல், கொய்யா, சீத்தா, மாதுளை, சப்போட்டா, மா, பலா, சாத்துக்குடி, எலுமிச்சை, நெல்லி, பப்பாளின்னு நிறைய பழ மரங்கள்... எல்லாம் இப்ப காய்ப்புக்கு வந்திடுச்சு. யாரு வேணும்னாலும் பிடுங்கிச் சாப்பிடலாம். தலைமாட்டுக்கு ஒண்ணுன்னு 50 ரகத்தில பூச்செடிகள் நட்டேன். ராத்திரி, பகல்னு இதுக்குள்ளயே கிடந்து எல்லாத்தையும் வளத்தெடுத்தேன். ஊர்க்காரங்களும் நல்லா ஒத்துழைச்சாங்க.

இப்போ உடலோட சேந்து உறவுகளும் உள்ளே வரமுடியுது. நாலு பூவ பறிச்சுப் போட்டு துயரம் தீர உக்காந்து அழ முடியுது. பூவும், செடியும், கொடியும், மரமும் இழப்பைப் போக்கி மனசை வருடி விடுது. எரிப்போ, புதைப்போ எதுவா இருந்தாலும் தலைக்கு ஒரு மரக்கன்னு... இல்லைன்னா ஒரு பூச்செடி நட்டு வைக்கச் சொல்லுவேன். அடங்க மறுக்கிற ஆன்மா அந்த கன்னுலயோ, செடியிலயோ ஒண்டிக்கட்டும்.

மரமும் மனுஷனும் வேறில்லை. இயற்கைக்கு ரெண்டுமே பிள்ளைங்கதான். மயானத்துல மனுஷனுக்கு நிறைய பாடங்கள் இருக்கு. இதைப் பாத்து பயப்பட வேண்டியதில்லை. கல்லும் முள்ளுமாப் போட்டு அந்த நிலத்தை புறக்கணிக்க வேண்டியதில்லை. இதிலயும் புனிதம் இருக்கு...’’ - ஒரு ஞானியைப் போல பேசிவிட்டு தம் மகனின் தலைமாட்டில் வளர்ந்து நிற்கிற தென்னை மரத்தை ஆழ்ந்து பார்க்கிறார் அர்ஜுனன். மௌனமாக அது தலையாட்டுகிறது. மயானத்துல மனுஷனுக்கு நிறைய பாடங்கள் இருக்கு. இதைப் பாத்து பயப்பட வேண்டியதில்லை. கல்லும் முள்ளுமாப் போட்டு அதை புறக்கணிக்க வேண்டியதில்லை.

 வெ.நீலகண்டன்
படங்கள்: ரெங்கப்பிள்ளை