வேலை : வெ.தமிழழகன்
மேனேஜர் மேகநாதன் மீது தீபனுக்கு செம கடுப்பு. அலுவலகத்தில் பலரும் அரட்டை, சாட்டிங் என பொழுதைக் கழித்திருக்க தீபனிடம் மட்டும் எப்போதும் வேலையைத் திணிப்பது அவர் வழக்கம்.
தீபாவளிக்காக சொந்த கிராமம் போக முடிவு செய்திருந்தான் தீபன். இந்த சமயம் பார்த்து, ஒரு டெண்டர் ஃபைலை முடித்துத் தருமாறு சொல்லி, விடுமுறையை மறுத்துவிட்டார். ஊரே தீபாவளியில் திளைத்திருக்க... இவன் மட்டும் இயந்திரகதி யில் வேலை பார்த்து ஃபைலை மேனேஜரிடம் ஒப்படைத்துத் திரும்புகையில் நள்ளிரவு தாண்டிவிட்டது.
நொந்து போன மனதோடு அடுத்த நாள் அலுவலகம் வந்தான் தீபன். அன்று, வழக்கத்திற்கு முன்னதாகவே வந்து காத்திருந்தார் மேகநாதன். இவனை அழைக்க, எரிச்சலோடு உள்ளே போனான்.
‘‘தீபன்! என் மேல் வருத்தமா? உங்களை விட்டா வேற பொறுப்பான ஆட்கள் யாரும் இல்ல. இந்த மாசத்தோட நான் விருப்ப ஓய்வில் போறேன். இந்த டெண்டர் ஃபைல் விஷயத்துலதான் உங்க வேலையைப் பத்தி நான் ஹெட் ஆபீஸ்ல சொல்ல முடிஞ்சுது. என் இடத்துக்கு வர நீங்கதான் பொருத்தமானவர். அடுத்த மேனேஜர் நீங்கதான். வாழ்த்துக்கள்...’’ என்றார் மேகநாதன். இன்ப அதிர்ச்சியில் ஸ்தம்பித்தான் தீபன்.
|