இது ஓகே ஓகே பார்ட் 2 அல்ல!




‘‘ ‘சுந்தரபாண்டிய’னுக்குப் பிறகு இந்தப் படம் எனக்கு ராயல் சல்யூட். எல்லா கதையையும் சொல்லியாச்சோன்னு எப்பவும் சந்தேகம் வந்துட்டே இருக்கும். காதலை எத்தனையோ விதமா சொல்லிட்டாங்க. சிலர் அதில் எக்ஸ்பர்ட்னு கூட சொல்லிக்கிறாங்க. நான் அப்படிப்பட்டவங்க யார் பாதையிலும் போகலை. ஆதாம் - ஏவாள் வந்த காலத்திலிருந்து, ‘அன்பு செய்து பல்கிப் பெருகுங்கள்’ என்பதுதான் அவர்களுக்கு இடப்பட்ட கட்டளையாக இருந்தது. இப்போ பாருங்க... எப்படி இருக்கான், எவ்வளவு சம்பாதிக்கறான்னு பயோடேட்டா பார்த்துத்தான் காதல் வருது. ஆனா, என் ‘கதிர்வேல’னுக்கு அதெல்லாம் கிடையாது. வாழ்க்கையை சடசடன்னு அதன் போக்கில் வாழ்ந்திட்டுப் போற ஆளு. யதார்த்தமான காதல் என்னிக்கும் இனிக்கும்!’’

- புன்னகையோடு பேசும் டைரக்டர் எஸ்.ஆர்.பிரபாகரன், இப்போது தான் அத்தை மகள் திவ்யாவோடு மணம் முடித்து வந்திருக்கிறார். மாப்பிள்ளைக் களையும், முகப்பில் மாவிலை தோரணமும் அப்படியே இருக்கிறது.



‘‘ ‘சுந்தரபாண்டியன்’ அதிரிபுதிரி வெற்றி. இனி ‘கதிர்வேலன் காதலை’ எப்படி எதிர்பார்க்க...?’’
‘‘நான் ஒரு படம் மாதிரி இன்னொண்ணு இருக்கக் கூடாதுன்னு நினைப்பேன். ‘சுந்தரபாண்டியனை’ பார்த்திட்டு, ‘எங்க ரெட் ஜெயண்ட்க்கு ஒரு கதை சொல்லுங்களே’னு உதயநிதி சார் கூப்பிட்டார். நான் சொல்ல வேண்டிய கதையை நினைச்சுப் பார்த்தால், அவரே செய்யலாம்னு தோணுச்சு. எனக்குப் பட்டதே அவருக்கும் பட, வேலை ஆரம்பிச்சாச்சு. அதற்கு முன்னால்தான், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ வெளிவந்து காமெடியில் ரகளை பண்ணியிருந்தது. உதய் சாரை முழுமையா ஜனங்க ஏத்துக்கிட்ட நேரம். எனக்கு பொறுப்பு அதிகமாகிவிட்டது. இதற்கு சற்றும் குறையாமல் என் படம் இருக்கணும். அவரை அடுத்த ஸ்டெப்புக்கு நகர்த்தி என்னையும் புதுப்பிக்கணும். லவ், ஃபிரண்ட்ஷிப், காமெடி, கொஞ்சமா சென்டிமென்ட் இந்தக் கலவை ரொம்ப நல்லாயிருக்கும். மிகுந்து போகாமல் சரியாக செய்தாலே போதும். அப்படித்தான் நெகட்டிவ்வான எந்த விஷயங்களும் இல்லாம கதையை செலுத்தியிருக்கேன். கலகலன்னு வந்து பார்த்திட்டு, மளமளன்னு அடுத்த வேலையை நீங்க சுறுசுறுப்பா பார்க்கலாம். எல்லோரும் விரும்பி வந்து பார்க்கிற நல்ல படங்களை ஜனங்க என்றைக்குமே ஒதுக்கியதில்லை. ஒரு டைரக்டர் மக்களை விட்டு என்னிக்கும் விலகிடக் கூடாது. நான் அப்படித் தான் இருக்கேன். ஜனங்களோட சுக துக்கங்கள், பிரியங்கள், போட்டிகள், பொறாமைகள், காதல், பரிவு, அத்தனையும் ஊர்நாட்டுல பார்த்து நான் அறிந்ததுதான். ‘கதிர்வேலன் காதல்’ யதார்த்தமா இருக்கும்.’’
‘‘அப்போ, ‘ஓகே... ஓகே’ மாதிரி இருக்குமா?’’



