பலி வாங்கும் ஆழ்துளைக் கிணறுகள்!தீர்வு என்ன?



சங்கரன்கோவில் ஹர்ஷன் அந்த மரணக்குழியிலிருந்து உயிரோடு மீண்டு வர முடிந்தது. கள்ளக்குறிச்சி மதுமிதாவுக்கும், திருவண்ணாமலை சுஜித்துக்கும் அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை. இந்த ஏப்ரல் மாதத்திலேயே மூன்று குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தன. இதில் ஹர்ஷன் உயிரோடு மீட்கப்பட, மதுமிதா மருத்துவ மனையிலும் சுஜித் ஆழ்துளைக் கிணற்றிலேயும் மரணித்து விட்டனர்.

இவர்களின் இறப்புக்கு யார் காரணம்? பெற்றோரின் கவனக்குறைவா? நில உரிமையாளர்களின் அக்கறையின்மையா? போர்வெல் தோண்டுபவர்களின் அலட்சியமா? அல்லது, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் இருந்தும், நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் அரசா? யார் பொறுப்பேற்பார்கள் இந்த மரணங்களுக்கு?

‘‘தமிழ்நாட்டுல எப்பவுமே இப்படித்தான். சம்பவங்கள் நடந்த பிறகே கண்துடைப்பா ஒரு நடவடிக்கை எடுப்பாங்க. அப்பறம் கொஞ்ச நாட்கள்ல அதையும் மறந்துருவாங்க. குறிப்பா, கும்பகோணம் தீ விபத்து, பள்ளிப் பேருந்து விபத்துகள்னு குழந்தைகள் விஷயத்தில் எடுக்கிற நடவடிக்கைகள் ரொம்பவே மோசம்’’ என ஆதங்கத்தோடு ஆரம்பிக்கிறார் ‘தோழமை’ குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி, தேவநேயன்.

‘‘பெற்றோர், சமூகம், சமூக அமைப்புகள், அரசுன்னு எல்லாரும் சரியா அவங்கவங்க பொறுப்புகளை உணர்ந்து செயல்படணும். அப்பதான் இது மாதிரி சம்பவங்கள் இனியும் நடக்காம தடுக்க முடியும்’’ என்கிறார் அவர் அழுத்தமாக.‘‘போர்வெல் போடுறவங்க எட்டு இன்ச், 14 இன்ச்ன்னு போர்வெல் தோண்டிடுறாங்க. தண்ணி வரலைன்னா, அப்படியே விட்டுட்டுப் போயிடறாங்க. இந்த விஷயத்தில் கடந்த ஆண்டே சுப்ரீம் கோர்ட் சில வழிகாட்டு நெறிமுறைகளை திருத்தி வழங்கியிருக்கு. இவற்றை நிலத்தோட உரிமையாளரும் போர்வெல் போடுகிறவர்களும் சரியா பின்பற்றுவதில்லை’’ என்கிறார் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் இணை இயக்குநர் விஜயசேகர்.

‘‘ஒரு குழந்தை குழியில விழுந்த தகவல் வந்ததும், வேகமா ஸ்பாட்டுக்குப் போய் முதல்கட்ட நடவடிக்கைகளை நாங்க எடுக்குறோம். 10 அடி ஆழத்துக்குள்ள குழந்தை சிக்கியிருந்தா, ஈஸியா பக்கவாட்டில் பள்ளம் தோண்டி வெளியே எடுத்துரலாம். ஆனா, 20 அடி, 30 அடின்னு போறப்ப ரொம்ப கஷ்டமாயிடுது. பள்ளம் தோண்டும்போது பாறைகளா இருந்தா இன்னும் கஷ்டம். வெடி வச்சும் தகர்க்க முடியாது. இப்ப தனியார் குழுக்கள் வச்சிருக்கிற ரோபோக்களும் முழுமையானதா இல்ல. அதனால சென்னை ஐ.ஐ.டி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் இதுக்கொரு நல்ல கருவியை உருவாக்கித் தரணும்னு கேட்டிருக்கோம். போர்வெல் போடுவறங்க தண்ணி வரலன்னா, அந்தக் குழியை மண், கூழாங்கல்ன்னு கொட்டி முழுசா மூடணும். இது நாளடைவில் மழைநீர் சேகரிப்பா மாறிடும். அதுவும் அவங்களுக்கு லாபம்தானே!’’ என்கிறார் அவர் பொறுப்பாக.

‘‘சங்கரன்கோவில் சம்பவத்துல ஹர்ஷனை போர்வெல்லில் இருந்து உயிரோடு மீட்டுக் காட்டியது எங்க ரோபோ கருவிதான். ஆயிரம் அடி ஆழத்துல விழுந்த குழந்தைகளைக் கூட இதன் மூலமா மீட்க முடியும்’’ என்கிறார் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன். மதுரை டி.வி.எஸ் சமுதாயக் கல்லூரியின் ஆசிரியர் இவர்.

