இலக்கியக் கூட்டங்களுக்கு யார் வருகிறார்கள்? ஆண்டுதோறும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு முன்பு ‘உயிர்மை’யிலிருந்து அதிரடியாகக் கூட்டங்களை நடத்துவது வழக்கமான பொழுதுபோக்குகளில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த வருடம் கடந்த ஒரு மாதத்தில் ஏழு கூட்டங்கள் நடத்தினேன்.

அதில் ஐந்து கூட்டங்கள் ஜனவரி முதல் வாரம் நடந்தது. ஏராளமான புத்தகங்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என ஒரு குழப்பமான சந்தோஷம் அது.
ஆனால் இந்தக் கூட்டங்களுக்கு வருபவர்களில் ஒரு புதிய அம்சத்தைக் கவனிக்கிறேன். ஒரு கூட்டத்திற்கு வரும் வாசகர்களில் பெரும்பாலானோர் அடுத்த கூட்டத்திற்கு வருவதில்லை. மாறாக புதிய வாசகர்கள் வருகிறார்கள். எல்லா அரங்குகளும் நிரம்பி வழிகின்றன, ஆனால் புதுப்புது முகங்களுடன். கைதட்டல்கள் எழும் தருணங்கள் கூட்டத்திற்கு கூட்டம் மாறுபடுகின்றன.
ரஜினி, கமல், விஜய் ரசிகர்கள் போல எழுத்தாளர்களுக்கும் தனித்தனி ரசிகர் கூட்டங்கள் உருவாகி வருகிறார்கள். அந்தந்த நடிகர்களின் படம் திரையிடப்படும் அன்று அதன் ரசிகர்கள் முன்னணிக்கு வருவதுபோல, குறிப்பிட்ட எழுத்தாளர்களின் வாசகர்களும் அந்த எழுத்தாளரின் புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு வருகிறார்கள். அல்லது அந்த எழுத்தாளருடனான தனிப்பட்ட நட்பு கருதி வருபவர்களும் இருக்கிறார்கள்.
சில சமயம் யாராவது ஸ்டார் பேச்சாளர்கள் இருந்தால், அந்த பேச்சாளர்களின் பேச்சைக் கேட்பதற்காக மட்டும் வரும் ஆட்கள் இருக்கிறார்கள். அவர் பேசி முடித்ததும், எந்தத் தயக்கமும் இல்லாமல் அரங்கத்தை விட்டு கும்பலாக வெளியேறிச் செல்வார்கள். அப்போது மேடையில் அதற்குப் பின் பேசக் காத்திருக்கும் பேச்சாளர்களின் முகம் வாடிப்போவதை வெளிப்படையாகக் காணலாம்.
இதற்காகவே ஸ்டார் பேச்சாளரை கூட்டத்தின் கடைசியில் பேச அழைப்பார்கள். நன்றியுரையைக்கூட அந்தப் பேச்சாளர்கள் பேசுவதற்கு முன்பு முடித்துவிடுவார்கள். ஆனால் சோகம் என்னவென்றால் அந்த நட்சத்திரப் பேச்சாளரின் முறை வரும்போது ஏற்கனவே நள்ளிரவாகியிருக்கும். அவருக்குப் பேச ஐந்து நிமிடம்தான் மிச்சமிருக்கும்.
அவர் வந்து கடைசிப் பேச்சாளனாக இருக்கும் அவலத்தைப் பற்றி அந்த ஐந்து நிமிடத்தில் அழுதுவிட்டு இறங்கிப் போவார். பொறுமையுடன் காத்திருந்த அவரது ரசிகர்கள் கோபத்தில் அரங்கத்தின் சீட்டுகளை பிளேடால் கிழிக்காமல் போகிறார்களே என்று அந்தப் பெருந்தன்மையை எண்ணி வியந்திருக்கிறேன்.
