ஹாலிவுட் படம் என்பது தமிழ் சினிமா கலைஞர்களுக்கு எப்போதுமே பெரும் கனவு. ஆனால், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த சுவாமிகந்தன், அமெரிக்காவில் இருந்தபடி சர்வ சாதாரணமாக ஹாலிவுட் படங்களை இயக்கிக் கொண்டிருப்பது தமிழர்களுக்குப் பெருமை!
ஏற்கனவே ‘கேட்ச் யுவர் மைண்ட்’ என்ற ஹாலிவுட் படத்தை இயக்கியிருக்கும் சுவாமிகந்தன், அடுத்ததாக ‘தி சீக்ரெட் வில்லேஜ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தின் வியாபார நிமித்தம் இந்தியா வந்திருந்தவரை சந்தித்துப் பேசினோம். ஹாலிவுட் இயக்குநர் என்ற பந்தாக்கள் எட்டிப் பார்க்காமல் எளிமை எதிரொலிக்கிறது அவரது பேச்சில்...
‘‘திருச்சி, தேசியக் கல்லூரியில்தான் படித்தேன். இருபது வருடங்களுக்கு முன் எம்.பி.ஏ படிப்பதற்காக அமெரிக்கா சென்ற நான், இப்போது ஹாலிவுட் படங்களை இயக்கிக்கொண்டிருக்கிறேன். சின்ன வயசிலிருந்தே சினிமா மீதிருந்த காதல்தான் என்னை இந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. இந்தியப் படங்களுக்கும் ஹாலிவுட் படங்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு என்பதால், அமெரிக்காவில் இருக்கும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து படித்தேன். பல வருடங்கள் சினிமா தொழில்நுட்பம் கற்றபிறகுதான் களத்தில் இறங்கினேன்.
2008ல் ‘கேட்ச் யுவர் மைண்ட்’ என்ற என் முதல் படத்தை இயக்கினேன். ஒரு தாய்க்கும் மகனுக்குமான மனப்போராட்டத்தை அலசும் ஃபேமிலி டிராமாவாக அது அமைந்தது.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நம்மூர் சேலம் பெயரிலேயே ஒரு ஊர் இருக்கிறது. 1890களில் இந்த கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் மர்மமான முறையில் இறந்துபோய் இருக்கிறார்கள். இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் ‘தி சீக்ரெட் வில்லேஜ்’ கதை. ‘மெமோரியல் டே’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்ற ஜோனதன் பெர்னட், 200 ஹாலிவுட் படங்களுக்கு மேல் நடித்திருக்கும் ரிச்சர்டு ரெய்லி, ‘பியூட்டிஃபுல் மைண்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ஸ்டெலியோ சவன்டே, நடிகை ஆலி ஃபால்க்னர் ஆகியோர்தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்.
ஆப்ரிக்க அடிமை ஒருவன் வைத்த சூனியம்தான் துர் சம்பவங்களுக்குக் காரணம் என்று நினைக்கும் கிராம மக்கள், அவனைத் தூக்கிலிட்டுக் கொல்கிறார்கள். ஆனால், அவன் இறந்த பிறகு அடுத்த அக்டோபர் மாதத்திலும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சாகிறார்கள். இதன் பின்னணியை கண்டுபிடிப்பதற்காக நியூயார்க்கிலிருந்து வரும் ரிப்போர்ட்டராக ஆலி நடித்திருக்கிறார். கதை எழுத ஊருக்குள் நுழையும் கதாசிரியராக ஜோனதன் வருகிறார். கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி படத்தை உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டிருக்கிறேன்.’’
‘‘தமிழ்ப் படங்கள் பார்க்கிறீர்களா?’’
‘‘அதெப்படி பார்க்காமல்..? இந்திப் படங்கள் மட்டுமல்லாமல், இப்போது தமிழ்ப் படங்களும் ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, தமிழ்ப் படங்கள் தொழில்நுட்பத்தில் அபார வளர்ச்சியடைந்து வருகின்றன. கதை சொல்லும் விதத்திலும் இளைய இயக்குனர்கள் புதுமையாக யோசிக்கிறார்கள். ஹாலிவுட் படம் பண்ணினாலும் தமிழ்ப் படங்களின் வளர்ச்சியை நினைத்து தமிழனாகப் பெருமைப்படுகிறேன். இந்தப் பெருமையுடன் நின்றுவிடாமல், ‘கேட்ச் யுவர் மைன்ட்’ படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ரீமேக் செய்யும் திட்டமும் இருக்கிறது. விரைவில் அது நடக்கும்.’’
‘‘உங்களுக்கு ஆஸ்கர் விருது ஆசை இருக்கா, அந்த விருதில் அரசியல் இருப்பதாகச் சொல்கிறார்களே?’’
‘‘நான் ஆஸ்கர் விருதையும் தாண்டி, கமர்ஷியல் இயக்குனராக ஜெயிக்கவே விரும்புகிறேன். ஹாலிவுட் என்று இல்லை... எந்த மொழியில் படம் எடுத்தாலும் ரசிகர்களை சீட்டில் கட்டிப் போட வைக்கும் திரைக்கதை உத்தி தெரிந்தவர்களே உண்மையான வெற்றியை சுவைக்க முடியும். அந்த வகையில் எந்த வகை கதையாக இருந்தாலும் அதை சொல்லும் விதத்தில் வித்தியாசப்பட்டு ரசிகர்களின் பாராட்டைப் பெற விரும்புகிறேன். அதுவே உண்மையான விருது. ஆஸ்கர் என்பது அகடமி விருதுதான். இதில் அரசியலோ, பாரபட்சமோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை’’
‘‘அடுத்த படம்..?’’
‘‘ஆக்ஷன் த்ரில்லர். கெவின் பெகான், மற்றும் ‘பியானோ’ படத்தில் நடித்து ஆஸ்கர் விருது பெற்ற ஹோலி ஹன்டர் ஹீரோவாக நடிக்கிறார்கள். அதற்கான ஆரம்ப கட்டப் பணிகளும் நடந்துகொண்டிருக்கின்றன!’’
- அமலன்