‘‘எனக்கு சொந்த ஊர், கோவில்பட்டி பக்கத்துல நாலாட்டின்புதூர் கிராமம்ங்க. ஐ.டி.ஐ முடிச்சிட்டு எஞ்சினியரிங் காலேஜ்ல வேலை பார்த்திட்டு இருந்தேன். என் பையனே ஒரு தடவை இப்படியொரு போர்வெல்ல தவறி விழப் பார்த்தான். நல்லவேளை, நான் ஓடிப் போய் பிடிச்சிட்டேன். அடுத்த வாரமே அதுமாதிரி ஒரு கிணத்துல குழந்தை ஒண்ணு விழுந்து இறந்துடுச்சுன்னு செய்தி வந்தது. இனி இப்படி எந்தக் குழந்தையும் சாகக் கூடாதுன்னுதான் இந்த ரோபோ கருவியை உருவாக்கினேன்.

12 வருஷ உழைப்பு... நவீன கேமரா, மினி டி.வி, அழுத்தம் பார்க்கிற கருவி, ஏர் பிஸ்டன் சிலிண்டர்னு எல்லாத்தையும் பொருத்தி அதை மேம்படுத்தினேன். ஆனாலும், ‘இது மாதிரி சம்பவம் நடக்கிறப்ப வந்து குழந்தையை மீட்டுக் காட்டுங்க... நம்புறோம்’னு தீயணைப்புத் துறையில சொல்லிட்டாங்க. அதுக்காகவே நண்பர்களோட சேர்ந்து, ‘மதுரை போர்வெல் உயிர் மீட்புக்குழு’ன்னு ஒரு அமைப்பை நிறுவினோம். இப்ப சங்கரன்கோவில்ல அந்தப் பையனைக் காப்பாத்தினப்போ, ஊரே கூடி நின்னு கை தட்டிச்சு. கலெக்டரும் அதிகாரிகளும் பாராட்டினாங்க. பெரிய அங்கீகாரம் கிடைச்ச மாதிரி இருந்தது’’ என்கிறவர், அடுத்து நடந்த இன்னொரு சம்பவத்தின்போது தனது ரோபோவுக்கு அதே வெற்றி கிடைக்கவில்லையே என்று வருந்துகிறார்.

‘‘திருவண்ணாமலை பக்கம் நடந்த சோகம் சார் அது... மண்ணு முழுசா குழந்தையை மூடிருச்சு. இத்தனைக்கும் மண்ணை வெளியே தள்ளுற வேக்குவம் கிளீனரையும், தேவைக்கு ஏத்த மாதிரி 10 வகை கைகளையும் ரோபோவில் இணைச்சிருக்கேன். ஆனாலும் முடியலை. காப்பாத்த ஆளுங்க வர்ற வரைக்கும் குழியில் விழுந்த குழந்தைங்ககிட்ட பெத்தவங்க பேச்சு கொடுக்கணும். உள்ளே டார்ச் அடிச்சு குழந்தை பயப்படாம பார்த்துக்கணும். முடிஞ்சா ஆக்ஸிஜன் தரலாம்’’ என்கிறவர், இது போன்ற மீட்பு இயந்திரங்களை பரவலாக்க அரசு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறார்.

‘‘நான் மட்டுமில்லைங்க... திருச்சியிலயும் கோவையிலயும் கூட ஒவ்வொரு குரூப் இது மாதிரி கருவிகள் வச்சிருக்காங்க. வெறும் 50 ஆயிரம் ரூபாய் செலவுல என்னால கருவியைத் தயாரிச்சிட முடியும். ஒவ்வொரு தாலுக்காவிலும் இப்படி ஒரு கருவி இருந்தால், சீக்கிரம் போய் குழந்தைகளைக் காப்பாத்த முடியும். ஒரு குழந்தையோட உயிருக்கு முன்னால எந்த செலவும் பெரிசில்லை. இப்பத்தான், உயர் அதிகாரிகள் கூட்டத்தில் இது பத்திப் பேசினதா கேள்விப்பட்டேன். நல்ல முடிவெடுத்தா எல்லாருக்கும் நல்லது!’’ என்கிறார் அவர் எதிர்பார்ப்புடன்! மணிகண்டனை தொடர்புகொள்ள: 9486394426

உச்ச நீதிமன்ற நெறிமுறைகள்


* நில உரிமையாளர்கள் போர்வெல் போடுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
* பதிவு செய்யப்பட்ட போர்வெல் நிறுவனங்கள் மட்டுமே போர்வெல்லில் ஈடுபட வேண்டும்.
* போர்வெல் போடும்போது விளம்பரப் பலகை ஒன்று வைக்க வேண்டும். அதில், போர்வெல் போடும் நிறுவனம், நில உரிமையாளர் ஆகியோரின் முகவரியைத் தெரிவிக்க வேண்டும்.
* சிமென்ட் கான்கிரீட் தளம் போர்வெல்லைச் சுற்றி மேலும் கீழும் அமைக்க வேண்டும்.
* போர்வெல் உறை குழாயை வெல்டிங் பிளேட்டால் மூடி போல்ட் போட வேண்டும்.
* பயனற்ற போர்வெல் குழிகளை களிமண், மணல், கூழாங்கற்கள் கொண்டு கடைசி அடி ஆழம் வரை மூட வேண்டும்.
* இந்த நெறிமுறைகளை சரியாக பின்பற்றுகிறார்களா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். 
* ஏதாவது ஒரு சூழலில் போர்வெல் கைவிடப்பட்டால், அரசு அமைப்புகளிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

 பேராச்சி கண்ணன்
படங்கள்: நம்பிராஜன்,பரமகுமார்