‘‘உலகத்திலேயே உச்சபட்ச வலி பிரசவம்தான். அதிகபட்ச சந்தோஷமும் அதுதான். எனக்கும் ‘தங்க மீன்கள்’ அப்படித்தான். ரொம்ப நல்ல படம் பண்ணியிருக்கேன்னு வேறு யாரும் சொல்றதுக்கு முன்னாடி எனக்கே தெரியுது. ‘கற்றது தமிழ்’ பார்த்துட்டு என்னை ‘கோபக்காரன்... கொஞ்சம் கொடூரமானவன்... சமூகத்திற்காக பொங்கி எழுவான்’னு சொன்னாங்க. ஆனால் நான் நிஜத்துல, எல்லா சமரசங்களும் பண்ணிக்கற சராசரி மனுஷன்தான்; புரட்சியாளன் இல்லை. மகளுக்காக எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு நிர்க்கதியாய் நின்ன ஒரு தகப்பனோட கதைதான் 'தங்க மீன்கள்' . ‘வாழ்க்கை என்பது இரண்டு இசைக்குறிப்புகளுக்கு இடைப்பட்ட மௌனம்’னு சொன்னார் ஓஷோ. அந்த மௌனத்தை படத்தில் நீங்க உணர முடியும்.’’

- மனதை வார்த்தைகளில் நிறுத்திப் பேசுகிறார் டைரக்டர் ராம். ‘கற்றது தமிழ்’ படத்தின் உன்னதப் படைப்பாளி.
‘‘தமிழ் கூறும் நல்லுலகம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டிய அவசியமென்ன?’’
‘‘நான் என் எல்லாப் படத்தையும் ஒரே ஒருத்தருக்குத்தான் எடுக்கிறேன். அது வேறு யாருமல்ல, நான்தான். நான் பார்க்கிறதுக்காக எடுத்ததுதான் ‘கற்றது தமிழ்’. நானும் என் மகளும் சேர்ந்து பார்க்கிறதுக்காக எடுத்த படம் ‘தங்க மீன்கள்’. எனக்கும், என் மகளுக்கும் பிடிச்சிருந்தா பெரும்பாலான அப்பா - மகளுக்குப் பிடிக்கும் என்பதுதான் லாஜிக். ‘தங்க மீன்கள்’ எடுக்கிறதுக்கு முன்னாடி இருந்த அப்பாவை விட, எடுத்த பிறகு நிறைய மாறியிருக்கேன். பொறுமைசாலியா, குழந்தைகளை இன்னும் நேசிக்க முடிகிறவனா, தன்மையானவனா மாறியிருக்கேன். பார்க்கும் அனைவரையும் உணர்வுபூர்வமாக தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ அவசியம் படம் பாதிக்கும். மனிதர்களை இன்னும் அன்பானவர்களா, கனிவானவர்களாக ஆக்கத் தூண்டும். நீங்க அப்பாவின் மகனாகவோ, மகளாகவோ இருந்தால், அல்லது உங்களுக்கு ஒரு மகனோ, மகளோ இருந்தால், இந்தப் படத்தைப் பார்த்தே ஆகணும். தப்பிக்கவே முடியாது. ஒருவேளை இந்த அமைப்பிற்குள் நிற்காதவர்கள் - அப்பா, மகள், குடும்பம் எதுவும் கிடையாது... குடும்பத்திற்கு எதிரானவன் என்றால் - தயவுசெய்து இந்தப் படத்தைப் பார்க்க வேண்டாம். இது அவர்களுக்கான படமும் அல்ல!’’

‘‘நீங்க நடிக்க ஆரம்பிச்சதும் நீங்களுமான்னு தோணுச்சு. இப்ப டிரெய்லர்களில் பார்த்தால் உயிர்ப்பா இருந்து, கன்வின்ஸ் பண்றீங்க...’’
‘‘ஆரம்பத்தில் அப்படித்தான் தோணும். எல்லோரும் சினிமாவில் மிக உயர்ந்த பதவியா நினைக்கிறது நடிக்கிறதைத்தான். ஆனால், எனக்கு உயர்ந்தது டைரக்ஷன்தான். ஒரு டைரக்டரால் நடிக்க முடியுமான்னு தெரியலை. ஒரு ரைட்டரால் நடிக்க முடியும். இன்னொருத்தர் எடுக்கிற படத்தில் நடிக்கிற திறமை எனக்கு கிடையாது. நானே எழுதி, நானே உணர்ந்ததில் என்னால் பெர்ஃபார்ம் பண்ண முடியும். பிரபலமான இயக்குநராக இருந்தால் கூட என்னால் நடிக்க முடியாது. அந்த டைரக்டர் அடைந்திருக்கும் புகழைக் கெடுத்துவிட என் மனசு சம்மதிக்காது.’’
‘‘இவ்வளவு மென்மைக்கும், பரிவுக்கும் ஏற்றபடி உலகம் இருக்கா?’’

