கிழிந்த நோட்டு : கே.ஆனந்தன்





புதிய நூறு ரூபாய் நோட்டுதான்... ஆனால், பாக்கெட்டில் போடும்போதோ, எடுக்கும்போதோ எப்படியோ கிழிந்துவிட்டிருந்தது. ‘மாசக் கடைசி. செலவுக்கு நெருக்கடியாக இருக்கிறது. எப்படியாவது இதை மாற்றியாக வேண்டுமே...’ என்று சிந்தித்த எனக்கு சட்டென நினைவுக்கு வந்தது இட்லிக் கடை பாட்டிதான்.

பாட்டிக்கு சற்று மங்கலாகத்தான் கண் தெரியும். கொடுத்த பணத்தை அப்படியே வாங்கிப் போட்டுக்கொள்ளும். அவரை ஏமாற்றுவது ஈஸி.

கிழிந்த இடத்தை செலஃபன் டேப் போட்டு ஒட்டி எடுத்துக்கொண்டு, பாட்டியின் கடைக்குப் போனேன். நான்கு இட்லி, இரண்டு தோசை சாப்பிட்டேன். அந்த நூறு ரூபாய் நோட்டை எடுக்கப் போனபோது, இன்னொருவன் கொடுத்த ஐம்பது ரூபாய் நோட்டை என்னிடம் நீட்டினாள் பாட்டி.

‘‘தம்பி, இந்த நோட்டு நல்லா இருக்கான்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுப்பா... கண்ணு சரியா தெரியாததால, நிறைய பேர் கிழிஞ்ச நோட்டையும், செல்லாத பணத்தையும் கொடுத்து ஏமாத்திடறாங்க. வயித்துக்கு சாப்பிடுற விஷயத்துல ஏமாத்தறவங்க உருப்படுவாங்களா, சொல்லு? பார்க்கறதுக்கு நல்லவன் மாதிரி தெரியறே... அதான் உன்னை நம்பி பார்க்கச் சொல்றேன்!’’

எனக்கு செருப்பால் அடி வாங்கின மாதிரி இருந்தது.
‘‘நல்ல நோட்டுதான் பாட்டி...’’ என்றவன், நான் சாப்பிட்டதற்குப் பணம் கொடுத்துவிட்டு வந்தேன். வேறு நல்ல நோட்டை!