‘‘தீபாவளிக்கு சிறப்பு நிகழ்ச்சியா? புதுப்படமா? எப்ப சார் போட்டாங்க?’’ எனக் கேட்கும் நிலை நிறைய பேர் வீடுகளில் உண்டு. காரணம், குட்டீஸ் கைகளில் டி.வி ரிமோட்! ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தாலும் நம் வீட்டில் அதே நிஞ்சா ஹட்டோரியும் பவர் ரேஞ்சரும் சோட்டா பீமும் வந்து நேற்று பேசியதையேதான் பேசுவார்கள். 24/7 டி.விக்களை ஆக்கிரமித்திருக்கும் இந்தக் கார்ட்டூன்களை சங்கடத்துடனாவது சகித்துக் கொள்கிறார்கள் பெரும்பாலான பெற்றோர்கள். ‘குழந்தைகள் சேட்டை பண்ணாது... ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும்’ என்பதே இதற்கு பிரதான காரணம். ஆனால், நாம் நினைக்கும் அளவுக்கு கார்ட்டூன் நல்லதா? சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல சிறப்பு மருத்துவர் ஜெயந்தினியின் கருத்து வேறு மாதிரி இருக்கிறது...
‘‘அமுதமும் அதிகமானால் விஷமாகிவிடும். அளவுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. ‘என் பையன் ஆறாவது படிக்கறான். பேசறது, பார்க்கறது, அசையறது எல்லாம் அப்படியே கார்ட்டூன் சேனல்ல வர்ற ஒரு குறிப்பிட்ட கேரக்டர் மாதிரியே செய்யறான். ஆரம்பத்துல, நாங்களும் கைதட்டி என்கரேஜ் பண்ணினோம். இப்ப இவன் நார்மலா இருக்கறதே இல்லை’ என்று அழுதபடியே ஒரு அம்மா என்னிடம் வந்திருக்கிறார்.
இன்னொரு பையனை ஒரு அம்மா அழைத்து வந்தார்... ‘ரொம்ப முரட்டுத்தனமா நடந்துக்கறான்’ என்றார். அந்தப் பையனிடம், ‘நீ குட் பாயா? பேட் பாயா’ என்று கேட்டால், ‘நான் பேட் பாய்’ என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறான். காரணம், அவன் விளையாடின வீடியோ கேம். இப்படி விதம்விதமாக பலப் பிரச்னைகள் வருகின்றன.
பெற்றோர்களுக்குத்தான் இதில் முக்கிய பங்கு இருக்கிறது. குழந்தையை டி.வி பார்க்காதே என்று சொல்லிவிட்டு நாம் மணிக்கணக்கில் டி.வி முன்னால் உட்கார்ந்திருந்தால் அவர்கள் எப்படி நம் பேச்சைக் கேட்பார்கள்? முதலில் பெற்றோர்கள் திட்டமிட்டு டி.வி பார்க்க வேண்டும். குழந்தைகள் எதைப் பார்க்கலாம், எதைப் பார்க்கக் கூடாது என பெற்றோர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். வேலை கெடாம இருக்கும் என்று ஆரம்பத்தில் டி.வி பார்க்க விட்டுவிட்டால், அது ஆலமரமாக வளர்ந்து நிற்கும்போது பிரச்னைதான்.
ஸ்கூல் விட்டு வந்ததும் அக்கம்பக்கத்தில் இருக்கும் குழந்தைகளோடு விளையாடச் சொல்ல வேண்டும். அவர்களுக்குள் சண்டை வந்து அடித்துக் கொண்டாலும் தப்பில்லை. அடித்த குழந்தையைப் பெரியவர்கள் கண்டிக்கும்போது, அதைப் பார்க்கும் குழந்தைக்கு எது தப்பு? எது சரி? என்பது தானே தெரிந்துவிடும். அதன் பின் விட்டுக் கொடுத்து விளையாடத் துவங்குவார்கள். உள்ளுக்குள் அன்பு உருவாகும்.
மனித மூளையில் உள்ள நியூரான்களுக்கு இடையில் ஆக்சான் (axon) என்ற மெல்லிய இழை இருக்கும். ஐந்து வயதாகும்போதுதான் அது முழு வளர்ச்சி அடையும். டி.வி., கம்ப்யூட்டருடனேயே அதிக நேரம் செலவிடும் குழந்தைகளிடம், இந்த ஆக்சான் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். உடல் ரீதியான செயல்பாடுகளிலும் ஆர்வம் இல்லாமல் போகும். மற்றவர்களுடன் சேர்ந்து பழகுவது, விளையாடுவது போன்ற விஷயங்களை இயல்பாகக் கற்றுக்கொள்ளாமல் தனிமைப்பட்டுப் போகும் அபாயமும் இருக்கிறது. இப்போது பெரும்பாலான குழந்தைகளுக்கு ரிமோட் மூலமாக விரலுக்கு மட்டும்தான் எக்சர்சைஸ் கிடைக்கிறது. சாதாரணமாக அனுபவித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய நிறைய விஷயங்களை இந்த குழந்தைகள் மிஸ் செய்து விடுவார்கள். இதனால் சில குழந்தைகளுக்குப் பேசுவதிலும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதிலும் தாமதம் ஏற்படும்.
மணிக்கணக்கில் வீடியோவையே பார்த்து கற்கப் பழகும் குழந்தைகளுக்கு காலப்போக்கில் கற்பனை வறட்சி ஏற்பட்டுவிடும். எதையும் காட்சிகளாகக் காட்டினால்தான் புரிந்துகொள்வார்கள். கதை படித்து காட்சிகளை மனதில் கற்பனை செய்துகொள்ளும் திறமை இல்லாமல் போகும். அதனால் டி.வி ஓடும்போதே கண்களை மூடிக்கொண்டு காட்சிகளை மனதில் பார்க்க பயிற்சி தர வேண்டும். காமிக்ஸ் கதைப் புத்தகங்களைப் படிக்கவும் பழக்கப்படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, 45 நிமிடங்களுக்கு மேல் டி.வி பார்க்க அனுமதிக்கக் கூடாது. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கி, காலை ஆறு மணிக்கு முன்பு எழும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கார்ட்டூன் அமுதமாவதும் விஷமாவதும் அம்மாக்கள் கையில்தான் இருக்கிறது’’ என்றார் அவர் கவலையோடு!
- எஸ்.ஆர்.செந்தில்குமார்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்
டி.வி.,
கம்ப்யூட்டருடனேயே
அதிக நேரம்
செலவிடும் குழந்தைகளிடம், மூளையில்
உள்ள ஆக்சான்
எனும் மெல்லிய இழை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.