நிழல்களோடு பேசுவோம்




ஃபேஸ்புக் அரசியலும் மனநோயும்
ஃபேஸ்புக் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு இந்தக் கட்டுரை கொஞ்சம் குழப்பமானதாக இருக்கலாம். ஃபேஸ்புக் நான்கு பேர் சேர்ந்துகொண்டு அரட்டை அடிக்கும் இடமாக, தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளும் இடமாகத்தான் உருவாக்கப்பட்டது. உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் யாரையேனும் நண்பர்களாக இணைத்துக்கொண்டால், நீங்களும் அவர்களும் எழுதுவது பரஸ்பரம் அவரவர் பக்கத்தில் தெரியும். 5000 பேர் வரை நண்பர்களாக வைத்துக்கொள்ளலாம் என்று கோட்டா சிஸ்டம் கொண்டு வந்தார்கள். ஆனால் சிலர் ஒருமாதத்திற்குள் அதை முடித்துவிட்டு, என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டு நிற்பதைக் கண்டு ஃபேஸ்புக்காரர்கள் ‘ஃபாலோயிங்’ என்று சொல்லக்கூடிய பின்தொடரும் முறையைக் கொண்டுவந்தார்கள். ஒருவரை எத்தனை ஆயிரம் பேர் வேண்டுமானாலும் பின்தொடரலாம். நடைமுறை வாழ்க்கையில் யாரோடும் முகம் கொடுத்துப் பேசாத ஒருவர் 5000 ஃபேஸ்புக் நண்பர்களை வைத்துக்கொள்வதும், அனாமதேயமான ஒருவர்கூட ஏகப்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டிருப்பதும் ஃபேஸ்புக் வினோதங்களில் ஒன்று.

ஃபேஸ்புக்கில் ஒருவரோடு எவ்வளவு பேர் இணைந்திருக்கிறார்கள் என்பது அவருக்கு சமூக வலைத்தள உலகில் ஒரு அந்தஸ்தை உருவாக்குகிறது. ஃபேஸ்புக்கில் மூன்று செயல்பாடுகள் முக்கியமானவை. முதலாவதாக, ஒருவர் எழுதும் கருத்துக்கு (ஸ்டேடஸ்) எவ்வளவு பேர் எதிர்வினையாற்றுகிறார்கள்(கமென்ட்ஸ்) என்பது. இரண்டாவதாக, அந்தக் கருத்துக்கு எவ்வளவு பேர் ‘லைக்’ என்ற பட்டனை அழுத்தி ஆதரவளிக்கிறார்கள் அல்லது அதை படித்ததாகக் காட்டிக்கொள்கிறார்கள் என்பது. மூன்றாவதாக, அந்தக் குறிப்பிட்ட கருத்தை எவ்வளவு பேர் தங்கள் பக்கங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள் (ஷேர்) என்பது. ஒருவருக்கு பத்தாயிரம் பேருக்கும் மேல் பின்தொடர்பவர்கள் இருந்து, அவரது ஒரு ஸ்டேடஸ் முன்னூறு கமென்ட்ஸ், ஐந்நூறு ஷேர், ஆயிரம் லைக்கிற்கு மேல் வாங்கத் தொடங்கினால் அவர் ஒரு பிரபல ஃபேஸ்புக் பதிவராக அறியப்படுகிறார்.

இதில்தான் பிரச்னை ஆரம்பிக்கிறது. சமூகத்தில் அடையாளங்களற்ற மனிதர்கள், கவனிக்கப்படாத மனிதர்கள், ஒரு சிறிய அங்கீகாரத்திற்காக ஏங்கித் தவிப்பவர்களின் உளவியலில் இந்த ‘லைக், கமென்ட், ஷேரிங்’ சார்ந்த விஷயங்கள் மிகப்பெரிய மனப்பிறழ்வை உண்டாக்கத் தொடங்கிவிட்டன. டி.வியில் ஞாயிற்றுக்கிழமை மாலை என்ன படம் என்பதை ஒரு நிலைத் தகவலாக போடுகிறவர்கள் தொடங்கி, சமூகத்தில் ஜாதி மத துவேஷங்களை ஃபேஸ்புக்கில் பரப்புகிறவர்கள் வரை தங்களது ஸ்டேடஸிற்கு என்ன ரெஸ்பான்ஸ் என்று நிமிடத்திற்கு ஒருமுறை யோசித்துக்கொண்டே இருப்பார்கள். ஃபேஸ்புக் உபயோகிக்க முடியாத இடங்களில் அவர்களது பதற்றம் பெருமளவு அதிகரித்துவிடுகிறது. ஒரு சிறிய இடைவெளி கிடைத்தால்கூட செல்போனை எடுத்து, ‘எத்தனை லைக் விழுந்திருக்கிறது’ என்று பார்ப்பார்கள். பாத்ரூம் போய்விட்டு வருவதற்குக்கூட பலருக்குப் பொறுமை கிடையாது.



