‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ அந்த சம்பவம் கடந்த வாரம் நடந்தேறிவிட்டது. இந்தியாவின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சையின் பசியைப் போக்க கர்நாடகாவிலிருந்து வந்திறங்கியது அரிசி. தண்ணீர் தர மறுக்கிற கர்நாடகம், சிறிதும் குற்ற உணர்வு இல்லாமல் அந்தத் தண்ணீரைக் கொண்டு விவசாயம் செய்து அரிசியைத் தருகிறது. நம் தேவை நிறைந்து, வெளிமாநிலங்களின் பசியையும் தமிழகம் தீர்த்த காலம் மாறி, அண்டை மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு நம்மைத் தள்ளியிருக்கிறது காலம்.
தமிழக அரிசிச் சந்தையின் 60% ஆந்திர, கர்நாடக மாநிலங்களின் கையில்தான் இருக்கிறது. அம்மாநில வியாபாரிகளே விலையை நிர்ணயிக்கிறார்கள். பதுக்கி வைத்தும், செயற்கைத் தட்டுப்பாடு உருவாக்கியும், விலையை அதிகரித்தும் தமிழர்களின் பசியைப் பணமாக்குவதாக புகார் கூறும் உள்ளூர் வியாபாரிகள், கடந்த சில மாதங்களாக ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து அரிசி வரத்து குறைந்து விட்டதாகவும் குமுறுகிறார்கள்.
‘‘தமிழகத்துல ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்ததா படிக்கிறோம். கார் அரிசி, குண்டு சம்பா, சீரக சம்பா, செஞ்சம்பா, சம்பா மோஷனம், வெள்ளைப் பொன்னி, மடுமுழுங்கின்னு எனக்குத் தெரிஞ்சே பல அரிசி ரகங்களை வித்திருக்கேன். இன்னைக்கு அரிசி வாங்க வர்றவங்க ஆந்திர ‘சோனா மசூரி’ இருக்கா, ‘கர்நாடகப் பொன்னி’ இருக்கான்னுதான் கேட்கிறாங்க. இங்கே விளையுற அதிசயப் பொன்னியை யாரும் விரும்புறதில்லை. கர்நாடகா, ஆந்திரா இல்லேன்னா இன்னைக்கு நமக்கு அரிசியில்லை. செங்குன்றம், ஈரோடு, சேலம், திருச்சின்னு பல பகுதிகளுக்கு ஆந்திர, கர்நாடக சரக்குகள் வருது. அந்த வியாபாரிங்க சொல்றதுதான் விலை. லாரி வாடகை, ஏத்துக்கூலி, இறக்குக்கூலின்னு எல்லா செலவும் அரிசி தலையிலதான். திடீர் திடீர்னு லோடு அனுப்பறதை நிறுத்தி, தட்டுப்பாடான பிறகு விலை அதிகம் வச்சு ரிலீஸ் பண்ணுவாங்க.
இப்படி தரகர்கள் பண்ற அழும்பு ஒரு பக்கம் இருக்க, அந்த மாநில அரசுகளும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கிறாங்க. நம்ம ஊரைப்போல ஆந்திராவுலயும் கிலோ 2 ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறாங்க. வெளி மாநிலங்களுக்கு அரிசி, நெல் விற்கக்கூடாதுன்னு கட்டுப்பாடு விதிச்சு, மொத்த நெல்லையும் அவங்களே கொள்முதல் பண்ணிடுறாங்க. கர்நாடகாவுல போன சீசன்ல மழை சரியா இல்லே. அதனால அங்கேயே தட்டுப்பாடு. அதனால ‘வெளி மார்க்கெட்டுக்கு அனுப்பக்கூடாது’ன்னு சொல்லிட்டாங்க. அதனால தமிழகத்துக்கு வந்த நெல், அரிசி லோடு மூணுல ஒரு பகுதியா குறைஞ்சிடுச்சு. இதே நிலைமை நீடிச்சா தமிழ்நாட்டுல அரிசிப் பஞ்சம் வந்தாலும் வரும்’’ என்கிறார் மத்திய சென்னை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் மாரித்தங்கம்.
2007 முதல் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. 2011ல் அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. பாசுமதி மட்டுமின்றி, பிற அரிசிகளையும் ஏற்றுமதி செய்யலாம் என்று அறிவித்தபிறகு பெரும்பாலான கர்நாடக, ஆந்திர விவசாயிகளின் பார்வை ஏற்றுமதியின் பக்கம் திரும்பிவிட்டது.
‘‘ஆந்திராவிலிருந்து நாளொன்றுக்கு 300 லாரிகளில் நெல், அரிசி வந்து கொண்டிருந்தது. இப்போது 50 லாரிகள்தான் வருகின்றன’’ என்கிறார் செங்குன்றம் நெல், அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் கோபி. ‘‘அரிசி விலை உயர்வுக்கு பல காரணங்கள் உண்டு. வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் ஓரளவுக்கு தட்டுப்பாடு வருவதுண்டு. ஆனால், இந்த ஆண்டு ஜூலையிலேயே வரத்து குறைந்துள்ளது. வெளிமாநிலங்களை நம்பி தொழில் செய்வதால் அரிசி ஆலைகளுக்கு ஏகப்பட்ட நெருக்கடி. டீசல் விலை உயர்வால் போக்குவரத்துச் செலவு அதிகமாகிறது. ஊழியர்களின் கூலியும் அதிகரித்துவிட்டது. மின்தடை இருப்பதால் பெரும் முதலீட்டில் சோலார் பேனல் அமைக்க வேண்டியுள்ளது. உற்பத்திச் செலவு ஒன்றரை மடங்கு அதிகமாகிவிட்டது. தமிழகத்தில் விவசாயம் மீண்டும் தழைத்தால் மட்டுமே அரிசி விலை சீராகும். தட்டுப்பாடு நீங்கும்’’ என்கிறார் கோபி.