ஆனால் இந்த வருடம் நாங்கள் நடத்திய ஒரு கூட்டத்தின் அரங்கில் ஒரு கண்ணாடிக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதற்கு அபராதம் கட்டினேன். யாரோ ஒருவரின் பேச்சைக் கேட்டு தலைதெறிக்க தப்பி ஓடிய யாரோ ஒரு வாசகனால்தான் அது நிகழ்ந்திருக்க வேண்டும். இலக்கியக் கூட்டத்தில் பேசுகிறவர்களில் இரண்டு வகையானவர்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். எந்தப் புத்தகத்தைப் பற்றி பேசுகிறார்களோ,
அதை முழு அர்ப்பணிப்புடன் படித்துவிட்டு வந்து பேசுகிறவர்கள். இந்த வகைப் பேச்சாளர்கள் பார்வையாளர்களின் பெரும் மதிப்பைப் பெறுகிறார்கள். அந்த எழுத்தாளனின் வாழ்வில் அந்த நாளை ஒரு முக்கியமான நாளாக மாற்றுகிறார்கள். ஆனால் ஒரு புத்தகத்தைப் படிக்காமல் மேடைக்கு வருபவர்கள்தான் உண்மையிலேயே ஆபத்தானவர்கள். அவர்கள் தாங்கள் புத்தகத்தைப் படிக்கவில்லை என்பதை மறைக்கச் செய்யும் தந்திரங்களால் பார்வையாளர்களை நரவேட்டையாடுவார்கள்.
மனிதகுல மீட்சிக்கான பல்வேறு நீதிகளைப் பேசுவார்கள். அறத்தின் வீழ்ச்சியைப் பற்றி பேசுவார்கள். தமிழர்கள் தமிழை மறந்துவிட்டார்கள் என்பார்கள். தன்னுடைய சின்ன வயசில் நடந்த ஏதாவது அனுபவத்தைப் பற்றிப் பேசுவார்கள். திடீரென சங்க இலக்கியத்திலிருந்து கிரேக்க இலக்கியத்திற்குத் தாவுவார்கள்.
தனது புத்தகத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என குழம்பிப் போகும் எழுத்தாளர், பேச்சை முடிக்கும் முன்பு தன் புத்தகத்தைப்பற்றி ஏதாவது சொல்ல மாட்டாரா என்று தவிப்புடன் அமர்ந்திருப்பார். ‘‘எனவே இந்த நூலை இந்த வரிசையில் வைத்து நாம் பரிசீலிக்க வேண்டும்’’ என அவர் முடிக்கும்போது எழுத்தாளர்கள் தன் நெஞ்சைப் பிடித்துக் கொள்வார்.
இலக்கியக் கூட்டங்களை சுவாரசியமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த வருடம் அத்தகைய சில முயற்சிகளை பரீட்சித்துப் பார்த்தோம். எனது ‘சூரியனுக்கு அருகில் ஒரு வீடு’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் அத்தொகுப்பில் இடம்பெற்றிருந்த ‘நீதிக்குக் காத்திருப்பவர்கள்’ கவிதையை ஜெயராவின் ‘தியேட்டர் லாப்’ குழுவினர் ஒரு நாடகமாக நிகழ்த்தினர்.
எளிய மனிதர்கள் எப்படி எல்லா இடங்களிலும் நீதி கிடைக்கும் என்று நம்பி அர்த்தமற்றுக் காத்திருக்கிறார்கள் என்பதை மிகவும் உணர்ச்சிகரமாக நிகழ்த்திக் காட்டினார்கள். ‘ஒரு மனிதன் உணவு இல்லாமல் இருக்கலாம், உடை இல்லாமல் இருக்கலாம், ஏன்... இச்சைகள் இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால் நீதி இல்லாமல் இருக்க முடியுமா?’ என பார்வையாளர்களை நோக்கிக் கேட்டபோது அரங்கம் ஆழ்ந்த மௌனத்தில் உறைந்து போனது.
எஸ்.ராமகிருஷ்ணனின் ‘நிமித்தம்’ நாவல் வெளியீட்டு விழாவில் இரண்டு விஷயங்களை செய்து பார்த்தோம். அந்த நாவல் காதுகேளாத ஒரு மனிதனைப் பற்றியது. காது கேளாத ஒருவன் நம் சமூகத்தில் எதிர்கொள்ளும் அவலங்கள் பற்றியது. தியேட்டர் லாப் குழுவைச் சேர்ந்த ப்ரீத்தி ஷா, இந்த நாவலின் உள்ளடக்கத்தை, அற்புதமான தனி நடிப்பால் நிகழ்த்திக் காட்டினார். பிறகு தொலைக்காட்சிகளில் இடம் பெறுவதுபோல விழா மேடையிலேயே அந்த நாவலைப் பற்றி ஒரு விவாதத்தை நடத்தினோம்.
