சுகத்தில் இறைவனுக்கு சம்பந்தம் இல்லை. துக்கத்தில் இருக்கும்போது, உங்கள் இஷ்ட தெய்வம் யாரோ, அவர் உங்களுக்கு அதைத் தாங்கும் சக்தியை ரகசியமாகக் கொடுப்பார். இறைவன் கருணை வடிவானவர்; இதை மறந்துவிடாதீர்கள்.
- பாபா மொழி
சாயிக்கு சூரியனையும் சூரிய ஒளியையும் பார்ப்பதில் விருப்பம் அதிகம். சில சமயம் இரண்டு கண்களையும் அகல விரித்து, சூரியனை நேராகப் பார்ப்பார். ‘எப்படி இவரால் கண் இமைக்காமல் நேரே பார்க்க முடிகிறது’ என்று மக்கள் ஆச்சரியப்படுவார்கள்.
மசூதியில் இருந்தால், கிழிந்த துணிகளைக் கொண்டு திரி செய்வார். எண்ணெய் பாட்டிலை எடுத்துக்கொண்டுபோய் ஷீரடியில் உள்ள ஒவ்வொரு எண்ணெய் கடையிலும் எண்ணெய் கேட்பார். அவர்கள் இலவசமாக கொஞ்சம் கொஞ்சம் கொடுப்பார்கள். காரணம், சாயியிடம் பணம் இல்லை. இரவானதும் அகல் விளக்குகளில் எண்ணெய் விட்டு, திரியைப் பற்ற வைத்து, மசூதியைச் சுற்றி வைப்பார். அதன் பிரகாசம் பரவி, உற்சாகமான சூழல் அங்கு நிலவும். அப்பொழுது சாயி ஒருவித நிம்மதியோடு பஜனைப் பாடல்களைப் பாடுவார். சாயியின் குரல் மதுரமாக இருக்கும். பாட்டென்றால் பிடிக்கும். கூடியிருப்பவர்கள் கை தட்டித் தாளம் போட்டு அவரை உற்சாகப்படுத்துவார்கள்.
ஒரு சமயம் எல்லோரும் உட்கார்ந்திருந்தபோது, ‘‘சாயீ, இன்னும் 15 நாளில் தீபாவளி வருகிறது’’ என்று யாரோ ஒருவர் சொன்னார்.
‘‘ஆமாம்! தீபாவளி என்றால் எல்லா இடங்களிலும் தீபம் எரியணும். விளக்கினால் ஸ்வாமிக்கு ஆரத்தி எடுக்கணும். தீபாவளி என்பது பிரகாசத்தின் உற்சவம். வெளிச்சத்தின் விழா!’’ - உற்சாகத்தோடு சொன்ன சாயி, அடுத்து கட்டளை பிறப்பித்தார்.
‘‘மகல்சாபதி! இவ்வாண்டு தீபாவளியை நாம் பெரிதாகக் கொண்டாடுவோம்... யாராவது வாமன் தாத்யாவை அழைத்து வாருங்களப்பா!’’
ஒருவன் அவரை அழைத்து வர ஓடினான்.
‘‘தாத்யாவிடம் என்ன வேலை?’’ - மகல்சாபதி பிரசன்ன முகத்துடன் கேட்டார்.
‘‘தீபாவளி கொண்டாடணும் என்றால் அகல் விளக்கு வேண்டாமா? வாமன் தாத்யா அதைச் செய்வார்’’ என்று சொல்லி, சட்டென்று எழுந்து நின்றார். அனைவரும் எழுந்து நின்றார்கள்.
‘‘மகல்சாபதி, வெளியே வா... எங்கெங்கே விளக்கை வைக்கலாம்?’’
‘‘சாயீ... மசூதியில் வைத்தால் போதுமே! வெளியே வைத்தால் காற்றடித்து அணைந்துவிடும்’’ என்றார் மகல்சாபதி.
இதைக் கேட்டுப் பெரிதாகச் சிரித்தார் சாயி.
‘‘மகல்சாபதி, விளக்கை யாருக்கு ஆரத்தி காட்டுகிறோம்?’’