இக்கருத்தையே வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையனும் முன்வைக்கிறார். இந்தச்சூழலை பயன்படுத்தி வணிகத்துக்குத் தொடர்பில்லாத நபர்கள் அரிசி, நெல்லை வாங்கி பதுக்கி வைக்கும் வாய்ப்புகள் இருப்பதையும் வெள்ளையன் சுட்டிக்காட்டுகிறார். ‘‘ஆந்திரா, கர்நாடகாவில் தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் வரும் பட்டத்தில் விளைச்சல் நன்றாக இருக்கும். அதனால் இருப்பு வைக்கப்பட்ட நெல்லை ரிலீஸ் செய்கிறார்கள். எனவே படிப்படியாக விலை குறைய வாய்ப்பு உண்டு’’ என்கிறார் அவர்.
அரிசி விலை உயர்வால், தமிழகத்தில் விளையும் அதிசய பொன்னியை ‘கர்நாடகப் பொன்னி’ என கடைக்காரர்கள் விற்பதாக இல்லத்தரசிகள் கூறுகிறார்கள். கர்நாடகப் பொன்னி கிலோ 38 ரூபாய். அதிசய பொன்னி 31 ரூபாய். கர்நாடகத்தில் இருந்து அரிசி வரத்து குறைந்ததால், அதிசய பொன்னியை, கர்நாடகப் பொன்னி என்று பேக் செய்து சிலர் விற்கிறார்கள்.
அரிசிக்கு மாற்றாக புஞ்சை தானியங்களை முன்மொழிகிறார் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். ‘‘பொன்னி என்பது நம் மண்ணுக்கே உரித்தான ஒரு ரகம். இன்று ‘கர்நாடகப் பொன்னி’ ஆகிவிட்டது. இப்போது புஞ்சை தானியங்கள் மீது மக்களின் ஆர்வம் திரும்பியிருக்கிறது. இது நல்ல மாற்றம். தினை, சாமை, வரகு எல்லாம் 60 முதல் 80 நாட்களில் விளையக்கூடியவை. நெல்லுக்கான ஈரப்பதத்தில் 10ல் ஒரு பங்கு போதும். வாங்குவார் இல்லாததால், தானியம் விளைவித்த விவசாயிகள் அதைக் கைவிட்டு வேறு வேலைக்குப் போய்விட்டார்கள். அரிசித் தட்டுப்பாட்டைப் போக்க தானிய சாகுபடியை அதிகரிப்பதே வழி. அதையும் வெளிமாநிலங்களில் இருந்து இறக்காமல், உள்ளூர் விவசாயிகளை ஊக்கப்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும்’’ என்கிறார் நம்மாழ்வார்.
இதனால் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் நன்றாக மழை பொழிய வேண்டும் என்று உங்கள் விருப்பத்துக்குரிய சாமிகளை வேண்டிக்கொள்ளுங்கள். அப்போதுதான் நமக்கு சோறு கிடைக்கும்.
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்
மூடப்படும் அரிசி ஆலைகள்தமிழகத்தில் நெல் உற்பத்தி குறைந்து விட்டதால் அரவைப் பணிகளும் குறைந்து விட்டன. வெளிமாநிலங்களில் இருந்து பெரும்பாலும் அரிசியாகவே வந்துவிடுகிறது. லேபர் கூலி, மின்தடை உள்ளிட்ட பிரச்னைகளால் அரிசி அரவை ஆலைகள் மூடப்பட்டு வருகின்றன. சென்னை செங்குன்றத்தில் 120 ஆலைகள் உள்ளன. இவற்றில் பல இப்போது செயல்படவில்லை. நெல் காயவைத்துத் தரும் களங்கள் 300 இருந்தன. தற்போது 10 மட்டுமே செயல்படுகிறது. காரைக்குடி, ஈரோடு, திருச்சி வட்டாரங்களிலும் பல ஆலைகள் மூடப்பட்டு வருகின்றன.
ஏற்றுமதியில் முதலிடம்!இந்தியாவில் 42% பேர் அனைத்துலக வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பதாக உலக வங்கி கணக்கிட்டுள்ளது. இவர்களுக்கு ஒருவேளை உணவே கனவு. ஆனால் அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு பிரமாண்டமானது. 2011-12ம் ஆண்டில் பாசுமதி 30 லட்சம் டன்னும், பிற அரிசி ரகங்கள் 70 லட்சம் டன்னும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அரிசி ஏற்றுமதியில் ஆந்திராவே முதன்மை வகிக்கிறது.
ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் உலக மார்க்கெட்டைக் குறிவைத்து பல புதிய முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். அவ்விதம் உருவாக்கப்பட்ட ‘ஸ்டீம் அரிசி’க்கு உலகம் முழுவதும் பலத்த வரவேற்பு. இது பச்சரிசிக்கும், புழுங்கல் அரிசிக்கும் இடைப்பட்ட ரகம். நெல்லை ஊற வைத்து, அவித்து, காய வைத்து அரைத்தால் புழுங்கல் அரிசி. வெறும் நெல்லைக் காய வைத்து அரைத்தால் பச்சரிசி. நெல்லை ஊற வைக்காமல், அப்படியே நீராவியில் வேக வைத்து, காய வைத்து அரைத்து உருவாக்கப்படுவது ஸ்டீம் அரிசி. பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்த அரிசிக்கு ஏகப்பட்ட கிராக்கி. தமிழகத்திலும் இந்த அரிசி கணிசமாக விற்பனையாவதாகச் சொல்கிறார் சென்னை நெல் அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் துரைராஜ்.