ஃபேஸ்புக்கிற்கு அடிமையானவர்கள் பற்றி இன்று ஏராளமான உளவியல், சமூகவியல் ஆய்வுகள் செய்யப்படுகின்றன. எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வதும், அதற்கு உடனடியாக ஒரு சமூக அங்கீகாரம் தேடுவதும் மிகப்பெரிய மனநோயாக வளர்ந்து வருகிறது. ஒரு விஷயம் நடந்துகொண்டிருக்கும்போதே அதைப்பற்றி ஃபேஸ்புக்கில் எழுதுவது என்பது, இப்போது ‘அந்த விஷயம் நடப்பதே ஃபேஸ்புக்கில் எழுதுவதற்குத்தான்’ என்பது போல மாறிவிட்டது. அலுவலகங்களில் ஃபேஸ்புக்கினால் வேலை சீர்குலைகிறது என்று பெரும்பாலான இடத்தில் அவற்றைத் தடுத்துப் பார்த்தார்கள். ஆனால் அதிவேக 3ஜி ஸ்மார்ட் போன்கள் வந்தபிறகு அதுவும் பயனற்றுப் போனது. இதற்கு அடிமையானவர்கள் எப்போதும் இந்த ஃபாலோயிங் அல்லது லைக் விவகாரத்தில் மற்றவர்களோடு கற்பனையான போட்டியும் பொறாமையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதேபோல ஃபேஸ்புக்கில் பகிரப்படும் சுற்றுலா புகைப்படங்கள், குடும்பப் புகைப்படங்கள், வசீகரமான மனிதர்களின் புகைப்படங்கள் பிறருக்கு ஆழ்ந்த பொறாமை உணர்ச்சியை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், மிக அதிக நேரம் ஃபேஸ்புக்கில் இணைந்திருப்பவர்கள் நடைமுறை வாழ்க்கையில் உடன் இருப்பவர்களோடு சண்டையிடும் குணம் கொண்டவர்களாகவும், தனிமை உணர்ச்சி மிகுந்தவர்களாகவும், படிப்பு, வேலை ஆகியவற்றில் கவனச்சிதைவு கொண்டவர்களாகவும் மாறி வருவதை பல ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

முற்போக்கான ஜனநாயக சக்திகள் இந்தியாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதைவிட, பிற்போக்கு சக்திகளும் சமூகப் பிரிவினைகளைத் தூண்டும் சக்திகளும் பெருமளவுக்குப் பயன்படுத்துகின்றன. தங்கள் அடையாளங்களை மறைத்துக்கொண்டு வெறுப்பை எந்த நாகரிக உணர்ச்சியுமின்றி பச்சையாக வெளிப்படுத்துகிறவர்கள் இதில் மூர்க்கமாக செயல்படுகிறார்கள். சாதி, மத, இனத் துவேஷங்களைப் பரப்புவதற்காக ஏராளமான ஃபேஸ்புக் பக்கங்கள் காணக் கிடைக்கின்றன. நமது சமூகத்தில் எவ்வளவு படித்த முட்டாள்களும், கொடூரமான பகையுணர்ச்சி கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை இந்தப் பக்கங்களைப் படித்தாலே தெரிந்துகொள்ளலாம். இதற்கு முன் இவர்களை, கலவரங்களில் நம்மை வெட்ட வரும்போது மட்டுமே நாம் பார்த்திருப்போம்.

இந்த பின்தொடர்பவர்கள் மற்றும் லைக் போடுகிறவர்கள் விவகாரம் ஒரு அரசியல் பிரச்னையாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. நவீன தொழில்நுட்ப யுகத்தில், ஆயிரக்கணக்கான போலி சமூக வலைத்தள கணக்குகளை உருவாக்கி போலி லைக்குகளைப் போட முடியும் என்பது இன்று வெளிவந்திருக்கிறது. நரேந்திர மோடிக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்று அவரது அரசியல் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்து வந்தார்கள். அவரது ஃபேஸ்புக் பக்கத்திற்கு 21 லட்சம் லைக்குகளும், அவரது ட்விட்டர் பக்கத்தில் 18 லட்சம் ஃபாலோயர்களும் இருப்பதாகப் பெருமையடித்துக் கொண்டார்கள். லண்டனில் உள்ள ஒரு தொழில்நுட்பக் குழு இதை ஆய்வு செய்து  பார்த்ததில், 46 சதவீதக் கணக்குகள் போலியானவை என்பதையும், 41 சதவீதக் கணக்குகளில் எந்த செயல்பாடும் இல்லை என்பதையும் கண்டு பிடித்தார்கள். அதாவது 87 சதவீத கணக்குகள் போலியானவை, அல்லது செயற்கையானவை.