‘‘கடவுளுக்கு...’’
‘‘அது அணையக்கூடாது என்கிற கவலை யாருக்கு? கடவுளுக்குத்தானே! நாம் பாசத்துடன் உண்மையான பக்தியுடன் செய்தால், அவர் காற்றால்கூட விளக்கை அணைய விட மாட்டார்.’’
அதற்குள் வாமன் தாத்யா ஆஜரானார். சாயியை வணங்கியவர், ‘‘ஞாபகம் வைத்து என்னைக் கூப்பிட்டீர்கள், என்ன காரியம்?’’ என்றார்.
‘‘பெரிய வேலை ஒன்று செய்யணும்.’’
‘‘தங்கள் உத்தரவு!’’
‘‘மகல்சாபதி, இந்த தாத்யா எப்பொழுதும் மண்ணிலேயே இருக்கிறான் என்பதனால் எவ்வளவு பணிவு பார். காரணம், அவனுக்கே தெரியும். கடைசியில் மனிதன் மண்ணாகப் போகிறான்... பிறகு எதற்காக கர்வப்படணும்?’’ என்றவர் தாத்யாவைப் பார்த்து, ‘‘தாத்யா, இன்னும் 15 நாட்களில் தீபாவளி வருகிறது’’ என்றார்.
‘‘ஆமாம்.’’
‘‘மசூதியில் தீபோற்சவம் கொண்டாடணும். அதற்காக அகல் விளக்கு தேவை. நிறைய வேணும்!’’
‘‘எங்கெங்கே வைக்கப் போகிறீர்கள்?’’
‘‘மசூதியைச் சுற்றிலும் உள்ளேயும், வாசற்படியிலும், மேலும் மைதானம் முழுக்க வைக்கணும்.’’
தாத்யா திடுக்கிட்டார். எனினும், ‘‘சாயீ, என்னால் எவ்வளவு முடியுமோ அவற்றை எட்டு நாட்களில் செய்து வைக்கிறேன்’’ என்றார்.
‘‘சரி, நீ கிளம்பு. நாளை முதல் வேலையை ஆரம்பி. அது சரி, யார் எனக்குத் திரி செய்யக் கந்தல் துணி கொடுப்பீர்கள்?’’
‘‘நான்...’’
‘‘நான் கொடுக்கிறேன்!’’
‘‘நானும் கொடுக்கிறேன்!’’
‘‘சபாஷ்! பெண்களுக்கும் போய் விஷயத்தைச் சொல்லுங்கள். அவர்கள் திரி செய்வார்கள்’’ - சாயி உற்சாகத்துடன் சொன்னார்.
‘‘ஆண்டவா! இது உங்களுடைய வேலை. யார் முடியாது என்பார்கள்? இவ்வளவு விளக்கிற்கும் எண்ணெய் நிறைய வேண்டுமே... அதை எங்கிருந்து பெறலாம்?’’
‘‘இது என்ன கேள்வி? எண்ணெய் வியாபாரிகளிடமிருந்து தான். நான் தினமும் போய் வாங்கி வரவில்லையா? இங்குள்ள வியாபாரிகள் நல்லவர்கள். கொடுப்பார்கள் இனாமாக!’’
‘‘ஆனால் சாயி...’’
‘‘என்னப்பா?’’
‘‘இப்பொழுது கொஞ்சம்தான் இலவசமாகக் கொடுக்கிறார்கள். தீபாவளிக்கு எண்ணெய் நிறைய வேணுமே, கொடுப்பார்களா?’’
‘‘பார்க்கலாம். அந்தக் கவலை அல்லாவிற்கு!’’ - வானத்தைப் பார்த்துக் கையைத் தூக்கிச் சொன்னார்.
மறுநாளிலிருந்து ஜனங்களிடையே உற்சாகம் பரவியது. அவருடைய செய்கைக்கு எதிரும் புதிருமாகவும் சிலர் பேசலானார்கள்.
‘‘அந்த பக்கீர் விளக்கு ஏற்றுகிறானாம்... அவன்தான் முஸ்லிம் ஆச்சே’’ - குல்கர்னி சொன்னார். ‘‘இந்துக்களின் தீபாவளியை இவன் ஏன் கொண்டாடணும்?’’
