வாஞ்சை



லட்சுமியின் மகன் சுப்பிர மணியன் இப்போது  கம்பெனியின் பெரிய அதிகாரியாகப் பொறுப்பேற்றுக் கொண்டான். இதுவரை வீட்டில் ‘‘ஏங்க...’’ என்று கூப்பிட்டுக் கொண்டிருந்த மனைவி, அவனை இப்போது ஸ்டைலாக ‘ஜீயெஸ்’ என்று அழைக்க ஆரம்பித்து விட்டாள்.
‘‘என்னடி இது... புதுசா இருக்கு?’’ என்று கேட்ட லட்சுமிக்குப் பெருமிதமாக மருமகள் பதில்
சொன்னாள்...

‘‘கம்பெனியில் இவரை
எல்லோரும் மரியாதையா
இப்படித்தான் கூப்பிடறாங்களாம் அத்தே!’’
‘ஜீயெஸ்... ஜீயெஸ்...’ என்று தனக்குள்ளேயே சொல்லிப் பார்த்தாள் லட்சுமி. நன்றாகத்தான் இருந்தது.
மாலை ஆபீசிலிருந்து திரும்பிய மகனை, ‘‘ஹாய் ஜீயெஸ்...’’ என்று கூறி வரவேற்றாள் லட்சுமி.
சுப்பிரமணியனின் முகம் சுருங்கியது. அம்மாவின் அருகே வந்து அவள் கையைப் பிடித்து, ‘‘நீ என்னை இப்படிக் கூப்பிடறது எனக்குப் பிடிக்கலம்மா...’’ என்றான் அவன்.
‘‘ஏன் கண்ணா?’’ என்று அதிர்ந்து போனாள் லட்சுமி.
‘‘ஆமாம்மா! எந்தப் பதவிக்குப் போனாலும், நான் உங்க மகன்தானேம்மா! ‘மணி... மணி...’ன்னு ஆசையா நீ கூப்பிடறப்ப இருக்கிற வாஞ்சை இதிலே வெளிப்படல’’ என்றான் குரல் கம்ம.
கண்களைத் துடைத்துக் கொண்டாள் லட்சுமி.    

பர்வதவர்த்தினி