போலி லைக்குகள் அல்லது போலி ஃபாலோயர்களை உருவாக்கித் தருவது இன்று மிகப் பெரிய வர்த்தகமாக மாறி வருகிறது. ‘ஃபேன் புல்லட்’ என்று ஒரு நிறுவனம் இருக்கிறது. நீங்கள் 2400 ரூபாய் கொடுத்தால் உங்களுக்கு ஒரே வாரத்தில் 1000 ஃபாலோயர்களை உருவாக்கித் தந்துவிடுவார்கள். ஒரு டாலருக்கு 1000 லைக் என்ற அளவுக்கு விலை இப்போது படு மலிவாகிவிட்டது. எந்த எந்த இடத்திலிருந்து எந்த நோக்கத்திற்காக உங்களுக்கு போலி நபர்கள் வேண்டுமோ, அதைத் துல்லியமாகச் செய்து தருவார்கள். அரசியல் கூட்டங்களுக்கு காசும் பிரியாணியும் கொடுத்து ஆள் கூட்டிவந்து பலத்தைக் காட்டுவதில்லையா... அதேபோலத்தான் இதுவும்! அந்த நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் பத்தாயிரம் பேருக்கு இதேபோல சேவை வழங்கியிருப்பதாகக் கூறுகிறது. இதற்காகப் பல விசேஷ மென்பொருட்கள் இருக்கின்றன. Load   runner, VSTS, Silk Performer போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் ஒரு பதிவிற்கு இரண்டு லட்சம் லைக் வரை விழ வைக்க முடியும் என்கிறார்கள். அரசியல்வாதிகள் மட்டுமல்ல... ஏராளமான வர்த்தக நிறுவனங்களும் இந்த சேவையைப் பரவலாகப் பயன்படுத்துகின்றன. ஒரு சொறி, சிரங்கு வைத்தியரை ஒரு லட்சம் பேர் ஃபாலோ செய்வதாக நீங்கள் ஃபேஸ்புக்கில் பார்த்துவிட்டுப் போனால், உங்களுக்கு பல புதிய அபாயங்கள் அங்கே காத்திருக்கலாம்.

இந்த மோசடிகள் இப்போது அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டன. அலகாபாத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற 19 வயது இளைஞர் NaMopad   என்கிற ஒரு மென்பொருளை உருவாக்கி இருக்கிறார். இதில் நீங்கள் மோடி, வளர்ச்சித் திட்டம், இந்து தேசியம், அடுத்த பிரதமர் என சில வார்த்தைகளை உள்ளிட்டால் போதும். அந்த மென்பொருளே தன்னிடம் உள்ள தகவல்களை ஒருங்கிணைத்து ஒரு கட்டுரையை எழுதிக் கொடுத்துவிடும். மோடியின் புகழைப் பரப்ப 7200 எலக்ட்ரானிக் ராணுவத்தினர் செயல்படுவதாகச் சொல்லப்
படுகிறது.
நமது காலத்தின் மாபெரும் புரட்சியாகக் கருதப்பட்ட சமூக வலைத்தளங்கள், மிகப்பெரிய மோசடிகளின், மனநோயின் ஊற்றுக்கண்ணாக மாறி
வருகின்றன.
(பேசலாம்...)

மனுஷ்ய புத்திரன் பதில்கள்

டாஸ்மாக்கில் மினி குவார்ட்டர் வரப்போகிறதாமே?
- மு.மதிவாணன், அரூர்

‘கையில அம்பது ரூபாதானே இருக்கு... எப்படி குடிக்கறது’ன்னு மனச மாத்திக்கிட்டு நீங்க வீட்டுக்குப் போயிடக்கூடாதே. அதற்காகத்தான் இந்தத் திட்டம்.
நான் இந்து தேசியவாதி என்று நரேந்திர மோடி கூறியிருக்கிறாரே?
- வண்ணை கணேசன், சென்னை.

தாராளமாகக் கூறலாம். இந்த நாட்டில் ஒருவர் இஸ்லாமிய தேசியவாதி என்றோ, கிறிஸ்தவ தேசியவாதி என்றோ, தமிழ் தேசியவாதி என்றோ சொன்னால்தான் பிரச்னை.   
சேது சமுத்திரப் பிரச்னையில் ராமரை இழுப்பது சரியா?
- அ.ஜாஹிர் உசேன், உலகாபுரம்.

ராமர் இல்லாமல் இனி இந்திய அரசியல் இல்லை.
ஆண் லஞ்சம் வாங்குவது, பெண் லஞ்சம் வாங்குவது - என்ன வேறுபாடு?
- பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

ஒரு வேறுபாடும் இல்லை. இரண்டு பேர் வாங்குவதும் குடும்பத்தின் நன்மைக்குத்தானே!
சிறையிலிருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்கிற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றி...
- எஸ்.பி.பாபு, முள்ளிக்காடு.