‘சன் நியூஸ்’ தொலைக்காட்சியில் விவாத மேடை நிகழ்ச்சிகளை நடத்தும் நெல்சன் சேவியரையே அதற்கு அழைத்தோம். மிகவும் உற்சாகமான இலக்கிய வாசிப்பு உள்ள இளைஞர். அவர் என்னுடனும், எஸ்.ராமகிருஷ் ணனுடனும் நாவல் பற்றி சுமார் ஒரு மணி நேர விவாதத்தை நடத்தினார். வழக்கமான மேடைப் பேச்சுகளிலிருந்து மாறுபட்டு, அது உண்மையிலேயே பார்வையாளர்களை பெரிதும் உற்சாகமடைய வைத்தது.
அதேபோல ‘உயிர்மை’ நடத்திய அராத்துவின் நூல் வெளியீட்டு விழாவில், ஃபேஸ்புக்கில் தீவிரமாக இயங்கும் சில நண்பர்கள் மேடையிலேயே புத்தகம் தொடர்பான ஒரு ஜாலியான கலந்துரையாடலை நிகழ்த்தினர். இந்த அனுபவங்கள் அனைத்தும், கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக புதிய உற்சாகத்தைக் கொடுக்கின்றன.
மூன்று மணி நேரம் நம்மை நம்பி வந்து உட்கார்ந்திருக்கும் பார்வையாளர்களின் உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதுகாப்பது விழா அமைப்பாளர்களின் கடமை. விழா அரங்குகளை ஹிட்லரின் ஆஷ்ட்விச் முகாம் களாக மாற்றக் கூடாது. சிறந்த பேச்சாளர்கள், அர்த்தமுள்ள பேச்சுகள், ஆழமான உணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள், சுவாரசியமான தருணங்கள் என இலக்கிய அரங்குகளை மாற்றுவது முக்கியம்.
ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஒருவர் வந்து மைக்கைப் பிடித்து, ‘‘தமிழில் மண்சார்ந்த அசலான எழுத்துக்கள் இல்லை. எல்லோரும் இன்டெர்நெட்டில் டவுன்லோட் பண்ணி எழுதுறானுங்க... திருட்டுப் பசங்க’’ என்கிற ரேஞ்சுக்குப் பேசினார். ‘‘நான் புத்தகமே படிப்பதில்லை’’ என்று புத்தக வெளியீட்டு விழாவில் பேசுகிறவர்களைப் போலத்தான் இவர்களும். புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்து எழுத்தாளன் என்ற வர்க்கத்தையே கருவறுக்கும் கோபத்தில் பேசிக்கொண்டிருப்பார்கள்.
நான் மேற்படி பேச்சிற்கு மேடையிலேயே குறுக்கிட்டு கடுமையாக பதில் அளித்தேன். ‘‘உலக இலக்கியத்தையும் சினிமாவையும் தமிழ் வாசகனுக்கு அறிமுகப்படுத்தும் வேலையை நமது பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும். ஆனால் அதையும் எழுத்தாளன்தான் செய்ய வேண்டியிருக்கிறது’’ என்றேன். இதேபோலத்தான் சில மாதங்களுக்கு முன்பு ஒரு சினிமா இயக்குனர் ஒரு இலக்கிய மேடைக்கு வந்து,
‘‘தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது. சினிமா உதவி இயக்குனர்களுக்குத்தான் தமிழ் வாழ்க்கையைப் பற்றி தெரியும். எழுத்தாளர்கள் இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று அடித்துவிட்டார். நான் குறுக்கிட்டு, ‘‘100 வருட தமிழ் இலக்கியம் காட்டிய தமிழ் யதார்த்தத்தில் ஒரு சிறு பகுதியையாவது தமிழ் சினிமா காட்டியிருக்கிறதா?’’ என்று கேட்டேன்.
இவ்வளவுக்கும் பிறகுதான் ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டியிருக்கிறது.
(பேசலாம்...)
பதில்கள்நல்ல நகைச்சுவை எப்படி இருக்க வேண்டும்?
- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்
இது நகைச்சுவை என்று விளக்கம் கொடுக்கத் தேவையில்லாததாக.
மனசாட்சி எப்போது பேசத் தொடங்கும்?
- அ.ராஜா ரஹ்மான், கம்பம்.
ஒரு கட்சியிடம் காசு வாங்கிக்கொண்டு இன்னொரு கட்சிக்கு ஓட்டுப் போடும்போது.