‘‘இங்க எது நல்லா இருக்கு... சினிமா மட்டும் நல்லா இருக்க? மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மென்மை, துரோகம், வன்மம் எல்லாம் இருந்துக்கிட்டேதானே இருக்கு. கொஞ்சம் சதவீதம் கூடிக் குறைஞ்சு இருந்தால் நாமளே நல்லவன், கெட்டவன்னு பிரிச்சு சொல்லிடுறோம். விலங்காக இருந்தவனை நல்ல மனிதனாய் மாற்றும் முயற்சிகள்தான் இதுவரைக்கும் நடந்திருக்கு. நாகரிகம் என்ற பெயரில் நடந்த அந்த முயற்சிகள் சாகக் கூடிய இடம் அதி சீக்கிரமாகக் கூட இருக்கலாம். ஆனால், இதுக்குள்ள இந்த உலகை விட்டுச் செல்ல போதுமான காரணங்கள் இல்லைன்னு தான் தோணுது. இன்னும் மென்மையும், பிற மனிதர் சார்ந்த அக்கறையும் இருக்கத்தான் செய்யுது. நான் இப்படி நல்ல படம் செய்வதையும், அதை கௌதம் மேனன் படமாகத் தயாரிப்பதையும்கூட இதற்கான அடையாளமா சொல்லலாம். ’’
‘‘வழக்கமான சென்டிமென்ட்கள் இருக்குமோ?’’
‘‘இங்கே எதுவும் புதுசா வரலை. எல்லாத்துக்கும் முன்மாதிரி இருக்கு. எதுவும் தானா உருவாக முடியாது என்பதுதான் இந்த உலகத்தின் சட்டம். யாரும் சுயம்பு கிடையாது. படிச்சது, பார்த்தது, கேட்டது, உணர்ந்தது தான் படைப்பா வெளிவருது. சென்டிமென்ட் சினிமாவிற்கான வார்த்தையாப் போச்சு. இது கூட சென்டிமென்ட்தான். இந்தக் கதை, உறவு கூட பழையதுதான். ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாக, தமிழனாக காட்சிப்படுத்தியதுதான் புதுசு. நான் எப்படி உணர்ச்சிப் பிரவாகம் எடுக்கிறேன் என்பதைப் பொறுத்து இது புதுசா மாறும்!’’
‘‘உங்க படத்தில் இசைக்கு பெரிய இடம் இருக்குமே...’’

‘‘இதிலும் இருக்கு. ஒரே ஒரு புல்லாங்குழல் உறவின் அற்புதத்தைச் சொல்லிவிட முடியும். பின்னணி இசைக்கு முன்னாடி பார்த்ததை விட, பின்னாடி பார்க்கும்போது படம் இன்னொரு இடத்திற்கு போயிருக்கு. யுவனுக்கு கதை, திரைக்கதை, வசனம் தெரியுது. அமைதி, சப்தம் புரியுது. இயற்கை வசப்படுது. யுவன் டைரக்ட் செய்தால், தமிழின் முக்கியமான படத்தை அவர் கொடுத்துவிடலாம்னு படுது. ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என ஆரம்பித்து நா.முத்துக்குமார் எழுதிய பாடல் இந்த வருடத்தின் இசைக் கொடை. என் மனைவியாக வர்ற செல்லி, தியேட்டர் ஆர்டிஸ்ட். ஒல்லியா, பூஞ்சையா, பாவமா, ஆனாலும் அன்பா, அழகா எல்லார் வீட்டிலும் இருக்கிற பொண்ணாக இருந்து கண்ணியத்தோடு நடிப்பை வழங்கியிருக்கார். என் மகளா வருகிற சாதனா, வாழ்ந்திருக்கிறார். இத்தனை சிறு வயதில் உணர்ந்து நடிப்பது அபூர்வம்!’’
- நா.கதிர்வேலன்