விருது : ஜெ.கண்ணன்

யுனிவர்சல் ஸ்டார் யுவனும், நீங்களும் சேர்ந்து நடிக்கிறா மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணியிருக்கேன். படம் நிச்சயம் நேஷனல் அவார்டு வரைக்கும் போகும் சார்... கேட்கறீங்களா..?’’ - இயக்குனர் சந்திரமௌலி இப்படிச் சொன்னவுடன் எவர்கிரீன் ஸ்டார் எழிலின் முகம் சுருங்கியது. இருபது வருடங்களாக கொடி கட்டிப் பறந்த எழிலை, மூன்றே வருடங்களில் முன்னணிக்கு வந்து மூலையில் உட்கார வைத்தவன் இந்த யுவன். ‘அவனோடு சேர்ந்து நடிப்பதா? சந்திரமௌலியை தவிர்க்கவும் முடியாது... முன்னணி இயக்குனர். கதையைக் கேட்டுவிட்டு ஏதாவது சொல்லி நிராகரித்து விடலாம்!’
வேண்டா வெறுப்பாகக் கதையைக் கேட்ட எழிலுக்கு, கிளைமாக்ஸ் மிகவும் பிடித்துப்போய் விட்டது. துரோகம் செய்துவிட்ட நண்பன் யுவனை எழில் அடித்து நொறுக்க வேண்டும்... இதுதான் அந்த கிளைமாக்ஸ்.
உடனே ஒப்புக்கொண்டான் எழில். ‘அடிக்கும் காட்சியில் அதிக டேக் வாங்கி, அந்த யுவனை ஒரு வழி செய்துவிட வேண்டும்’ என மனதுக்குள் நினைத்துக்கொண்டான். படம் வெளியாகி சக்கை போடு போட்டது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை யுவன் தட்டிச் சென்றான். தேசிய விருதுக்கு யுவனைத் தேர்வு செய்தது குறித்து தேர்வுக்குழுத் தலைவர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.
‘‘கிளைமாக்ஸில் யுவனின் நடிப்பு அருமை. நிஜமாகவே அடி வாங்குவது போல நடித்திருந்தார். அந்த ஒரு காட்சிக்காகவே அவரை விருதுக்குத் தேர்வு செய்திருக்கிறோம்.’’
|