ஜில்லா



போக்கிரியாக இருந்து விட்டு காவலனாக மாறிய நல்லவன், ‘ஜில்லா’ விஜய், எதிரிகளைத் தீர்த்துக் கட்டுவதே, ‘ஜில்லா!’ அப்பாவைக் கொன்றதால் போலீஸ் என்றாலே காத தூரம் ஓடுற விஜய்... காக்கி கலரைப் பார்த்தாலே அலறுகிறார். அந்த மொத்த  இடத்திற்கும் மோகன்லால்தான் காட்ஃபாதர்.


அவர்களோடு சேர்ந்து வளர்ப்பு மகனாக விஜய். அப்பாவின் அடிதடி, மோதல்களுக்கு எல்லாம் அப்பாவிடமிருந்து ஒரே ஒரு வார்த்தையைத்தான் எதிர்பார்க்கிறார். பிறகு, அதே மோகன்லால் போலீஸாக போஸ்ட் மாறச் சொல்ல, அதற்கும் தலையசைக்கிறார் விஜய். அப்புறம் மோகன்லாலையே முந்திரி மாதிரி வறுத்து எடுக்கிறார் விஜய். ஒரு கட்டத்தில் பிரிந்த விஜய்யும், மோகன்லாலும் இணைந்தார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

‘தலைவா’வின் சோதனையிலிருந்து மீண்டு விட்டார் விஜய். மோகன்லால், விஜய் என காம்பினேஷன் பார்த்து ஆசைப்பட்டு போனால், அந்த அளவுக்கு இல்லையென்றாலும் ரொம்பவும் ஏமாற்றவில்லை. அழகாக இருக்கிறார் விஜய். அவரின் ரசிகர்களுக்கு என்ன வேண்டுமோ, அதைத் தருவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்.

நடனம், ஃபைட் இரண்டிலும் இந்தத் தடவையும் விஜய் ஜொலிப்பு. மோகன்லால், விஜய் என இரண்டு பக்கா மாஸ் நடிகர்களை வைத்துக்கொண்டு இன்னும் கொஞ்சம் பலமான கதையைத் தேர்ந்தெடுத்து இருக்கலாம். ஆனால், இருப்பதற்குள், தகுந்த நடிப்பை வழங்கியிருக்கிறது இந்தக் கூட்டணி.

மோகன்லாலுக்கு ஊதித் தள்ளி விடக்கூடிய கதாபாத்திரம். ஆனாலும் விஜய்யோடு அனு சரித்து, மீறிப் போய் நடித்துவிடாமல் வெளிப்படக் கூடிய பக்குவம் அவருக்கே சாத்தியம். இரண்டு பேருக்கும் படத்தை சரியாகப் பங்கு போட்டுக் கொடுத்ததில் சமாளிக்கிறார் அறிமுக இயக்குநர் நேசன். உயரத்தில் இன்ஸ்பெக்டராகப் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறார் காஜல். ஆனால், முன்பிருந்த இளமை கொஞ்சம் மிஸ் ஆவதை நிச்சயமாகக் கணக்கிட முடிகிறது.

விஜய்யும், காஜலும் மாறி மாறி பின்பக்கம் தண்டனை கொடுத்துக் கொள்வது, முகச் சுளிப்பு. பாடல் காட்சிகளில் விஜய்-காஜல் இரண்டு பேரும் தருவது 100% ரிலீஃப். ‘கண்டாங்கி... கண்டாங்கி...’, ‘வெரசா போகையிலே...’ பாடல்கள் குளிர் ரகம். இமான் இப்போது பாடல்களில் பாய்ச்சலில் இருப்பது தெள்ளத் தெளிவு. மகத் எடுக்கும் ஆக்ஷன் அவதாரம் எடுபடவில்லை. அப்பாவிற்கும் மகனுக்கும் இடையில் பாசத்தை ஒட்ட வைக்கும் பூர்ணிமா பாக்யராஜ், அருமை.

அடுத்தடுத்து நடப்பதை ஊகிக்க முடிந்தாலும், நின்று பார்க்க முடியும்படி வைத்திருப்பது விஜய்யின் ஹீரோயிசம். மதுரையில் வெடிக்கும் கேஸ் கம்பெனி விபத்தும், பின்விளைவும் மனதைத் தொடுகிறது. தம்பி ராமய்யாவையும், சூரியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு விஜய்யே காமெடி செய்து விடுவதால், என்ன செய்வது எனத் தெரியாமல் இரண்டு பேருமே முழிக்கிறார்கள்.
ஆக்ஷனில் தீப் பிடிக்கும் கேமரா, காதல் காட்சிகளில் பக்குவமாக ஒத்துழைக்கிறது.

புதுமுக ஒளிப்பதிவாளர் கணேஷ் ராஜவேலுவிற்கு முழு மதிப்பெண்கள். இருந்தாலும் டைரக்டர் நேசன் அநியாயத்திற்கு பூ சுற்றக் கூடாது. போலீஸ் அதிகாரியை வெட்டிவிட்டு, அவரிடமே வேலைக்குச் சேர்வது த்ரீ மச். ஏன் இவ்வளவு அடிதடி? மோகன்லால் எதற்காக இதையெல்லாம் செய்கிறார்? இதையெல்லாம் நாம் விளக்கமாக எதிர்பார்க்கக் கூடாது.  லாஜிக் இல்லாவிட்டாலும் விஜய் ‘மேஜிக்’ இருக்கிறது!

 குங்குமம் விமர்சனக் குழு