இளவரசனின் மர்ம மரணத்துக்காக இங்கே போராட்டங்கள் நடக்கும் அதே நேரத்தில் அமெரிக்காவும் தகிக்கிறது. ‘கறுப்பினத்தவரான பராக் ஒபாமாவையே அதிபராகத் தேர்ந்தெடுத்தாலும், அமெரிக்காவில் நிறவெறி இன்னமும் குறையவில்லை’ என குற்றம் சாட்டி கறுப்பின மக்கள் வீதிக்கு வந்திருக்கிறார்கள். காரணம், ட்ரேவன் மார்ட்டின் என்ற 17 வயது கறுப்பினச் சிறுவனை சுட்டுக் கொன்ற வெள்ளை இனத்தவரான ஜார்ஜ் ஜிம்மர்மேன் என்பவருக்கு தண்டனை ஏதும் தராமல் விடுவிக்கப்பட்ட விவகாரம்!
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருக்கும் சாண்போர்டு பகுதியைச் சேர்ந்தவன் மார்ட்டின். தந்தையும் தாயும் விவாகரத்தில் பிரிந்துவிட, தாயோடு வாழ்கிறான். தந்தை இரண்டாவது மனைவியோடு வாழ்கிறார். அவர்களையும் அடிக்கடி சந்திக்க வருவான். இரண்டாவது மனைவியின் வீடு இருக்கும் குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர் ஜிம்மர்மேன். அந்தக் குடியிருப்பில் அடிக்கடி திருட்டு நடப்பதால், குடியிருப்பு பகுதியில் அவர்களே காவல் இருக்க கூட்டம் போட்டு முடிவு செய்கிறார்கள். அந்தக் காவல் பணிக்கான பொறுப்பை ஜிம்மர்மேன் ஏற்கிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதியின் மழை இரவில் மார்ட்டினை சுட்டுக் கொன்றார் ஜிம்மர்மேன்.
மார்ட்டின் திருட முயன்றவன் போலத் தெரிந்ததாகவும், அதனால் அவனைத் துரத்தியபோது இருவருக்கும் சண்டை ஏற்பட்டு ஜிம்மர்மேனை தாக்கியதாகவும், அதனால் தற்காப்புக்காக சுட்டதாகவும் அவர் சொன்னார். ஜிம்மர்மேன் உடலிலும் காயங்கள் இருந்தன.
இந்தக் கொலை சம்பவம், அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மார்ட்டின் ஏற்கனவே தவறான நடவடிக்கைகளுக்காக பள்ளியில் மூன்று முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், ஒருமுறை திருட்டு நகைகளோடு அவன் இருந்ததாகவும் ஆதாரங்களைத் திரட்டினர் ஜிம்மர்மேன் தரப்பினர். ஜிம்மர்மேன் முரட்டு ஆசாமி; ஏற்கனவே பல வழக்குகளில் சிக்கியவர்; மனைவியையே தாக்கியவர் என்பதற்கான ஆதாரங்கள் மார்ட்டின் தரப்புக்குக் கிடைத்தது.

இந்த சம்பவம் அமெரிக்க கறுப்பின மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மார்ட்டின் படுகொலைக்கு நியாயம் கேட்டு, பல நகரங்களில் போராட்டங்கள், பிரார்த்தனைகள் நடைபெற்றன. மார்ட்டின் புகைப்படத்தோடு டி-ஷர்ட்கள், கீ செயின்கள் என பிரசார இயக்கம் வலுத்தது. அதிபர் ஒபாமாவே, ‘‘மார்ட்டினைப் பார்க்கும்போது எனது குழந்தையைப் பார்ப்பது போல இருக்கிறது’’ என்று உணர்ச்சிவசப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. ‘ஜிம்மர்மேன் மீதான கொலைக்குற்றத்துக்கு வலுவான ஆதாரங்கள் இல்லை’ என அவரை விடுவித்து விட்டார்கள். ‘அமெரிக்காவின் ஒட்டுமொத்த அமைப்பே நிறவெறி கொண்டதாக இருக்கிறது’ என மனித உரிமை அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. ‘அடுத்து என் குழந்தையைக் கொல்வீர்களா?’ என பதாகைகளோடு கறுப்பின மக்கள் வீதிக்கு வந்திருக்கிறார்கள். பல இடங்களில் கலவரமும் நடப்பதுதான் அமெரிக்காவை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
- எஸ்.உமாபதி