ஆதார் அட்டை வாங்குவது எப்படி?




எங்கு பார்த்தாலும் ஆதார் அட்டை பரபரப்பு. ‘‘உங்களுக்குக் கிடைச்சிடுச்சா... எங்க ஏரியாவுக்கு இன்னும் வரலையே?’’ என ஆளாளுக்கு அல்லாடுகிறார்கள். சாதாரணமாக ‘ஆதார் அட்டைக்கு தகவல் தாருங்கள்’ என்று அழைத்திருந்தால், இந்த அளவுக்கு மக்கள் ஆர்வம் காட்டியிருப்பார்களா தெரியவில்லை. ‘ஆகஸ்ட் இறுதிக்குள் ஆதார் எண் வாங்காவிட்டால், சமையல் எரிவாயு மானியம் கிடைக்காது’ என்று சொல்லப் போக, ஆபீஸுக்கெல்லாம் லீவு போட்டுவிட்டு மக்கள் வரிசை கட்டுகிறார்கள்.

தொடக்கம் முதலே ஆதார் அட்டை விவகாரத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள். ஆதார் அட்டை வழங்குவதற்கென இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நந்தன் நீலகேணி தலைமையில் ‘இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையமைப்பு’ (ஹிமிஞிகிமி) அமைக்கப்பட்டது. முதலில் அஞ்சலகங்கள், வங்கிகளில் விண்ணப்பம் வழங்கப்பட்டு, இந்த அமைப்பே பயோமெட்ரிக் (இரு கண் கருவிழிப்படலங்கள், 10 விரல் ரேகை) தகவல்களைச் சேகரித்து ஆதார் அட்டை வழங்கியது. சென்னையில் மட்டும் சுமார் 20 லட்சம் பேர் ஆதார் அட்டை பெற்றார்கள். மேலும் 20 லட்சம் பேரிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், அந்தப் பணி திடீரென நிறுத்தப்பட்டது.

இப்போது ஆதார் அட்டை வழங்கும் பணி மக்கள்தொகை கணக்கெடுப்புத் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ‘பயோமெட்ரிக்’ தகவல்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதிலும் ஏகப்பட்ட கேள்விகள். தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்புத் துறையின் இணை இயக்குனரும், கட்டுப்பாட்டு அதிகாரியுமான எம்.ஆர்.வி.கிருஷ்ணராவை சந்தித்து அவரிடம் கேள்விகளை முன்வைத்தோம்.

ஆதார் அட்டையில் ஏன் இத்தனை குழப்பம்?

‘‘எந்தக் குழப்பமும் இல்லை. முதலில் ஹிமிஞிகிமி   நிறுவனம் ஒரு விண்ணப்பத்தை அளித்து, அதன் அடிப்படையில் ஆதார் அட்டைகளை வழங்கியது. இப்போது அந்தப் பணியை சிறிது மாற்றத்தோடு நாங்கள் மேற்கொள்கிறோம். 2010 ஜூலையில் மேற்கொள்ளப்பட¢ட மக்கள்தொகை கணக்கெடுப்பு தகவல்கள் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மூலம் எலெக்ட்ரானிக் டேட்டாவாக மாற்றப்பட்டு ஆன்லைனில் சேமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தைப் பற்றியும் 14 தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதோடு இப்போது பயோ மெட்ரிக் தகவல்களையும் சேகரிக்கிறோம். ஒவ்வொரு தனி நபரைப் பற்றியும் உறுதியான முழுத் தகவல்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு ‘ஆதார் எண்’ வழங்கப்படுகிறது.’’

ஆதார் அட்டையில் என்னென்ன சிறப்பம்சங்கள்?
‘‘இப்போது ஆதார் அட்டை வழங்கும் பணி நடக்கவில்லை. ஆதார் எண் மட்டுமே வழங்கப்படுகிறது. ‘ஆதார் அட்டையில் என்னென்ன இடம்பெறும்... அட்டை எப்படி வடிவமைக்கப்படும்’ என்பதெல்லாம் இப்போதும் விவாத அளவில்தான் இருக்கிறது. சேகரிக்கப்படும் தகவல்கள் திரும்பவும் மக்களிடத்தில் வழங்கப்பட்டு, திருத்தங்கள் இருந்தால் மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்படும். கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் தகவல்கள் உறுதி செய்யப்படும். இந்தப் பணிகள் முடிந்த பிறகே அட்டை வழங்கும் பணி தொடங்கும்.’’



சென்னையில் ஏற்கனவே 20 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதே?

‘‘உண்மைதான். அவர்களது ஆதார் எண்ணில் மாற்றம் இருக்காது. ஆனால், அவர்களும் தங்கள் பகுதியில் தற்போது நடைபெறுகிற பயோமெட்ரிக் தகவல் சேகரிப்பு முகாமுக்குச் சென்று அட்டையைக் காண்பித்து தகவல்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பயோ மெட்ரிக் தகவல்களை மீண்டும் பதிவு செய்ய வேண்டியதில்லை. ஆனால், இதற்கு முன்பு பதிவு செய்து இதுவரை கார்டு பெறாதவர்கள், மீண்டும் முகாமுக்கு வந்து பயோமெட்ரிக் தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இப்போது ஆதார் அட்டைக்காக சேகரிக்கப்படும் தகவல்கள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் எடுக்கப்பட்ட தகவல்களோடு இணைக்கப்படுகின்றன. அவர்கள் முன்பு பதிவு செய்தபோது இந்த நடைமுறை இல்லை.’’