‘‘வைத்தியரே, அவர் முஸ்லிம் என்று எப்படிச் சொல்வீர்கள்?’’
‘‘அதில் வேறு உனக்கு சந்தேகமா? மடையா! தாடி வளர்க்கிறான். உருது பேசுகிறான். குரானை மேற்கோள் காட்டுகிறான். அல்லா மாலிக் என்கிறான். மசூதியில் தங்குகிறான், இதெல்லாம் போதாதா? இவன் ஏன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடணும்?’’
‘‘ஆமாம்... நீங்கள் சொல்வது சரிதான்’’ என்றான் இன்னொருவன்.
‘‘நானும் இதையே பலமுறை சொல்லிவிட்டேன். மடச்சாம்பிராணிகளா! அவனோ பிச்சையெடுக்கும் ஒரு பரதேசிப் பயல்... எதற்காக அவனை ‘சாயி’ என்கிறீர்கள்? அந்தக் குதிரைவால் குடுமிக்கார மகல்சாபதிக்கு புத்தியே இல்லை. தலையில் களிமண்.’’
அவனுடைய வினோதப் பேச்சைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். கூட்டத்தில் வணிகர்களும் இருப்பதைப் பார்த்தார் குல்கர்னி. அவர்களிடையே விஷச் செய்தியைப் பரப்ப முனைப்பு கொண்டார்.
‘‘அடேய், தீபாவளி இந்துக்களின் பண்டிகை. அவனோ இளைஞன். இன்று இங்கிருப்பான்... நாளை வேறோர் இடத்திற்கு ஓடிப் போய்விடுவான். அவன் யார் நம் பண்டிகையைக் கொண்டாட? இது அவனுடைய கபட நாடகம்!’’ என்றார் குல்கர்னி.
‘‘எப்படி?’’
‘‘எல்லாம் இந்துக்களை சந்தோஷப்படுத்தத்தான்! இப்போது இந்துக்களில் கொஞ்சம் பேர்தான் அவன் பின்னால் சுற்றுகிறார்கள். இது இன்னும் பல இந்துக்களைக் கவரும் முயற்சி. அவருடைய பக்தர்களின் எண்ணிக்கை பெருகும். பிறகு ஒருநாள் அவர்கள் எல்லோரையும் சுலபமாக ஏமாற்றலாம்!’’
‘‘ஆனால்...’’ - முதிய விவசாயி ஒருவன் கேள்வி எழுப்பினான்.
‘‘என்னடா கிழவா? நீ வேறு என்ன சொல்லப் போகிறாய்?’’
‘‘சாயி இதுவரை யாரையும் ஏமாற்றவில்லை. மாறாக, அவருடைய ஆசீர்வாதத்தினால் எல்லோருக்கும் நன்மையே விளைகிறது. பின் ஏன், நீங்கள் அந்த இளைஞனைப் பற்றி இல்லாத பொல்லாததையெல்லாம் சொல்கிறீர்கள்?’’ - விவசாயி தைரியத்துடன் கேட்டான்.
‘‘டேய் விவசாயக் கழுதை... இளைஞனாடா அவன்? அயோக்கியத் திருடன்!’’
‘‘அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்!’’
‘‘அடேய், கோணங்கித் தலையா! அவன் கொள்ளையடிக்கவில்லை என்றா சொன்னாய்? வாமன் தாத்யாவிடம் தினமும் எவ்வளவு மண்குடம் வாங்கி உடைக்கிறான். அதற்குக் கொடுத்தானா பணம்? தவிர, இப்பொழுது அகல் விளக்கு நிறைய செய்து தரும்படி சொல்லியிருக்கிறான். இப்பவாவது பணம் கொடுப்பானா? தினமும் பிச்சை எடுத்துச் சாப்பிடுகிறான். இது கொள்ளையல்லாமல் வேறு என்ன? எத்தனை வருஷங்களாக இப்படி இலவசமாக இவ்வூரின் சோற்றை விழுங்கிக் கொண்டிருக்கிறான். தினமும் அகலுக்கு எண்ணெய் விடுகிறானே, அது எங்கிருந்து வந்தது? இங்குள்ள வணிகர்கள் எல்லாம் பெரிய தனவந்தர்களா... அவர்களிடம் வாங்குகிறான். அதற்குப் பணமா கொடுக்கிறான்?’’
