இன்னும் ஒரு டிரெய்லர் கூட வரவில்லை... முழுமையாக ஒரு ஸ்டில் பார்க்கக் கிடைக்கவில்லை. ஆனாலும் விக்ரம், ஷங்கர், ஆஸ்கார் கூட்டணியில் வரப்போகும் ‘ஐ’ படத்திற்காக கோலிவுட், பாலிவுட், டோலிவுட்... எல்லோரும் காத்திருக்கிறார்கள். ‘ஐ’ உருவாக்கத்தில் சில துளிகள்...
* ‘எந்திரனு’க்கு அடுத்து தமிழ் சினிமா வரலாற்றில் பெரிய பட்ஜெட்டில் தயாராகிற படம் ‘ஐ’. ‘அந்நியன்’ வெற்றிக்குப் பிறகு விக்ரம் ரொம்ப இஷ்டமாக ஆஸ்கார் பிலிம்சுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிற படம். 150 கோடி பட்ஜெட் எனச் சொல்லப்பட்டு, ஷங்கரால் 100 கோடி ரூபாய்தான் என ஒப்புதல் பெறப்பட்டது.

* விக்ரமுக்கு இரண்டு வேடங்கள். மிகவும் வலிமையான ஒரு கேரக்டர். இன்னொரு கேரக்டர்தான் மிகவும் பேசப்படுகிற, அவருக்கே அவருக்கான கேரக்டர் என்கிறார்கள். 15 கிலோவுக்கு மேல் குறைந்து, அடையாளம் காண முடியாதபடி மெலிந்து செய்கிற கேரக்டர். ‘‘தமிழில் வேறு எந்த நடிகரும் செய்யத் துணியாத உடல்மாற்றம் இது’’ என்கிறார்கள். ஷூட்டிங் ஸ்பாட், ஜிம், வீடு தவிர வேறு எங்கேயும் விக்ரமைக் காணமுடியாது. கிட்டத்தட்ட பதுங்கு குழி வாழ்க்கைதான்!
* இதனால் உடம்பே நடுங்கிப்போய் சிலநேரம் தாமதமாகப் போவாராம் விக்ரம். அவரின் கஷ்டத்தை அனுசரித்து இப்போது ஷூட்டிங் நேரத்தை அவருக்கேற்றபடி வைத்திருக்கிறார் ஷங்கர். அந்தத் தோற்றத்தைப் பார்த்த அத்தனை நடிகர்களும் விக்ரமின் சினிமா பக்தியைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். இப்போது மொட்டை போட்டிருக்கிறார் விக்ரம். இந்த ஒரே படம் அவரின் உயரத்தை மேலும் மேலும் உயர்த்தி விடும் என்பதுதான் உண்மை.

* சீனா, பாங்காக், சென்னை, பொள்ளாச்சி என பரந்துபட்ட ஷூட்டிங் லொகேஷன்கள். சீனாவில் அவர்கள் ஊரை சரியான நோக்கத்தில் காட்டு கிறார்களா என்று பார்த்திருக்கிறார்கள். அதன்பின், கேட்ட இடத்திற்கெல்லாம் ஷூட்டிங் அனுமதி.
* விக்ரம் சமாளித்துவிட்டார். ஷங்கர் சாப்பாட்டுக்காக சீனாவில் பட்ட அவதி சொல்லி மாளாதது. பெரும்பாலும் பன், பட்டர், ஜாம், முட்டை ஆம்லெட்தான் மெனு.
* மலையாள சுரேஷ் கோபிக்கு முக்கியமான கேரக்டர். அதே மாதிரி, பிரபுவின் அண்ணன் ராம்குமாரின் நடிப்பைப் பார்த்து ஷூட்டிங் ஸ்பாட்டில் அசந்துவிட்டார்கள்.

* ஒரே ஒரு முறை ஷங்கர், பி.சி.ஸ்ரீராம் இடையே கருத்து வேறுபாடு வந்தது. ஒரே ஒரு நாள் மட்டும் ஷங்கரின் அக்கா மகனை வைத்து (அவரும் ஒளிப்பதிவாளர்) ஷூட்டிங் நடந்தது. அடுத்த நாளே சமாதானக்கொடி பறந்து இன்று வரை ஷூட்டிங் அழகாகப் போய்க்கொண்டு இருக்கிறது. கலைஞர்களுக்குள் இதெல்லாம் சாதாரணமப்பா!
* அரசியல் படம், சமுதாயச் சீர்கேடுகளைச் சாடும் என்றார்கள். அப்படியே ‘ஜென்டில்மேன்’ டைப் படமெனவும் காற்றுவாக்கில் செய்திகள். ஆனால் ‘ஐ’ நிஜமாக, ரொமான்டிக் த்ரில்லர்.
* இந்த வருடத்திற்குள் படப்பிடிப்பு சம்பந்தமான வேலைகள் எல்லாம் முடிந்துவிடும். அனேகமாக பொங்கல் வெளியீடு... அல்லது, நேரடியாக தமிழ் வருடப்பிறப்பு.
* ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களைப் போட்டுக் கொடுத்துவிட்டார். ‘‘பின்னணி இசைக்கு ஒரு மாதமாவது டைம் வேண்டும். முன்னாடி சொல்லிடுங்க சார்’’ என ஷங்கரை கேட்டுக்கொண்டிருக்கிறாராம். இந்தியிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியீடு!
- நா.கதிர்வேலன்