சிபாரிசு : சுபாகர்

நண்பன் வாசுவை நினைத்தால் முத்துவுக்கு ஆத்திரம் பொங்கியது. முத்துவுக்கு தற்சமயம் வேலையில்லை. வாசு வேலை பார்க்கும் அலுவலகத்தில், ‘வேலைக்கு ஆள் தேவை’ என்று போர்டு மாட்டியிருந்ததைப் பார்த்தான். அந்த வேலைக்கு தன்னைச் சேர்த்து விடும்படி கேட்டான்.
‘‘சரி’’ என்ற வாசு, பிறகு கண்டுகொள்ளவே இல்லை. அதற்குள் வேறு யாரோ அங்கு வேலைக்கு சேர்ந்து விட்டார்கள். ‘ஒருவேளை நான் அவனை ஓவர்டேக் செய்து விடுவேன் என்கிற பொறாமையோ’ என கொதிப்பில் பொங்கியவன், இரண்டில் ஒன்று கேட்டு விடத்தான் வாசுவின் வீட்டுக்கே சென்றான்.
வாசலில் செருப்பை கழற்றிவிட்டு உள்ளே நுழைய யத்தனித்தவன், உள்ளே வாசு தன் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த சத்தம் கேட்டு நின்றான்.
‘‘முத்து என்னோட பால்ய நண்பன். அவன் வேலை விஷயத்தில் அக்கறையில்லாமல் இருப்பேனாம்மா... எங்க முதலாளி வேலையாட்கள் சின்ன தப்பு பண்ணிட்டா கூட, கடுமையான வார்த்தைகளால பேசுவாரு. அவன் என் முன்னாடி திட்டு வாங்கினாலும், நான் அவன் முன்னாடி திட்டு வாங்கினாலும் ரெண்டு பேருக்குமே சங்கடமாயிருக்கும். அதான் முத்துவுக்கு வேற இடத்தில் இதை விட நல்ல வேலைக்கு முயற்சி பண்ணிட்டிருக்கேன். இந்த வாரத்தில் கண்டிப்பா கிடைச்சிடும்’’ என்றான் வாசு. முத்து அவனிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டான்.
|