தமிழ் சினிமாவின் மகத்தான கலை ஆளுமைகளில் ஒருவரான வாலியின் மறைவு குறித்து தனது அஞ்சலியைப் பதிவு செய்கிறார்கள் அவர் நெஞ்சம் நெருங்கிய சிலர்...
கவிஞர் பா.விஜய்:வாலி ஐயா எப்படியும் இந்த முறை மருத்துவமனையில் இருந்து மீண்டு வந்துவிடுவார் என்றே நம்பியிருந்தேன். ஏமாற்றிவிட்டார். மருத்துவமனையிலிருந்த ஒவ்வொரு வாரமும் ஸ்ரீரங்கத்திலிருந்து பிரசாதம் வரவழைத்துத் தருவேன். ‘பிறந்த இடத்திலிருந்து சீதனம் எனக்கு வந்துக்கிட்டே இருக்கு’ என்பார். இன்று காலை கோயிலிலிருந்து ‘சார், பூஜை செய்து பிரசாதம் அனுப்பிவிட்டோம்’ என்றார்கள். ஐயா, அதை யாருக்குத் தருவது?
அக்டோபர் 29... ஐயாவின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவர் வீட்டிற்கு குடும்பத்தோடு போய் கேக் வெட்டுவேன். முதல் விள்ளலை சாப்பிடும் அவரது சந்தோஷ முகம் எனக்குப் பதிவில் இருக்கிறது. என் வீட்டுக்கு வந்து, ‘எம்.ஜி.ஆருக்குப் பின்னாடி உன்னைப் பார்க்கத்தாண்டா ராமாபுரம் வர்றேன்’ என்பார். அவர் சக கவிஞர்களைப் பாராட்டியது, ஊக்குவித்தது போல வேறு எவரும் செய்ததில்லை. நாம் இருக்காத இடத்தில் கூட நம்மைப் பற்றி பெருமையாகப் பேசுவார். எல்லோரையும் கொண்டாடுகிற சக கவிஞனை இங்கே பார்ப்பது அரிது. அந்த மனசைத்தான் மறக்க முடியவில்லை.
ஒவ்வொரு நாளின் இறுதி நேரத்திலும் நல்ல மனிதராகவே நாளைக் கழித்திருப்பார். அவர் எழுதாத பாட்டு இல்லை; சொல்லாத கருத்து இல்லை; மயக்காத வரிகள் இல்லை. ஆனால், மேதைமையை தலையில் போட்டுக் கொண்டு விறைத்து நடக்கமாட்டார். தாய்ப்பாலைப் போல சுரக்கும் தமிழும், எப்போதும் ததும்பும் புன்னகையும், 81 வயதிலும் அவருக்கு அழகு. விமர்சனங்களைக் கண்டுகொள்ளமாட்டார். ‘ஐயா, இதற்கு நீங்க பதில் தரலாமே’ என்றால், ‘பூவால கூட அவன் அடிக்கலை. கல்லால் திருப்பி அடிக்கணுமா... போப்பா’ என்பார்.
அவருக்கு விரால், வஞ்சிரம் மீன்கள் பிடிக்கும். என் வீட்டில் செய்திருந்தால் ரொம்பப் பிடிக்கும். நாலைந்து வாரங்களுக்கு ஒரு முறை ‘அய்யா, மீன் எடுத்திட்டு வரவா?’ என்று கேட்டால், ‘உன் அன்புதாப்பா பெரிசு. கொண்டுட்டு வா’ன்னு சொல்வார். ஒரு தடவை நேரமாகிவிட்ட அவசரத்தில் நிறைய மீன் குழம்பையும், குறைவான மீன் துண்டுகளையும் கொண்டு போய்விட்டேன். ‘ஐயா, மீன் சுவையா இருந்ததா’ என மறுநாள் கேட்டேன். ‘சாப்பிட்டேன்பா... குழம்பு அருமையா இருந்தது. மீனைத்தான் வலை போட்டுத் தேடினேன்’ என்றார். எதையும் சுவைபட எழுத மட்டுமில்லை... பேசவும் முடியும் அவரால்.

நமக்கெல்லாம் எவ்வளவு நிறைவு இருந்தாலும், இன்னும் போதவில்லை என்போம். ஆனால் அவர் ‘கிடைத்ததே பெரிசு, இருப்பதே போதும்’ என இருப்பார். சந்திக்கும் ஒவ்வொருத்தரையும் அன்பு செய்வார். நம்மால் பல நேரங்களில் அப்படி இருக்க முடியாமல் போகிறது. அவர் எந்தக் கணத்திலும் எந்த மனுஷனையும் ஒதுக்கியது கிடையாது. அப்படி ஒரு கனிவான மனநிலையை அடைந்திருந்தார். அவரால் யாருக்கும் கெடுதல் நினைக்க முடியாது. நான் இப்போது இழந்திருக்கும் அவரது அன்பை ஈடுகட்டவே முடியாதென்று தோன்றுகிறது.
பாடல் வகையில் அவர் பங்கை தமிழ் சினிமா வரலாறு சொல்லும். அவரின்றி ஓர் அணுவும் அதில் அசையாது. எங்களின் இழப்பிற்கான ஆறுதல் வார்த்தைகள் கடவுளிடமும் இல்லை.’’
வசனகர்த்தா
ஆரூர்தாஸ்:எனக்கு இது பெரிய துயரம். என்னை விட ஒரு மாதம் இளையவர் வாலி. என்னை ‘திருவாரூர் அண்ணா’ என்பார். அவரை ‘திருவரங்க தென்றலே’ என்பேன் நான். எம்.எஸ்.வியின் குருவான சுப்பையா நாயுடுவில் தொடங்கி, 5 தலைமுறை இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய பாடலாசிரியர் அவர் ஒருவரே. சிலேடை, சிருங்கார ரசத்தில் அவரை மிஞ்ச ஆளில்லை. அவைதான் எம்.ஜி.ஆரைக் கவர்ந்து இருந்தது. கண்ணதாசன் கோலோச்சிய காலகட்டத்தில் அவராலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டவர் வாலி மட்டும் தான். வாலி எழுதிய சில பாடல்களை எப்போதாவது கேட்டுவிட்டு கண்ணதாசனே ‘இந்தப் பாட்டை நான் எப்போது எழுதினேன்’ எனக் கேட்டிருக்கிறார். இப்படியொரு கவிஞனை இனி தமிழ் சினிமா சந்திக்குமா?
கவிஞர் நெல்லை ஜெயந்தா:சமீபத்தில் வாலி ஐயாவை சந்தித்து ‘வாலிப வாலி’ என்ற புத்தகம் கொண்டுவரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அதில் அவரைப் புகழ்ந்து பாடல் ஒன்றை எழுதியிருந்த நான், ‘கோடி கோடி கனவோடு கோடம்பாக்கம் வந்தாய்... கண்ணதாசன் கண்ணெதிரே நீ கொடி நாட்டி வென்றாய்’ என்று வரிகள் போட்டிருந்தேன். ‘அட போப்பா, கண்ணதாசன் எவ்வளவு பெரிய மனுஷன். அவருக்கு நான் போட்டி மாதிரி ஆயிடக் கூடாதுல்ல’ என்று மாற்றச் சொல்லிட்டார். ‘கண்ணதாசன் கொடியோடு நீ கொடிநாட்டி நின்றாய்’ என்று அது மாற்றப்பட்டது.
கவிஞர்களிடம் காணக் கிடைக்காத பங்ச்சுவாலிட்டி ஐயாவிடம் உண்டு. எந்த டியூனுக்கும் உடனுக்குடன் 4 பல்லவி, 4 சரணம் எழுதிக் கொடுத்துவிடுவது அவர் பாணி. 1958ல் திரைத்துறைக்கு வந்தவர் இதுவரை தமிழகத்தை விட்டு எங்கும் போனதில்லை. பாஸ்போர்ட் இல்லாத ஒரே சினிமாக்காரர். ‘‘எனக்குள்ள ‘ஃபாரீன்’ போயிருக்கு... ஆனா நான் ஃபாரீன் போனதில்ல’ என்று அதைக்கூட நகைச்சுவையாக குறிப்பிடுவார். கடைசியாக நான் அவரை மருத்துவமனையில் பார்த்தபோது கூட, ‘இன்னும் 10 வருஷத்துக்கு நான் இருப்பேன்யா’ என்றார். ஆனால் முதல்முறையாக சொன்ன சொல் தவறியிருக்கிறார் எங்கள் ஐயா!
- நா.கதிர்வேலன், அமலன்
படங்கள் உதவி: ஞானம்