‘‘சேச்சே! எங்கே பணம்? தினமும் வருகிறான். இலவசமாக எண்ணெய் வாங்கிக்கொண்டு போய்விடுகிறான்’’ - ஒரு வணிகன் சொன்னான்.
‘‘நீங்கள் எல்லோரும் கர்ண பரம்பரையினரல்லவா! போங்கள் போங்கள்... தான தர்மம் செய்து போண்டியாகி விடுங்கள். பிறகு தட்டை ஏந்திக்கொண்டு அவனுடன் போய் பிச்சை எடுங்கள். தீபாவளியாம்... ஹா... ஹா..! சரியான மூளைகெட்ட ஜனங்கள்...’’ - இப்படிப் பேசி அகன்றார் குல்கர்னி.
பின்பு மக்கள் தங்களிடையே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். நடுவில் அந்த விவசாயி சொன்னான், ‘‘இந்த குல்கர்னிதான் சரியான கபட வேஷதாரி. மாறாக சாயியைச் சொல்கிறான். அந்த சத்புருஷ மகானின் மதிப்பு இவனுக்கு எங்கே தெரியப்போகிறது?’’
எல்லோரும் சென்றுவிட்டார்கள்.
கூட்டத்திலிருந்த இரண்டு மூன்று வணிகர்கள் பேசாமல் போனார்கள். அவர்களில் தனபால் என்பவன், மெள்ள இரு வணிகர்களையும் அருகில் அழைத்து, ‘‘நாளை இரவு என் வீட்டுக்கு வாருங்கள். குல்கர்னி சொன்னதை யோசித்து ஒரு முடிவு எடுப்போம். இது நமக்குள் காதும் காதும் வைத்ததுபோல் இருக்கட்டும்’’ என்று ரகசியம் பேசினான்.
‘‘சரி... சரி..!’’ மற்ற இருவரும் தலையாட்டினார்கள்.
ஜனங்களிடையே சாயியைப் பற்றி நல்ல அபிப்ராயம்தான் இருந்தது. விரோத மனப்பான்மை இல்லை.
வாமன் தாத்யா உற்சாகத்துடன் விளக்குகள் தயாரிப்பதில் இறங்கினான். அவன் குடும்பமே அதில் ஈடுபட்டது. சாட்சாத் சாயியே தங்களுக்கு வேலை கொடுத்ததில் அவர்களுக்குப் பரம சந்தோஷம். பெண்கள் மசூதியில் கூடி, திரி செய்தார்கள். சாயியும் அவர்களுடன் வேலை செய்தார்.
மறுநாள் இரவு... எல்லா வணிகர்களும் தனபாலின் வீட்டில், ஓர் இருட்டான அறையில் கூடினார்கள். தாங்கள் பேசுவது யாருக்கும் கேட்கக் கூடாது என்பதற்காக கதவையும் மூடிவிட்டார்கள். காரணம், தனபாலின் மனைவி தீவிர சாயி பக்தை!
‘‘தீபாவளி நெருங்கிவிட்டது’’ - பேச்சை ஆரம்பித்தான் தனபால். ‘‘சாயி தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடணும் எனச் சொல்லியிருக்கிறார்.’’
‘‘ஆமாம்!’’
‘‘அந்த வாமன் தாத்யா, இரவு பகல் என்று பாராமல் எண்ணற்ற விளக்குகளைச் செய்து தள்ளிக்கொண்டிருக்கிறான்...’’
‘‘அவன் என் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறான். இவ்வளவு விளக்குகளைப் பார்க்கப் பார்க்க, என் மனசு படபடவென்று அடித்துக்கொள்கிறது...’’