தங்கள் பகுதியில் ஆதார் முகாம் நடப்பதை மக்கள் எப்படித் தெரிந்துகொள்வது? என்னென்ன ஆவணங்களை எடுத்து வர வேண்டும்?
‘‘மக்கள் பதற்றப்படவே தேவையில்லை. ஒரு பகுதியில் முகாம் தொடங்குவதற்கு முன்பாக, இடம், நாள், நேரம், யாரெல்லாம் வர வேண்டும் என்ற தகவல்கள் அடங்கிய கே.ஒய்.ஆர் பிளஸ் என்ற படிவத்தை அலுவலர்கள் வீடு தேடி வந்து தருவார்கள். அந்த படிவம் வராவிட்டால் இன்னும் அந்தப்பகுதியில் முகாம் தொடங்கவில்லை என்று பொருள். மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது ஒரு ரசீது வழங்கப்பட்டது. அதைக் கொண்டு வரவேண்டும். அது தவிர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட்... இவற்றில் ஏதாவது ஒன்றோ, அல்லது எல்லாவற்றையுமோ எடுத்து வரலாம். அதிகாரிகள் சரிபார்த்துவிட்டுத் தந்துவிடுவார்கள். எந்த ஆவணமுமே இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை. தகவல்களை டேட்டா பேசில் இருந்து எடுத்துத் தர, முகாமிலேயே தனியாக அலுவலர்கள் இருப்பார்கள்.’’

மக்கள்தொகை ரசீது தொலைந்துவிட்டால்..? அல்லது மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யாதவர்கள் என்ன செய்வது?
‘‘மக்கள்தொகை கணக்கெடுப்பில் வழங்கப்பட்ட ரசீதின் அடிக்கட்டு, முகாமில் உள்ள அலுவலர்களிடம் இருக்கிறது. அவர்களிடம் சொன்னால் எடுத்துத் தருவார்கள். 2010 மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யாதவர்கள் அல்லது வெளியூரில் பதிவு செய்தவர்களும் கவலைப்படத் தேவையில்லை. முகாமிற்கு வெளியே மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவத்தோடு ஒரு அலுவலர் காத்திருப்பார். அவரிடம் புதிதாகப் பதிவு செய்து கொள்ளலாம். புதிதாகப் பதிவு செய்தவர்கள், முதல் சுற்று முகாமில் பங்கேற்க இயலாதவர்களுக்காக அதே பகுதியில் இரண்டாம் சுற்று முகாம் நடைபெறும். முகாம்கள் ஒரே நாளில் முடிந்துவிடாது. மக்கள் வரும்வரை நடக்கும். தவற விட்டவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களில் நிரந்தர ஆதார் தகவல் மையங்கள் தொடங்கப்படும். 5 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தகவல்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.’’

ஒருவர் இரண்டு முகாம்களிலும் பங்கேற்று தகவல்களை பதிவு செய்திருந்தால்?
‘‘கைவிரல் ரேகைகள், கண் கருவிழிப்படலம் போன்றவை ஒருவரைப் போல மற்றவருக்கு இருக்காது. சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ‘டி.டூப்ளிகேட்’ எனப்படும் நவீன நுட்பத்தின் மூலம் சரிபார்க்கப்படும். ஒரே மாதிரியான இரு தகவல்கள் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் அது காட்டிக் கொடுத்து விடும். ஒரு தகவல் தானாக அழிந்துவிடும்.’’

ஆகஸ்ட் இறுதிக்குள் ஆதார் எண் பெறாதவர்களுக்கு சமையல் எரிவாயு மானியம் வழங்கப்படாது என்கிறார்கள்... பல பகுதிகளில் இன்னும் தகவல்களே சேகரிக்கப்படவில்லையே?
‘‘தமிழகத்தில் இதுவரை 3.59 கோடிப் பேரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 2.20 கோடிப் பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. பணியை விரைவுபடுத்தியிருக்கிறோம். நிதானமாக செய்ய வேண்டிய பணி. ஒரு நாளைக்கு ஒரு முகாமில் 100 முதல் 120 பேரின் தகவல்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. மக்கள் ஒத்துழைப்பு அவசியம். தகவல் பெறப்பட்டவர்களுக்கு 30 நாட்களுக்குள் அஞ்சல் மூலமும், மொபைல் போன் மூலமும் ‘ஆதார் எண்’ அனுப்பப்பட்டு வருகிறது. செப்டம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் கிடைத்துவிடும். சமையல் எரிவாயு மானியம் தொடர்பாக என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் அரசு நிச்சயமாக மாற்று ஏற்பாடுகளைச் செய்யும். ஆதார் தொடர்பான சந்தேகங்களுக்கு 044-24912993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்!’’
- வெ.நீலகண்டன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்