யார் எதற்காக சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் இதுபோன்ற தீர்ப்புகளை வழங்குவது ஆபத்தானது.

(சமூகம், இலக்கியம், சினிமா, அரசியல்... எதைப் பற்றியும் கேளுங்கள் மனுஷ்யபுத்திரனிடம். உங்கள் கேள்விகளை ‘மனுஷ்யபுத்திரன் பதில்கள், குங்குமம், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை-600004’ என்ற முகவரிக்கு அனுப்புங்கள். email: editor@kungumam.co.in)

நெஞ்சில் நின்ற வரிகள்

வாழ்க்கையில் மிகக் கொடுமையான உணர்வுகளில் ஒன்று, நம் நேசத்திற்குரியவரைச் சந்தேகிப்பது. மனம் எந்த அளவிற்கு சந்தேகிக்கிறதோ, அதைவிட அதிகமாக அந்த சந்தேகத்திற்கு எதிரான நம்பிக்கைகளையும் சமாதானங்களையும் திரட்டிக்கொள்ள முற்படும். அந்த நம்பிக்கையும் சுயசமாதானமுமே வாழ்க்கையையும் உறவுகளையும் நீடித்திருக்கச் செய்வதற்கான ஒரே பற்றுக்கோடாக இருக்கிறது. ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் புலமைப்பித்தன் எழுதிய இந்தப் பாடல், சந்தேகத்தின் நிழலில் பிடிமானம் தேடி தடுமாறும் ஒரு மனதின் தத்தளிப்பை வெகு அழகாகச் சித்தரிக்கிறது...
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
மேயுதுன்னு சொன்னதுல
நியாயம் என்ன கண்ணாத்தா...
பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு
செங்கனையா தின்னதுன்னு சொன்னாங்க
செங்கனையா தின்னிருக்க நியாயமில்ல
அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல...
இந்தப் பாடல் முழுக்க நடக்க முடியாத, நடக்கக் கூடாத விஷயங்களின் படிமங்கள் மிக எளிய முறையில் எழுதிச் செல்லப்படுகின்றன. ‘கட்டுக்கதை... அத்தனையும் கட்டுக்கதை...’ என்ற வரிகளை எஸ்.பி.பி பாடும் விதத்தில் நம் மனம் ஒருமுறை விம்மித் தணிகிறது.

எழுதிச் செல்லும் இணையத்தின் கைகள் : யுவ கிருஷ்ணா

சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் நீண்டகாலமாக தீவிரமாக இயங்கி வரும் பத்திரிகையாளர், எழுத்தாளர். சினிமா, அரசியல், சமூகம் சார்ந்து மிகுந்த எள்ளலும் கூர்மையான பார்வையும் கொண்டு தொடர்ந்து எழுதி வருபவர். சமீபத்திய அவரது ஒரு பதிவு:

‘நூற்றியறுபது வருடகால வரலாற்றைக் கொண்ட தந்தி, எனக்கு வந்ததுமில்லை. நான் அனுப்பியதுமில்லை. ஆனால், எனக்கு முந்தைய தலைமுறைக்கு ‘தந்தி’ ஒரு அத்தியாவசியமான சேவையாக இருந்திருப்பதை இன்று உணர முடிகிறது. பலருடைய வாழ்க்கைப் பாதையையே ஒரு தந்தி மாற்றியமைத்திருக்கிறது. அப்பாயின்ட்மென்ட் ஆர்டரைக்கூட தந்தியில் பெற்றவர்கள் இருந்திருக்கிறார்கள். திருமண அழைப்பிதழாகவும், மரண அறிவிப்பாகவும்கூட தந்தி சேவை செய்திருக்கிறது. முன்பெல்லாம் ஊரில் ஏதாவது சாவு விழுந்துவிட்டால் சாவு வீட்டில் வழக்கமாக இந்தக் கேள்வியை யாராவது கேட்டுக் கொண்டிருப்பார்கள் -‘‘தந்தி ஆபீஸுக்கு ஆள் அனுப்பிச்சாச்சா?’’

தந்தி என்பது செய்தே ஆகவேண்டிய மரபுகளில் ஒன்றாக அப்போது இருந்திருக்கிறது. ஒரு வகையில் பார்க்கப் போனால் கம்ப்யூட்டர், இன்டர்நெட் வருவதற்கு முன்பாகவே ‘எஸ்.எம்.எஸ்’, ‘ட்விட்டர்’ போன்றவை தந்தி வடிவில் இருந்திருக்கின்றன. https://www.facebook.com/yuvathamizh?fref=ts