‘‘ஆமாம்... அப்படித்தான் இருக்கும்! காரணம், இவ்வளவு விளக்குகளுக்கும் எண்ணெய் நம்மிடமிருந்துதானே சாயி வசூல் செய்யப் போகிறார், காலணா கொடுக்காமல்...’’
‘‘இவ்வளவு நாட்கள் நாம் எண்ணெய் இனாமாகக் கொடுத்தோம். கொஞ்சம்தான் கொடுக்கிறோம் என்றாலும், அது மொத்தமாகச் சேர்ந்தால் எவ்வளவு ஆகும்? இம்முறை அது நடக்காது...’’
‘‘இந்த தீபாவளிக்கு நாம் ஒரு சொட்டு எண்ணெய் கூட கொடுக்கக்கூடாது...’’
‘‘அப்படியே செய்வோம்...’’
‘‘ஆனால் அதற்கு அவரிடம் என்ன சொல்வது?’’
‘‘கடையில் எண்ணெயே இல்லை. தீபாவளிக்கு பட்சணங்கள் செய்வதற்காக மக்கள் எல்லாம் வாங்கிவிட்டதாகச் சொல்ல வேண்டும்!’’
‘‘இந்த யோசனை நன்றாக இருக்கிறது. ஆனால்...’’
‘‘என்ன சந்தேகம்?’’
‘‘அந்த சாயி ஒரு யோகி. பெரிய மகான். நாம் பொய் சொல்கிறோம் என்று அவருக்குத் தெரிந்து, தன் சக்தியினால் நம்மை ஏதேனும் செய்துவிட்டால்..?’’
இதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர்.
‘‘டேய், அந்த வைத்தியன் குல்கர்னி தினமும் சாயியைக் கண்டபடி திட்டுகிறான். அவனை சாயி ஒன்றும் செய்யவில்லையே? என்ன சக்தி, என்ன செய்வார்? நாமெல்லாம் ஒற்றுமையாகத் தீர்மானம் செய்துகொள்வோம். யாரும் ஒரு சொட்டு எண்ணெய் கொடுப்பதில்லை என உறுதி கொள்வோம். சரிதானே?’’
‘‘சரி...’’
கூட்டம் கலைந்தது.
(தொடரும்...)
படங்கள்: ராஜா
தமிழகத்தில் சாயி
அருள்வாக்கு தரும் அற்புத சாயி!
நாகை பஸ் ஸ்டாண்டிலிருந்து மூன்று கி.மீ தொலைவில், நாகூர் போகும் வழியிலுள்ள மகாலக்ஷ்மி நகர் அருகே அமைந்திருக்கிறது இந்த சாயி கோயில். இந்தக் கோயிலின் காரணகர்த்தாவான அமரபூபதி, இப்போது சாயிபாத மெய்யடிமை என்று தன் பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு சாயி அருள் இவரை ஆட்கொண்டிருக்கிறது.
‘‘எனக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை. சின்ன வயதில் அவ்வளவாக சாமி கும்பிட்டது கூட இல்லை. பிழைப்புக்காக சென்னையிலும் கொஞ்சநாள் சவுதியிலும் காலத்தை ஓட்டினேன். சவுதியில்தான் ஒரு நண்பர் மூலம் பாபா பற்றிய அறிமுகம் கிடைத்தது. அன்று முதல் சாயி எனக்குள்ளே தங்கியிருந்து என்னை வழிநடத்த ஆரம்பித்துவிட்டார். வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் அவர் சொற்படி முடிவெடுத்து, பல இன்னல்களைக் கடந்து வந்தேன். சொந்த ஊர் திரும்பியதும், பிரச்னையால் அல்லல்படும் எளிய மக்களுக்கு பாபாவின் அருள்வாக்குகளைச் சொல்லிவந்தேன். அந்தச் சேவையை ஒரு நிரந்தரமான இடத்தில் செய்ய நினைத்தபோது பாபாவே கை காட்டிய இடம்தான் இது’’ என்கிறார் அமர பூபதி... இல்லை இல்லை... சாயிபாத மெய்யடிமை.
2010ல் கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட்ட இந்தக் கோயில், காலை 5 முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 4.30 முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்களுக்காகத் திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: 98423 38684