ஈழத்துக் களம் ராணுவச் சமர்களிலிருந்து வெளியே வந்து இப்போது ராஜதந்திர அரசியல் சமர்களின் களமாகியிருக்கிறது. இந்த சூழலில் தீவிர தமிழ் தேசியக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தீவிர தமிழ் தேசியவாதியும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜாவே வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என முன்னர் கூறப்பட்டது. ஈழத்தில் எழுபதுகளில் மாணவர் அமைப்புகள் ஆரம்பித்த காலங்களிலிருந்து முன்னணியில் நின்று அரசியல் களம் கண்டவரான சேனாதிராஜா, புலிகளின் தீவிர ஆதரவாளர். ஆனால் விக்னேஸ்வரன் பெயரை சேனாதிராஜாவே அறிவித்திருப்பது அரசியல் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
‘‘இந்தியாவின் ‘ரா’ உளவு அமைப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து செய்யும் காய் நகர்த்தல்தான் விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது. இது நாட்டுக்கு ஆபத்து’’ என உடனடியாகவே சிங்கள கடும்போக்கு அமைப்புகள் கோஷம் போட ஆரம்பித்துள்ளன. அதேநேரம் தமிழர் தரப்பிலும் அதிருப்தி எழாமல் இல்லை. விக்னேஸ்வரன் கொழும்பிலேயே அதிக காலம் வாழ்ந்தவர். அவருடைய இரண்டு பிள்ளைகளும் சிங்களர்களையே திருமணம் செய்திருக்கிறார்கள். இந்த வகையில், ராஜபக்ஷே அரசில் தேசிய மொழிக் கொள்கைகள் நல்லிணக்க அமைச்சராக இருக்கும் இடதுசாரித் தலைவரான வாசுதேவ நாணயக்கார இவருக்கு சம்பந்தி.
ஆனாலும் இந்த விமர்சனங்களுக்கு அப்பால், நீண்டகாலமாகவே விக்னேஸ்வரன் தமிழ் தேசிய அரசியலோடு இணைந்திருப்பவர் என விமர்சகர்கள் கூறுகின்றனர். சர்வதேச அரங்கில் நன்கு அறிமுகமானவரான விக்னேஸ்வரன், இலங்கையில் தற்போதுள்ள தமிழ் அறிவுஜீவிகளில் முக்கியமானவர். கடந்த நாற்பது வருடங்களாக இலங்கை நீதித் துறையில் வக்கீலாகவும் மாவட்ட நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை நீதிபதியாகவும் பணியாற்றியவர். ஈழத் தந்தை செல்வா முதல் தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான ஆர்.சம்பந்தன் வரை பலரும் சட்டத்துறையைச் சேர்ந்தவர்களே.
தற்போது இலங்கை அரசு சட்டத்தின் மூலமே தனது காய்நகர்த்தல்களைச் செய்து, ‘ஒரே நாடு ஒரே மக்கள்’ என்ற கோஷத்தின் கீழ் தமிழர் நிலங்களைத் துண்டாடும் வேலையைச் செய்து வருகிறது. தமிழர்கள் அறிவாயுதம் ஏந்த வேண்டிய நேரம் இது! சட்ட நுணுக்கங்கள் தெரிந்த, சர்வதேச அறிமுகம் உள்ள, புலிகள் சார்பான அடையாளம் இல்லாத ஒருவர் வடக்கின் முதலமைச்சர் ஆவதன் மூலமே சர்வதேச ஆதரவைத் திரட்டி தமிழர் அதிகாரங்களைப் பெற முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்புகிறது. அடிப்படையில் சமஷ்டி அரசியல் தீர்வில் நம்பிக்கையுள்ள விக்னேஸ்வரனை முன்னிறுத்துவதன் மூலம், இந்தியாவின் முழுமையான அனுசரணையும் கிடைக்கும்.

போர் முடிந்து நான்கு வருடங்களின் பின்னரும், 90 சதவீதம் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட வடக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடத்த இலங்கை அரசு மறுத்து வந்தது. தற்போது இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக தேர்தலை நடத்துகிறது. தமிழ்ப் பகுதிகளில் அதிக செல்வாக்கு உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ‘மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்க வேண்டும்’ என முன்வைத்த கோரிக்கைகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. அதேபோல் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் காரணமாக உருவான 13வது திருத்தச் சட்டத்தையோ அமல்படுத்தவும் மறுத்து வருகிறது. இது அமலானால், மாகாணங்களுக்கு காணி மற்றும் போலீஸ் அதிகாரங்கள் கிடைக்கும். இதன் மூலம் குறைந்தபட்சம் தற்போது வடக்கு மாகாணத்தில் நடைபெற்று வரும் சிங்களக் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தலாம். ராணுவ ஆதிக்கமும் குறைய வாய்ப்பிருக்கிறது.
தற்போதைய அமைப்பில், முதலமைச்சருக்கு எந்த அதிகாரமும் இருக்காது. இலங்கை அதிபரால் நியமிக்கப்படும் ஆளுனருக்குக் கட்டுப்பட்டவராகவே அவர் இருப்பார். ஒருவேளை 13வது திருத்த சட்ட மூலத்தை இலங்கை அரசு அமல்படுத்த மறுத்தால், அது உலக அரங் கில் தமிழர்களுக்குச் சாதகமான ஒரு அரசியல் சூழலை உருவாக்கும். அதனை சரியாகப் பயன்படுத்தி சர்வதேச ஆதர வுடன் உரிமைகளைப் பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இப்போது கிழக்கு மாகாணம் தமிழர்களின் கையில் முழுமையாக இல்லை. இலங்கையின் சகல மாகாணங்களும் ராஜபக்ஷேவின் ஆளும் கூட்டணியிடமே இருக்கிறது. ஆகவே, வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக வருபவருக்கு அதிகாரம் இல்லாவிட்டாலும், அடுத்த கட்ட அரசியல் போராட்டத்தை நகர்த்தும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது.