குட்டிச் சுவர் சிந்தனைகள்





அந்தக் காலத்துல ஹீரோ ஆகணும்னா நல்லா பாட்டுப் பாடத் தெரியணும், நல்லா கத்திச் சண்டை, வாள் சண்டை போடத் தெரியணும், குதிரையேற்றம் தெரியணும், தேங்கா எண்ணெய் விட்டு கூந்தலை பராமரிக்கத் தெரியணும், நிறைய டயலாக் பேசத் தெரியணும், கொஞ்சம் கொடுத்த காசுக்கு மேல நடிக்கவும் தெரியணும்.

இந்தக் காலத்துல ஹீரோ ஆகணும்னா நல்லா டான்ஸ் ஆடத் தெரியணும், பைக், கார் ஓட்டத் தெரியணும், சினிமால பெரிய ஆளுங்க நாலு பேரத் தெரியணும், இல்ல அப்பா, மாமா, தாத்தானு சினிமாவுல ஊறுன குடும்பமா இருக்கணும்.

ஆனா, இதெல்லாம் தெரியாமலேயே ஒருத்தரால ஹீரோவாக முடியும். ஆமாங்க, வெறும் கொறட்டையும் குட்டிக்கரணமும் போடத்தெரிஞ்சா கூட, கொஞ்சம் சிரிக்க வச்சா போதும்... நம்ம குழந்தைங்களுக்கு நாமதான் ஹீரோ!

ஆறு வருஷ கேப்டன்சியில இதுவரை 18 கோப்பைகள், டெஸ்ட் மேட்ச்கள்ல 50 சதவீதத்துக்கும் மேல் வெற்றிகள், ஒரு நாள் போட்டிகள்ல 60 சதவீதத்துக்கும் மேல் வெற்றிகள்னு பட்டையக் கிளப்பிக்கிட்டு இருக்காரு டோனி. வைகைப் புயல் வடிவேலு டுமீல் கோப்பைகள் வாங்கும் காசியப்பன் பாத்திரக் கடையில இருக்கறத விட அதிகமான கோப்பைகள் டோனி வசம் இருக்கு. வெஸ்ட் இண்டீஸ் முத்தரப்பு ஒரு நாள் போட்டி இறுதி மேட்ச் கடைசி ஓவர்ல சிக்சர்கள் பறக்க விட்டு இந்தியாவ ஜெயிக்க வச்சத பாத்தவங்களுக்குத்தான் தெரியும்... அது ‘சிங்கம் 3’ யோட டிரெய்லருனு. ஆளாளுக்கு மோடி பிரதமர் வேட்பாளர், ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளருன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. பேசாம டோனிய பிரதமர் வேட்பாளரா இறக்கி விட்டுடலாம்... என்ன நான் சொல்றது?

இயேசு பிரான் தன் கனவில் வந்து, ‘‘உத்தரகாண்டில் பெரு வெள்ளம் வரப் போகுது. அதைப்பற்றி அரசாங்கத்துக்கு தெரிவிக்கக் கூடாது’’ன்னு சொன்னார் என்று நம்ம உமாசங்கர் ஐ.ஏ.எஸ் போன வாரம் சொல்லி இருக்காரு.



ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுங்கனு சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் சொல்லித் தந்த புனிதர் இயேசுவை மீண்டும் சிலுவையில் அறைந்தது போல இருக்கிறது இவரின் பிதற்றல். யாருடைய நம்பிக்கையையும் கிண்டல் செய்வது நம் நோக்கமல்ல, ஆனால் தவறான மூட நம்பிக்கைகள் மூலம் மக்களை முட்டாளாக்க நினைத்தால், கடமை தவறாத போலீஸ் டிபார்ட்மென்ட் போல செயல்படும் இந்த குட்டிச்சுவர் சும்மா இருக்காது. ஏன்னா, மக்களை முட்டாளாக்குவது அரசாங்கத்தின் செயல் மட்டுமே, அதை தனி நபர் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது.