பூமிக்கு போரடித்து சுற்றுவதை தானாக நிறுத்திவிட்டால்?
- எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்
அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
குளிர்காலம், கோடைக் காலம் - எது சிறந்தது?
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை.
இரண்டுக்கும் இடையே வரும் இளவேனில் காலம்.
பெண்கள் போல ஆண்களுக்கும் நாணம் வருமா?
- வண்ணை கணேசன், சென்னை.
வரும். ஆனால் அதைக் காட்ட மாட்டார்கள்.
(சமூகம், இலக்கியம், சினிமா, அரசியல்... எதைப் பற்றியும் கேளுங்கள் மனுஷ்யபுத்திரனிடம். உங்கள் கேள்விகளை ‘மனுஷ்யபுத்திரன் பதில்கள், குங்குமம், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை -600004’ என்ற முகவரிக்கு அனுப்புங்கள். email:
editor kungumam.co.in)
நெஞ்சில் நின்ற வரிகள்ஒரு பெண்ணின் ஏக்கத்தின் குரலை பி.சுசீலாவின் குரல்போல் இன்னொரு குரல் வெளிப்படுத்துவது கடினம். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் பிரிவாற்றாமையால் துயருற்ற ஒரு சங்க காலப் பெண்ணின் தனிமைச் சித்திரம் மட்டுமல்ல, எல்லாக் காலத்திலும் பிரிவால் வாடும் மனித மனதின் துயரத்தின் சித்திரமும் கண்முன் எழுகிறது. ‘வேண்டும் பொருள் எல்லாம் மனது வெறுத்துவிட்டதடி’ என்று பாரதி எழுதினானே... அதே துயரம்தான் இந்தப் பாடல் நெடுக கவிந்திருக்கிறது.
நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு...
துயரத்தின் அழுத்தம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போகிறது
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்...
facebook எழுதிச்செல்லும் இணையத்தின் கைகள்
பிரபு காளிதாஸ் சிறந்த புகைப்படக் கலைஞர். அவரது ஃபேஸ்புக் பதிவுகளும் கூட நமது மனதில் ஆழமான காட்சிச் சித்திரங்களை உருவாக்குகின்றன. உதாரணத்திற்கு சில...
1. சென்னை: இன்று காய்கறி மார்க்கெட்டில் கறிவேப்பிலை கேட்டு, அவர்கள் (காய்ந்தது) கொடுத்தபோது கண்ணீரே வந்துவிட்டது.
எங்க தஞ்சாவூர் வீட்டில் ஒரு பெரிய கறிவேப்பிலை செடி (மரம்) இருக்கும். ஏரியா மக்கள் பூரா வந்து ஊர்க்கதை பேசியபடி கிள்ளிக்கொண்டு போவார்கள். அதீதமாக வளர்ந்து நிற்கும்போது மார்க்கெட் ஆள் வந்து மொத்தத்தையும் மொட்டை அடித்து சைக்கிளில் கட்டிக்கொண்டு நாற்பது ரூபாய் கொடுத்துவிட்டு புன்னகையுடன் மறைவார். அது ஒரு ந(பொ)ற்காலம்...
2.தஞ்சாவூர்: என் பால்யகால நண்பன் ஒருவனுக்கு (தற்போது மெக்கானிக்), படிப்பு வரவில்லை. ஒருநாள் அவன் அப்பாவின் பையிலிருந்து (வறுமையான குடும்பம்) காசு திருடி, சரக்கு வாங்கிக் குடித்துவிட்டான். மாட்டிக்கொண்டு நாயடி பேயடி வாங்கினான். ‘‘என் காசுல குடிக்காதேடா நாயே, நீ சம்பாதிப்பே பாரு, அந்தக் காசுல குடி’’ என்று லெதர் பெல்ட்டால் பட்டையை உரித்துவிட்டார் அவங்கப்பா. சமீபத்தில் தஞ்சாவூரில் ஃபுல் போதையில் நின்றுகொண்டிருந்தான். நலம் விசாரித்தேன். கொஞ்ச நாழி பேசிவிட்டு, ‘‘மாப்ள, போதைல இருக்கேனேன்னு தப்பா எடுக்காத... நான் என் காசுலதான் தினம் குடிக்கிறேன்’’ என்று கூறி டவுன் பஸ் ஏறினான்.
https://www.facebook.com/prabhu.kalidasமனுஷ்ய புத்திரன்