டாப்ஸி... டாப்ஜீ!




‘தாய்லாந்து டைரி’ சுற்றுலா, ஆரம்பமே

அட்டகாசம். சோழ மன்னன் முதலாம் ராஜேந்திரன் அப்போதே கடற்படையெடுப்பு மூலம் தாய்லாந்தை ஆண்டதைப் படித்து ஆச்சரியமடைந்தேன். பத்து ரூபாயில் வாராவாரம் தாய்லாந்தைச் சுற்றிக் காட்டப் போகும் தங்களுக்கு நன்றிகள் பல!
- சி.ப.சந்தானகோபால கிருஷ்ணன்,மஞ்சக்குப்பம்.

போஸ் கொடுப்பதில் டாப்ஸியின் பாடி லாங்குவேஜ் அசத்தல் என்று புகைப்படக் கலைஞர் சந்திரசேகர் சொல்லியிருப்பது உண்மைதாங்க. அட்டையிலும் டாப்ஸி போட்டோ ‘டாப்’ ஜீ!
- இரா.பால்பாண்டி, திருப்பூர்.

டி.ஆர் பேட்டி என்றாலே கலகலப்பு... படிக்க ரொம்ப விறுவிறுப்பு... படித்து முடித்ததும் சுறுசுறுப்பு... அது கோலிவுட்டில் ஏற்படுத்தும் பரபரப்பு... அங்கு சிலருக்கு நிச்சயம் வரும் கிறுகிறுப்பு... அதிலும் உங்கள் பேட்டி படுசிறப்பு!
- சி.கொ.தி.முருகேசன், குன்னத்தூர்.

செலவே இல்லாமல் சோதனைக் குழாய் குழந்தை பெற முடியும் என்கிற தகவல்கள், மகப்பேறு இல்லாதோர் - அதிலும் ஏழைத் தம்பதிகளின் - மனதில் மகிழ்ச்சியைப் பிறக்க வைக்கும்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்;இ.பசரியா, திருச்சி-20.

கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றால், எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி உடனே பறிக்கப்படும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, அரசியல் பழிவாங்கல்களுக்குத்தான் பயன்படுமே தவிர, ஒருபோதும் கிரிமினல்களை விரட்ட உதவாது!
- எஸ்.டி.ரத்தினகுமார், புதுச்சேரி; எம்.எஸ். இப்ராகிம், சென்னை-91.

அமிலத்துக்கு அணை போட வேண்டும் என்று துடிக்கும் அபர்ணா பட்டின் கேள்விகள் அனைத்தும் நியாயமானவையே! வெறும் 30 ரூபாயில் இளம் பெண்களின் வாழ்க்கை பறிக்கப்படுவது ரொம்பவும் கொடுமை!
- கே.டி.முத்துவேல், கருப்பூர்.

தமிழ்ப்பட நட்சத்திரங்கள் பலரே பின்னணிக் குரலை நம்பியிருக்கையில், கோலிவுட் வந்திருக்கும் ஜெசி பேக்ஸ் ஆலன் என்கிற ஸ்காட்லாந்து நடிகர் சொந்தக் குரலிலேயே தமிழில் பேசி நடித்திருக்கும் செய்தி, ‘காதில் தேன் வந்து பாய்ந்தது’ போலிருந்தது.
- எஸ்.சாந்தி, காட்பாடி.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்திருப்பதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தியுள்ள சோலை மாரியப்பனால் நூற்றுக்கணக்கான இளவரசர்கள் பூமியில் தலைநிமிர்ந்து வாழ்வார்கள்!
- நா.ந.கீதாராணி,திருவிடைமருதூர்.

01.07.2013 தேதியிட்ட குங்குமம் இதழில், ‘இவங்க ரெடிமேட் ஆடியன்ஸ்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், என்னைப் பற்றிய குறிப்பில், ‘சட்டம் படித்திருந்தாலும் பிராக்டீஸ் பண்ணவில்லை’ என்று பிரசுரமாகியுள்ளது. அது தவறான தகவலாகும். 1994 முதல் நான் வழக்கறிஞராகப் பயிற்சி செய்கிறேன் என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
- பால சீனிவாசன், வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்.