* ஏ.ஆர்.ரஹ்மான் வெளிநாடு சென்று திரும்பும்போதெல்லாம் புது மாடல் வீடியோ கேமராக்களாக வாங்கி வருகிறார். ரெக்கார்டிங் இல்லாத நாட்களில் கேமராவும் கையுமாக வெளியே கிளம்பி விடுகிறார்.
* நிச்சயம் டைரக்டர் சேரில் உட்காரப்போகிறார் கீர்த்தனா பார்த்திபன். மணிரத்னத்திடமும், விஷ்ணுவர்தனிடமும் போதிய பயிற்சி பெற்ற பிறகும், இன்னும் திருப்தி அடையாமல் இப்போது தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த பட யூனிட்டில் இருக்கிறார். பார்த்திபன் சார், உங்க பொண்ணு 16 அடி பாய்வார் போலிருக்கே!
* இந்த மாதத்தில் இன்னொரு குழந்தைக்குத் தந்தையாகிறார் விஜய் ஆண்டனி.
* கேரளாவிலிருந்து இறக்குமதியாகி சில தமிழ்ப் படங்களில் நடித்த கோபிகா, ஸ்ரீதேவிகா, நவ்யா நாயர் மூவரும் சீக்கிரமே திருமணம் செய்து கொண்டனர். மூவருக்குமே மீண்டும் சினிமா ஆசை தலைதூக்க, இயக்கம், நடிப்பு, சீரியல் என்று ஆளுக்கொரு ஆர்வத்தோடு வாய்ப்பு தேடுகிறார்கள்.
* ‘தளபதி’ படத்தை ரீமேக் செய்யலாமா என சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். பொட்லூரி நிறுவனம் அதைத் தயாரிக்கிறது. ரஜினி - மம்முட்டிக்கு பதிலாக அஜித் - விஜய் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்குமா என திரை உலகிலேயே கருத்துக் கணிப்பு நடக்கிறது. உங்க சாய்ஸ் யாரு?
* அஜித் - விஜய், விக்ரம் - சூர்யா, சிம்பு - தனுஷ் பாணியில் இப்போது விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் என ஒப்பிடத் தொடங்கிவிட்டார்கள்.
* இப்போதும் காதல் கவிதை எழுதும் வைரமுத்துவிற்கு சஷ்டியப்த பூர்த்தி. சப்தமே இல்லாமல் இன்னுமொரு பிறந்தநாளாக அதை கம்பீரமாகக் கொண்டாடுகிறார் கவிஞர்.
* ப்ளஸ்ஸி இயக்கிய ‘களிமண்’ படத்துக்காக நிஜமாகவே கர்ப்பம் தரித்து நடித்திருந்தார் ஸ்வேதா மேனன். படத்தில் இடம்பெறும் ‘லாலி... லாலி...’ என்ற பாடல் சமீபத்தில் யூ டியூப்பில் வெளியிடப்பட்டு 5 லட்சத்துக்கும் மேல் ஹிட் அடித்துள்ளது.
* வித்யா பாலன் நடித்த ‘கஹானி’ இந்திப் படம் தெலுங்கிலும் தமிழிலும் ‘அனாமிகா’ ஆகிறது. வித்யா இடத்தை நிரப்பியிருப்பவர் நயன்தாரா. இந்தியில் வித்யா தனது கணவரை கொல்கத்தாவில் தேடுவார். நயன்தாரா இங்கே ஐதராபாத்தில் தேடுகிறார்.
தமிர்ச்சி சிவா ஒரு கோடியைத் தாண்டிவிடத் துடிக்கிறார். ‘சொன்னா புரியாது’ என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்து அது தெரியும்.
* மலையாளத்தில் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிற செய்தி, சோலார் சக்தி ஊழல் மட்டுமல்ல... ‘சாய்பாபா’ படத்திற்கு எந்த நடிகர் பொருந்துவார் என்பதும்தான். கிராபிக்ஸில் அலசி ஆராய்ந்தால் மலையாள நடிகர் திலீப்தான் படுபொருத்தமாம். கேள்விப்பட்டவர் இப்பொழுதே விரதத்தை ஆரம்பித்து விட்டார்.
* ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் தம்பதி சமேதராக நடித்த ‘லக்ஸ்’ சோப்பு விளம்பரம் படு பாப்புலர். இப்போது அவர்களை மாற்றி புத்தம் புது ஜோடியை அறிமுகம் செய்திருக்கிறது லக்ஸ். விரைவில் வர இருக்கும் விளம்பரத்தில் நடித்திருக்கும் அந்த ஜோடி, தனுஷ் - சோனம் கபூர்.