‘‘அதுக்காக, ‘ஓகே... ஓகே பார்ட் 2’ கிடையாது. ‘இது கதிர்வேலன் காதல்’தான். நான் உதய் சாரை மாத்த மெனக்கெடவே இல்லை. அவர், அவராகவே இருந்தால் இன்னும் சௌகர்யம். என்னை முதலில் இழுத்துப்போட்டது அவரோட தோற்றம். வயசின் வேகமும் மனதின் தாகமும் சொல்லும் முகம். ‘நம்மளை மாதிரிதானே’ன்னு யாரும் அடையாளம் கண்டு வச்சிக்கலாம். ரெண்டாவது படத்திலேயே கை தேர்ந்த, இயல்பான நடிகனாக மாறி, முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்ததில்லைன்னு மறுபடியும் நிரூபிக்கப் போகிறார். கொஞ்சம் தலை தூக்கி நடக்கறது... இறுக்கமா இருக்கறதுன்னு மேல்தட்டு அடையாளங்கள் துளி கூட அவர்கிட்ட இல்லை. ஒரு நடிகர் டைரக்டர்கிட்டே தன்னை ஒப்படைக்கணும். அதில் தயக்கமே இல்லாமல் இருக்கணும். இவர் அப்படியே தன்னை கொடுத்திட்டு நிற்கிறார். ஈஸியா பண்றார். மெருகேத்திட்டே இருக்கிறார். ‘உங்களுக்குப் பிடிச்ச டேக்கை வச்சுக்கலாம்’னு சொல்றார். நான் ஏதோ அவரோடு படம் செய்கிறதால் ஒரு குழைவு மனப்பான்மையில் சொல்லலை. மனசிலிருந்து சொல்றேன்!’’

‘‘நயன்தாராவை கொண்டு வந்து சேர்த்துட்டிங்களே...’’
‘‘எனக்கு அவங்க எப்பவும் ஆச்சர்யம். நமக்கு ஒரு சங்கடம் வந்தாலும், முகத்திலே பளிச்னு தெரியும். ‘என்னடா ஆச்சு’ன்னு கேட்கிற மாதிரி முகம் காட்டிக்கொடுக்கும். ஆனா, நயன்தாராவுக்கு எதுவும் தெரியாது. கொஞ்ச காலத்திற்கு முன்னாடி அவரது சொந்த வாழ்க்கையில் சில பிரச்னைகள். ஆனா, ஷூட்டிங்னு வந்திட்டால் ஒண்ணுமே தெரியாது. ஒரு வருஷத்திற்கும் மேல அவங்க திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தாங்க. பெரும்பாலும் ஒதுங்கினவங்களை சினிமா மறந்திடும். ஆனா, ஆச்சர்யமா அவங்க மார்க்கெட் அப்படியே இருக்கு. அவங்களைப் பத்தி செய்தி கூட குறையவேயில்லை. எல்லாருக்கும் அந்த முகம் பிடிக்கும். ‘பில்லா’விலும் ரசிப்பாங்க... ‘ஸ்ரீராம ராஜ்ஜிய’த்தில் சாட்சாத் சீதையாவும் ஏத்துக்கறாங்க. இதுல, பச்சைப்புள்ள மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு பவித்ராங்கிற கேரக்டருக்கு வழிவிட்டாங்க. அவங்களை மாதிரி பெயின்ஃபுல் ஏரியாவை கடந்து வந்தால், நாமெல்லாம் தொலைஞ்சு போயிடுவோம். ஆனால் அவங்க... இன்னும் க்ரேஸ் ஆர்ட்டிஸ்ட்தான். உதய்க்கும் அவருக்கும் பொருத்தம் அவ்வளவு கச்சிதம். இரண்டு படம் பண்ணினவருக்கும், இத்தனை படம் பண்ணினவருக்கும் ஒரு வித்தியாசமும் தெரியாது. உதய் சார் - சந்தானம் காம்பினேஷன் ஏற்கனவே செம ஹிட். இதில் இன்னும் வேற தினுசு.’’



‘‘பாடல்கள் எப்படியிருக்கும்...?’’
‘‘இந்த மாதிரி கதைக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இருந்தால் நல்லாயிருக்கும். இளமை துள்ளும். ஆனால் அவரோ தேர்ந்தெடுத்து, அவசரப்படாமல் படங்கள் பண்றவர். இசையை தானே ஒரு ரசிகனா, ரொம்ப உணர்வுபூர்வமா செய்யணும்னு ஆசைப்படுவார். அற்புதமான பாடல்களை அவர் அதிகம் கொடுக்க அதுதான் காரணம். ஒளிப்பதிவாளர் பாலகப்பிரமணியெம், என் மனசு நினைக்கிறதை கண்ணில் கொண்டு வந்து காட்டுவார். கல்யாணத்திற்கு வந்த சசிகுமார் சார் கூட காதுக்குள்ளே, ‘கல்யாணமும் முக்கியம், இந்த கதிர்வேலன் காதலும் முக்கியம்டா தம்பி ’ன்னு சொன் னார். கல்யாண பரபரப்புல சிரிச்சு வச்சேன். நிச்சயமா உங்களுக்கு நல்ல படம் தருவேன்னு சசி சாருக்கு இப்ப சொல்லிக்கிறேன்.’’