‘‘ஓகே கேர்ள்ஸ்... ரெடி... ஸ்டார்ட் மியூசிக்க்க்க்...’’ - ப்ரீத்தாவின் குரல் கேட்டதும் இசை வழிய, வட்டம் கட்டி வளைந்து நெளிந்து நடனமாடத் தொடங்குகிறார்கள் பெண்கள். இசைக்கேற்ப, உடலசைவுகளை ஒவ்வொரு விதமாக மாற்றும் அந்த நளினமான ஆட்டத்தில்தான் எத்தனை சந்தோஷம்! துள்ளல், கைதட்டல், சிரிப்பொலி என அந்த ஹாலே உற்சாகத்தில் பொங்கி வழிகிறது. ‘‘என்ன பாஸ்... ‘டான்ஸ் மூவ்மென்ட் தெரபி’ எப்படி இருக்கு?’’ என ஆட்டத்தைத் தொடர்ந்தபடியே நம்மிடம் கேட்கிறார் ப்ரீத்தா. அதென்ன ‘டான்ஸ் மூவ்மென்ட் தெரபி’? நடனம் மூலம் மன அழுத்தங்களைக் குறைத்து உடலை சுறுசுறுப்பாக்கும் புதிய சிகிச்சை முறையாம் இது!
சென்னை பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரி, ஈஸ்ட் வெஸ்ட் சென்டர் ஃபார் கவுன்சிலிங் அண்ட் டிரெய்னிங் என்கிற அமைப்புடன் இணைந்து ‘எக்ஸ்பிரசிவ் ஆர்ட் தெரபி’ என்கிற புதிய டிப்ளமோ படிப்பைத் துவங்கியுள்ளது. அதில் ஒரு பகுதிதான் இந்த ‘டான்ஸ் தெரபி’.
‘‘நடனம் மூலம் சிகிச்சை என்பதை கல்லூரிப் படிப்பாகக் கற்றுத் தருவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை’’ என்கிறார் ஈஸ்ட் வெஸ்ட் சென்டர் ஃபார் கவுன்சிலிங் அண்ட் டிரெய்னிங் அமைப்பின் இயக்குநர் மேக்டலின் ஜெயரத்னம்.
‘‘வெளிநாடுகளில் அதிகம் இந்த ஆர்ட் தெரபி இருக்கிறது. ஆரம்பத்தில் நான் அங்குள்ள பயிற்சியாளர்களை இங்கே வரவழைத்து இதைக் கற்றுக்கொண்டேன். இதில் ஒவ்வொரு நடன அசைவும் ஒவ்வொரு விதமான அழுத்தத்தை வெளிக்கொண்டு வரும். அப்புறம் மன அழுத்தங்கள் முற்றிலும் குறைந்துவிடும். நமது விழிப்புணர்வு அதிகரிக்கும். மூளையின் செயல்திறனும் அதிகரிப்பதால் வேலைகளில் கவனம், சுறுசுறுப்பு ஏற்படும். நம்மை நாமே புரிந்து கொள்ள முடியும்’’ என்கிற மேக்டலின், பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியோடு இணைந்து இந்த கோர்ஸை இரண்டாவது ஆண்டாக நடத்தி வருகிறார். ‘இந்தப் படிப்பில் சேர விரும்புகிறவர்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்’ என்ற விநோத கண்டிஷனையும் அவர் வைக்கிறார்.
‘‘இந்தப் படிப்பில் டான்ஸ் மட்டுமல்ல... சைக்கோ டிராமா, மியூசிக் தெரபி, கதை சொல்லுதல், ஆர்ட் தெரபி என இன்னும் நான்கு பிரிவுகள் வைத்திருக்கிறோம். ஒவ்வொன்றையும் பத்து நாட்கள் கற்றுத் தருவோம். அடுத்து இரண்டு மாதங்கள் அசைன்மென்ட் தொடங்கும். அதாவது, தாங்கள் கற்றுக்கொண்ட மனவியல் பயிற்சிகளை பணியாற்றும் இடங்களில் அவர்கள் பயன்படுத்திப் பார்த்து, அதனை அறிக்கையாகத் தர வேண்டும். அதனால்தான் வேலை பார்ப்பவர்களுக்கு முன்னுரிமை தருகிறோம். மொத்தம் 12 சீட்கள்தான். இந்த கோர்ஸில் சேர சைக்காலஜி, சோஷியாலஜி படித்தவர்கள், மனிதவள நிபுணர்கள், தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் தகுதியானவர்கள்’’ என்கிறார் மேக்டலின்.

