மாற்றம் : கு.அருணாசலம்





இந்தாங்க, காபி!’’ - கொடுத்துவிட்டுச் சென்ற மனைவி சாந்தியை கவனித்துப் பார்த்தான் ராமன்.
‘கல்யாணத்தின்போது ஒல்லியான தேகம், வட்ட முகம், சங்குக் கழுத்து, துடி இடை, அன்ன நடை என்று தேவதை போல இருந்த என் மனைவி சாந்திதானா இவள்? நான்கே ஆண்டுகள்... ஒரு குழந்தை பிறந்து தாயான பின் இவளிடம்தான் எத்தனை மாற்றம்! பருத்த உடல், கனத்த முகம், உருண்ட கழுத்து என பீப்பாய் போல ஆகிவிட்டாளே! மீதிக் காலம் முழுவதும் இந்த குண்டு சாந்தி

யுடன்தான் வாழ வேண்டுமா?’
- அவ்வப்போது மனதில் தோன்றி மறையும் எண்ணங்கள் இப்போதும் பூதமாக அடிமனதிலிருந்து கிளம்பின. நினைக்கும்போதே அயர்ச்சியாக இருந்தது ராமனுக்கு!
காலிங் பெல் ஒலி அவனது நினைப்பைக் கலைத்தது.
கதவைத் திறந்தான். வாசலில் நின்றிருந்தது நண்பன் முரளி. மும்பையில் இருக்கிறான்.
‘‘ஹாய் முரளி! கல்யாணத்துல பார்த்தது... அதோட இப்போதான் வர்றே. மும்பையில இருந்து எப்போ வந்தே?’’
‘‘நேத்துதாண்டா. நீ என்னடா, கல்யாணத்தப்போ பார்த்ததுக்கு இப்போ ஆளே மாறிட்டே?’’ என்றான் முரளி.

‘‘மாறிட்டேனா... எப்படி?’’
‘‘கட்டான பாடி, கர்லிங் ஹேர்னு நம்ம செட்லயே ஹீரோ மாதிரி இருப்பே! இப்போ முன்வழுக்கை விழுந்து, தொப்பை போட்டு, ‘அங்கிள்’ மாதிரி ஆயிட்டியே!’’
மனைவி மட்டுமில்லை... தானும் மாறியிருப்பது அப்போதுதான் அவனுக்கு உறைத்தது!