* கே.வி.ஆனந்த் படத்துக்கு 150 நாள் கால்ஷீட் கொடுத்திருந்திருக்கிறார் தனுஷ். பக்காவாக கதை ரெடி பண்ணி விட்டார் ஆனந்த். கதாநாயகி கிடைத்துவிட்டால் உடனே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ரெடியாம்.
* ‘ராஜா ராணி’யில் ஆர்யா - நயன்தாரா கெமிஸ்ட்ரிதான் டாக் ஆஃப் கோடம்பாக்கம். கமல் - ஸ்ரீதேவி, ரஜினி - ஸ்ரீப்ரியா மாதிரி நெருக்கமும், துடிப்புமாக அள்ளுமாம். ‘‘ஆர்யா கிட்டேதான் ஈஸியா நடிக்க முடிஞ்சது’’ என்கிறார் நயன்தாரா.
* சத்தம் போடாமல் லண்டன் போயிருக்கிறார் சிம்பு. ‘செக்’ வாங்கினாலே ‘செக்’ வைத்து விளையாடும் சிம்பு, ‘செக்கே’ வாங்காமல் நடிக்கிற ‘இங்க என்ன சொல்லுது’ படத்திற்குத்தான் போயிருக்கிறார். வந்ததும் நல்ல பிள்ளையாக பாண்டிராஜ் படு சீக்கிரத்தில் எடுக்கும் படத்தில் நடிக்கப் போகிறார்.
* இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், தான் பணியாற்றிய படங்களின் வொர்க்கிங் ஸ்டில்களை சேகரித்து பர்சனல் கம்ப்யூட்டரில் பத்திரமாக வைத்திருக்கிறார்.
* எப்பவும் பாலாஜி சக்திவேல், லிங்குசாமியின் குளோஸ் ஃபிரண்ட். ‘எப்படி வேண்டுமானாலும் எடு, எப்ப வேண்டுமானாலும் முடி’ என சொல்லி விடுவதால் லிங்கு - பாலாஜி கூட்டணி இறுக்கமாக இருக்கிறது. இப்போது முதல் தடவையாக டைரக்டர் கௌதம் மேனனின் தயாரிப்பில் படம் எடுக்கப்போகிறார் பாலாஜி சக்திவேல்.
* எங்கு சென்றாலும் அம்மா துணை கேட்கும் நடிகைகளுக்கு மத்தியில் டாப்ஸி தைரியசாலியாக இருக்கிறார். ஜோல்னா பையைத் தோளில் மாட்டியபடி துணிச்சலாக தனியே சுற்றுகிறார்.
* ‘‘சிறந்த நடனத் திறமை கொண்ட நடிகர்களாக யாரைச் சொல்வீர்கள்’’ என்ற கேள்விக்கு பிரபுதேவா அளித்த பதில் பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. தமிழில் தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி மூவரைத்தான் சொல்லியிருக்கிறார். ‘தலைவா... நீங்க லிஸ்ட்ல இல்லையா?’
* ‘‘குருவாயூர் கோயிலில் திருமணம் செய்துகொள்ள ஆசை’’ என வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் பாவனா. மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளையை அவர் காதலிப்பதாக வெளியான செய்திகளும், பாவனாவின் இந்த ஆசையும், அடுத்த ஆண்டே அவரது கல்யாணம் இருக்கும் என்பதை உறுதி செய்கின்றன. இப்போது கன்னடத்தில் பிஸியாக இருக்கும் பாவனா, புதிய படங்களைத் தவிர்ப்பதாக செய்தி!
சைலன்ஸ்பெரிய படமாக தனது ‘உலக’ படத்தை எடுத்திருக்கிற நடிகரின் அண்ணன், உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். இப்போதுதான் சகஜ நிலைமைக்கு வந்து படத்தை மறுபடி கையில் எடுக்கிறார். ‘படத்துக்கு அக்கறைப்படும் நல்ல இயக்குநர், உடல்நலத்தையும் கவனிக்கவேண்டும் இல்லையா’ என கவலைப்படுகிறார்கள் நண்பர்கள்.
பளிச்சென்று முன்னுக்கு வந்துவிட்ட மூன்று ஹீரோக்களிடம் கதை சொல்லப் போகிறவர்கள், அடுத்த இரண்டு ஹீரோக்களைப் பற்றி மட்டம் தட்டிப் பேசுகிறார்கள். அதனால் தொகையும் குறைகிறதாம். கால்ஷீட்டும் கிடைக்கிறதாம்.
அங்காடி நடிகைக்கு எதிராகப் போட்ட கேஸ் கடுமையாக இருப்பதால், நடிகை இறங்கி வந்து தலைவிரி கோல டைரக்டரிடம் மன்னிப்பு கேட்கப் போகிறாராம்.‘கேட்டாலும் வழக்கு வாபஸ் இல்லை’ என கர்ஜிக்கிறார் டைரக்டர்.