‘‘டான்ஸ் தெரபி என்பது டான்ஸ் சொல்லித் தருவது மட்டும் கிடையாது. இதில் உள்ள மூவ்மென்ட்கள் மனதிலும் உடலிலும் உள்ள அழுத்தங்கள் அனைத்தையும் வெளியேற்றிவிடும். உதாரணமாக, சிலருக்கு எல்லாவற்றிலும் பயம் இருக்கும். அதற்கு சிறு வயதில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இருக்கலாம். நாம் இந்த டான்ஸ் மூலம் அந்தப் பதிவுகளை கண்டறிந்து சரி செய்ய முடியும்’’ என நம்பிக்கையுடன் பேசுகிறார் நடன தெரபி பயிற்சியாளரான ப்ரீத்தா. இவர் லண்டனில் நடன தெரபி கோர்ஸ் முடித்து, சென்னையில் ‘கைனஸ்தடிக்ஸ்’ என்கிற அமைப்பை நடத்தி வருபவர்.
ஸ்டெப்ஸ் போட்டுக் கொண்டிருந்த மாணவிகளில் அயர்லாந்தைச் சேர்ந்த கேத்தரின் மட்டும் தனித்துத் தெரிகிறார். டார்ஜிலிங்கில் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் இவர், இந்த நடன கோர்ஸுக்காகவே இங்கு வந்து தங்கியிருக்கிறாராம்.
‘‘அடிப்படையில், ஐ லவ் டான்ஸ். அதனால்தான், இந்த டான்ஸ் தெரபியைக் கேள்விப்பட்ட உடனே இதில் சேர்ந்துவிட்டேன். குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்தில் பணியாற்றுவதால் இந்த கோர்ஸ் எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். அங்கே சென்று ஏழைக் குழந்தைகளுக்கு இந்த தெரபி மூலம் சிகிச்சை அளிக்கப் போகிறேன்’’ என்கிறார் நம்பிக்கை பொங்க.
கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் இருந்து வந்திருக்கும் ஸ்வேதா, விஷுவல் ஆர்ட்ஸ் படித்தவர். ‘‘நான் எல்லாவிதமான கலைகளையும் விரும்புபவள். இது எனது பணிக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் என்பதால் கற்று வருகிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஐ ஃபீல் பெட்டர்’’ என்கிறார் உற்சாகமாக.

மனவியல் தொடர்பான இந்தப் படிப்புக்கு தொடக்கப் புள்ளியாக இருந்தவர், பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியின் சைக்காலஜி துறைத் தலைவர் வீணா ஈஸ்வரதாஸ். ‘‘இது புதிய வகை சைக்கோதெரபி. எங்கள் துறை மாணவிகளுக்கும் இந்த தெரபிகளை கற்றுத் தருகிறோம். சென்னையில் தனித்தனியாக இந்தத் தெரபிகளை கற்றுத் தர சென்டர்ஸ் இருக்கிறது. நாங்கள் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஒரே கோர்ஸாக கொடுத்திருக்கிறோம். அலுவலக பிரஷர் அதிகமுள்ள இந்தக் காலகட்டத்தில் நிச்சயம் இது பயனுள்ளதாக இருக்கும். இது ஆண், பெண் இருவரும் படிக்கும் கோர்ஸ்தான். ஆனால், பெரும்பாலும் பெண்கள்தான் வருகின்றனர். ஏனெனில், அவர்கள்தான் மனிதவளத் துறை, கவுன்சிலிங் பணி, தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் முன்னணியில் இருக்கிறார்கள்’’ என்கிறார் வீணா.
மருந்துக்குக் கூட டான்ஸ் வராதவர்கள் இந்த டான்ஸ் மருந்தை டிரை பண்ணலாமே!
- பேராச்சி கண்ணன்
படங்கள்: புதூர் சரவணன்