(சரி, நாம விஷயத்துக்கு வருவோம்... ஆதீனம் கனவுல சிவபெருமான் வர்றாரு, உமாசங்கர் ஐ.ஏ.எஸ் கனவுல இயேசுநாதர் வர்றாரு, ஆனா, பாழாப்போன நம்ம கனவுல நமீதாவும் நயன்தாராவும்தான் வர்றாங்க!)

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்...
பல கோடி கொடுத்தாலும் ஒரு லேடி நம்ம பேச்சை கேட்க மாட்டேங்குது. இதுல நரேந்திர மோடி பேச்சைக் கேட்க, அஞ்சு ரூபா வாங்கணும்னு ஐடியா தந்த அந்த பா.ஜ.க குரூப்பு!

உலகத்துல என்னென்னமோ கண்டுபிடிக்கிறாங்க... ஆனா இந்த அடுப்புல பால் பொங்குறப்போ, மொட்டை மாடி தண்ணி டேங்க் வழிஞ்சு போறப்போ, கல்லுல தோசை கருகறப்போ, சாம்பாரோ ரசமோ டீயோ காபியோ கொதிக்கிறப்போ, பாத்ரூம்ல பக்கெட் தண்ணி நிரம்பறப்போ, குழந்தைங்க விளையாடும்போது தவறி கீழ விழறப்போ, மனைவி நொய்நொய்னு பேசறப்போ, மப்புல நண்பன் மொக்கை போடுறப்போ, அடிமை சிக்கிட்டான்னு மப்பே இல்லாம ஒருத்தன் மொக்கை போடுறப்போ, ரோட்டுல ஏதாவது ஆக்சிடென்ட் ஆகறப்போ... அப்படியே அந்த நொடியில நிறுத்த ஒரு ரிமோட் கண்டுபிடிங்கப்பா! புண்ணியமா போகும்...

நானும் என் சின்ன வயசுல இருந்து யோசிச்சுப் பாக்குறேன்... இந்த நெய்வேலி என்.எல்.சி தொழிலாளர்கள்தான் என் வாழ்க்கை வரலாற்றுலயே அதிகம் வேலைநிறுத்தம் செஞ்சவங்களா தெரியறாங்க. வருஷத்துக்கு தமிழக அரசு அறிவித்திருக்கும் மொத்த விடுமுறை நாட்களின் அளவு கூட இவங்க வேலை செய்யறாங்களான்னு சந்தேகமா இருக்கு. அட அட்லீஸ்ட் ஒரு ‘நாராயணசாமி’ கால அளவாவது வேலை செய்யறங்களான்னும் தெரியலை. வேலைநிறுத்தமும் போராட்டமும் தொழிலாளர்கள் உரிமை. ஆனா அது தமிழகம் முழுக்க உள்ள மற்ற தொழிலாளர்களையும் தொழில்களையும் பாதிக்கக் கூடாத வகையில் இருக்கணும்ல. மின்சாரத்த நம்பித்தானே எல்லா தொழிலும் இருக்கு. அந்த பொறுப்புணர்வோடு மாற்று வழிகளில் போராடினா, தமிழகம் முழுக்க இருந்தும் அவங்களுக்கு ஆதரவு குவியும்ல?
(பின்குறிப்பு: ஒரு ‘நாராயணசாமி கால அளவு’ என்பது, 15 நாள்)

போன வாரம் கோவை மாவட்டத்துல ஒரு தியேட்டர்ல ‘சிங்கம் 2’ போஸ்டரை வெளியே ஒட்டி வச்சுட்டு, ‘சிங்கம் 1’ படத்தைப் போட்டு ரசிகர்களை ஏமாத்திட்டாங்களாம். ஆறே மாசத்துல மின்வெட்டை ஒழிப்பது, 3 ஃபேஸ் கரன்ட் தடையில்லாமல் வழங்குவது, கரும்பு உற்பத்தியை 1000 லட்சம் டன்னிற்கு உயர்த்துவது, பால் உற்பத்திய 10 மில்லியன் லிட்டராக அதிகரிப்பதுன்னு சொல்லிட்டு சில பல கட்சிகள் ஆட்சிக்கு வர்றாங்க. ஆனா அதையெல்லாமா செஞ்சிடுறாங்க? அட போங்கப்பா!